

குன்றுமலை காடுபோலத் தான் இருக்கும் அவளோட வீடு! பிறந்ததிலிருந்து அவங்க குடும்பம் அந்த இடத்துல தான் இருக்கு. அது அவங்களுக்கு பாட்டன் கொடுத்துட்டு போன சொத்துன்னு அடிக்கடி அவங்க அப்பா பெருமைப்படுவார். எப்பவுமே அவங்களுக்கு மார்கழி மாசம் தான். மலையை விட்டு கீழ இறங்கி போனால் தான் சூரிய பகவான் தரிசனம் கிடைக்கும். பத்துக்கு பத்து வீடு, பாழடைஞ்ச ஓட்டு வீடு, பக்கத்துல ஓடை, ஒத்தையடி பாத இப்படித்தான் இருக்கும். ஆனா என்ன ஒரு பிரச்சனை என்றால் அங்க ஒரு போன் கூட பேச முடியாது! போன் பேசுறதுக்கு கொஞ்சம் தள்ளி போயி அந்த மூங்கில் மரத்துகிட்ட நின்றாதான் மூணு பாயிண்ட் நெட்டு கிடைக்கும். ஆனாலும் என்ன செய்யுறது! பேசிக்கிட்டு இருக்கும்போது போன் கட் ஆயிரும்.
சன்னாசி மூணு வருஷத்துக்கு முன்னாடி வாங்குன அந்த பட்டன் போனைத் தான் ரெண்டு மூணு ரப்பர் பேண்டு போட்டு இன்னும் வச்சுக்கிட்டு இருக்கான். நாகமலைல இருக்குற அவனோட பெரியப்பாவிடம் எதையாவது அந்தப் பழைய போனில் பேசிக்கிட்டு இருப்பான். ஒன்னே ஒன்னு! கண்ணே கண்ணு! அவங்க வீட்டு செல்ல பிள்ளை நாகம்மாள். இந்த வருஷம் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.