
அந்த டவுனிலேயே அந்தப் பள்ளிக்குத் தனி அந்தஸ்து! அதில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்தாலே தங்களுக்குப் பெருமை என்று அப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் நினைக்கும் நிலை. பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி. வாடகைக்குக் கேட்டு வருபவர்கள் எண்ணிக்கையும், சொந்தமாகவே வாங்கிக்கொள்கிறோம் என்று வருபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது. அந்த ஸ்கூலால் அந்த நகர்ப் பகுதியே பிரபலம் ஆகிக் கொண்டிருந்தது!
அன்றைக்கு அந்தப் பள்ளியில் இன்ஸ்பெக்ஷன். இன்ஸ்பெக்டர் கந்தன் அனுபவம் நிறைந்தவர். அன்பும், கனிவும் அதே சமயம் கண்டிப்பும் கொண்டவர். அவர் ஒரு பள்ளிக்கு ஆய்வுக்குச் செல்கிறார் என்றால் அவர் கண்ணிலிருந்து எதுவும் தப்பாது! நல்லது, கெட்டது எல்லாவற்றையும் சரியாக எடைபோட்டு விடுவார். நல்லதைப் போற்றியும், கெட்டதைத் தடுத்தும் ஆய்வுக் குறிப்புகளை எந்தப் பாரபட்சமும் இன்றி எழுதுவார். கடைசி மாணவனின் நியாயமான கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டுமென்பதில் குறியாக இருப்பவர். மாணவ, மாணவிகள் அவரிடம் குறைகள் ஏதும் இருப்பின், தனியாகச் சொல்லவும் சந்தர்ப்பம் கொடுப்பவர்.