

கதவு பலமாகத் தட்டப்பட்டது.
எழில் எரிச்சலுடன் எழுந்தான்.
அம்மா.
"என்னம்மா?"
"எல்லாரும் உனக்காகக் காத்திட்டு இருக்காங்க."
"எதுக்கு?"
"டைனிங்க் ஹால்ல எல்லாரும் இருக்காங்க."
"எனக்கு பசிக்கலம்மா."
"சாப்பிடாட்டியும் பரவால்ல.. உன்கிட்ட பேசணுமாம்."
"என்ன பேசணும்?"
"வந்து அப்பாகிட்ட கேளு."
"சரி. போம்மா. வர்றேன்."
"இல்ல.. திரும்பவும் கதவச் சாத்திடுவே."
கையைப் பிடித்து இழுத்தார்.
"சரி.. சரி.. வர்றேன்."
கீழே இறங்கி வந்தான்.
அப்பா, அண்ணா, அண்ணி, அக்கா, மாமா மற்றும் அம்மா.
அப்பா ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்.
அம்மா கைனகாலஜிஸ்ட்.
அண்ணா ந்யூராலஜிஸ்ட்.
அண்ணி டெர்மடாலஜிஸ்ட்.
அக்கா கைனகாலஜிஸ்ட்.
மாமா ஆர்த்தோ.
மருத்துவர்கள் மாநாடு போலிருந்தது.
அப்பா பார்வையாலே முறைத்தார்.
"என்னப்பா?"
"ரெடியாய்ட்டியா?"
தலைகுனிந்திருந்தான்.
"நிமிர்ந்து பதில் சொல்."
"என்ன சொல்லணும்?"
அண்ணா குறுக்கிட்டார்.
"டே.. அப்பா உனக்காக எவ்ளவு நேரமா காத்திட்டு இருக்கார். நீ என்னடான்னா அலட்சியமா என்னன்னு கேக்குறே?"
அமைதியாக இருந்தான்.
"எழில் உன் பிரச்னை என்ன?"
அக்கா மெல்லிய குரலில் கேட்டாள்.