
ஷிவாணி (வயது 30) ஓர் ஐடி ஊழியர். சமீபத்தில்தான் திருமணமானவர். வித விதமான செருப்புகளை அணிந்து கொண்டு தன்னை அழகு பார்த்துக் கொள்பவர். கோவிலுக்கு வெளியியே அவளுடைய கால் செருப்பை விட்டுப் போகும் போதெல்லாம் அவை தொலைந்து விடுகின்றன. கோவிலின் உள்ளே கடவுளை தரிசிக்கும் பொழுதும் அவளது கவனம் வெளியே உள்ள அவளுடைய புதுசெருப்பின் மீதே இருப்பதை அவளால் தவிர்க்க முடிவதில்லை.
இன்றும் கோவிலுக்குள் உள்ளே சுவாமி தரிசனம் செய்துக் கொண்டிருக்கும் அவளின் மனநிலை அப்படித்தான். அவளுடைய கணவன் பத்மநாபன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆழ்ந்து கடவுளை வேண்டிக் கொண்டிருந்தான்.
அனைத்து சன்னதிகளையும் தரிசித்து விட்டு கோவிலை வலம் வந்து அவர்கள் வெளியே வர வெகு நேரம் ஆகிவிட்டது. கோவிலுக்கு வெளியே விட்ட இடத்தில் தனது செருப்பு இருக்க வேண்டுமே? என்னும் நினைப்பில் கவலையுடன் செருப்பை நோக்கி விரைந்தாள் ஷிவாணி.