
சுற்றிலும் மலைகள்; ஆங்காங்கே சிறு சிறு ஓடைகளோடு ஒரு நதி; எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று கரும்பும் சோளமும் நெல்லுமாக இருக்கிறது... என்று சொல்லும்படியாக எதுவுமே இல்லாத அந்த ஊரில் நான்கு வழி நெடுஞ்சாலை மேட்டின் பக்கத்தில் ஒத்தையடியாக ஒரு பக்கம் குட்டையும் மறுபக்கம் இடுகாடும் என இருக்கும் அந்த வழியாகப் போய்க்கொண்டே இருந்தால் கடைசியாக எண்ணிவிடும் அளவுக்கு சில வீடுகள்.
அங்கு ஓர் வீட்டில்,
"ஏ எந்திரி, எந்திரி எவ்வளவு நேரம் தூங்கிட்டு இருப்ப சூரியன் வர்ற வரைக்கும் தூங்குறதெல்லாம் உருப்படவா போகுது?"
பழகிப்போன வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே பொறுமையாக ஆற அமர எழுந்தாள் விஜி.
"போய் தண்ணி போடு, போ சீக்கிரம் போ, பம்பு செட் ஆன் பண்ணு?" அவசரம் செய்தார் அப்பா.
"இந்த பாத்திரத்தை எல்லாம் கழுவிப் போடு வெரசா, ஆளுங்க எல்லாம் வந்துருவாங்க கள புடுங்க."