

இன்று தனது எண்ணத்தை வெளிப்படுத்திவிடுவது என்ற முடிவோடு புறப்பட்டான் வைபவ். அந்த காலத்தில் பிரபலமாக இருந்த ஓஹோ புரொடக்ஷன்ஸ் சினிமா கம்பெனி போல தற்காலத்தில் பிரபலமாக விளங்கியது ஆஹாஓஹோ சாஃப்ட்வேர் கம்பெனி. இந்த கம்பெனியில் வேலை கிடைத்தால் கைநிறைய சம்பளம். கம்பெனி செலவிலேயே ரெண்டு வேளை சாப்பாடு. அவ்வப்போது ஸ்நாக்ஸ். இப்படி எல்லாம் தாராளமாய் கிடைக்கும். தினம் தினம் ஆயிரம் ஆயிரமாக செலவழித்தாலும் மாதக்கடைசியில் நிச்சயம் ஈஎம்ஐ கட்ட ஐம்பதாயிரம் மிஞ்சும்.
வைபவ் இந்த புகழ்பெற்ற கம்பெனியில் சீனியர் சாஃப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றிக் கொண்டிருந்தான். போரூருக்கும் கிண்டிக்கும் இடையில் இருந்த ஒரு ஊரில் பத்து மாடிக் கட்டடத்தில் ஏறத்தாழ ஆயிரம் சாஃப்ட்வேர் புலிகள் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.
அந்த ஆயிரத்தில் ஒருத்திதான் சொப்னா. வைபவ் இரண்டாவது மாடியில் ஒரு சிறிய கேபினில் பணியாற்றிக் கொண்டிருக்க சொப்னா மூன்றாவது மாடியில் மற்றொரு சிறிய கேபினில் code எழுதிக் கொண்டிருந்தாள். பணி நிமித்தமாக அவ்வப்போது சாட் மூலம் உரையாடிக் கொள்ளுவார்கள். சில சமயங்களில் இருவரும் நேரில் சந்தித்தும் கொள்ளுவார்கள்.
வைபவ்விற்கு சொப்னாவை ஏதோ சில காரணங்களுக்காகப் பிடித்திருந்தது. ஆனால், சொப்னா வைபவை காதலிக்கிறாளா என்று தெரியாது. ஜாலியாக வைபவ்விடம் பேசுவாள்.
'எத்தனை நாட்கள் இப்படியே பேசி காலத்தைக் கழிப்பது? இன்று அவளிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்து விட வேண்டும்' என்று முடிவு செய்திருந்தான் வைபவ்.