

'பயணிகளின் கனிவான கவனத்திற்கு... கோயமுத்தூர் சந்திப்பிலிருந்து சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் வரை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் வண்டி எண் 12676 இன்னும் சில நிமிடங்களில் தடம் எண் 1ல் வந்து சேரும்’ என்னும் அறிவிப்பாளரின் குரலைத் தொடர்ந்து அந்த ரயிலுக்காக காத்திருந்த மொத்த பயணிகளும் அவசர அவசரமாக கீழே வைத்திருந்த உடைமைகளை கையில் எடுத்துக் கொண்டும், சிலர் குழந்தைகள் கைகளைப் பிடித்துக் கொண்டும் தாங்கள் முன்பதிவு செய்திருந்த ரயில் பெட்டிகள் நிற்கும் இடத்தை நோக்கி விரைவாக நடக்கத் தொடங்கினர்.
ஒரு திருமணத்திற்காக சென்னைக்கு செல்லும் தன் மனைவியையும் இரு குழந்தைகளையும் ரயிலில் ஏற்றி விட வந்த ராகவன் அப்போது தான் தொலைவில் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த மூர்த்தியைக் கவனித்தான். இருவரும் ரயில்வே துறையில் தொழில்நுட்ப பிரிவில் சேலம் கோட்டத்தில் ஒன்றாக பணிபுரிந்து வந்தனர். மூர்த்தி ராகவனை விட பத்து வயது பெரியவர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருப்பினும் வேலை நேரங்கள் வேறு வேறாக இருப்பதால் இரண்டு, மூன்று நாட்களுக்கிடையே மட்டுமே சந்திக்க இயலும். அப்போதெல்தெல்லாம் துறை தொடர்பான மற்றும் பிற விஷயங்களையும் அலசுவார்கள்.