
எனக்கு வயசு இருபத்துநாலு. எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போயிடிச்சு. நாமெல்லாம் ஏன்தான் வாழுறமோன்னு தோணுது. ஒரு சின்னப் பொண்ணு இப்படியெல்லாம் சொல்லலாமான்னு நீங்க கேப்பீங்க. வாழ்க்கை வெறுத்துப் போயிடிச்சுன்னு சொல்றதுக்கு இது சின்ன வயசுதான். ஆனா வாழத்தொடங்கிற வயசு தாண்டிக்கிட்டே போகுதில்லையா? நாளைக்கோ... மறுநாளோ... அடுத்த வருசமோ... எந்தவித மாறுதலுமே நம்மளோட வாழ்க்கையில வரப்போறதுக்குச் சான்சே இல்லைன்னு தெரியறப்போ இப்ப வாழுறதே வெறுப்பாயிடிச்சுன்னு சொல்லாம வேறெப்படிச் சொல்றதுங்க?
எப்படியெல்லாமோ வாழணும்னு கனவு கண்டேன். நான் மட்டுமா? அப்பா, அம்மா, மாமாமார், சித்திமார், சொந்தக்காரங்க எல்லாருமே ... எல்லாருமே எண்ணினது நாங்கெல்லாம்... நானும் என்னோட தங்கச்சியும் தம்பிமாரும் ஒசத்தியா வாழுவம்னுதான். சின்னப்பசங்களா நாங்கெல்லாம் இருக்கிறப்பவே எங்களையெல்லாம் டாக்டராவும், எஞ்சினியராவும், எதுக்குமே தர்க்கம்பண்ற என்னோட சின்னத்தம்பிய, அதாங்க மோகன வக்கீலாவும் வருவோமுன்னு சொந்தக்காரங்க எல்லாருமே சொல்லிக்கிட்டிருந்தாங்க.
சிலோன்ல மட்டக்களப்பு எங்களோட சொந்த ஊருங்க. அம்மா வசதியான குடும்பத்துப்பொண்ணு. அப்பாவுக்கும் நல்ல பணி. அப்பெல்லாம் மாசாமாசம் வர்ர சம்பளத்த விட ஒவ்வொரு வாரமும் அப்பா கட்டுக்கட்டா காசுகொண்டு வருவாராமுன்னு அம்மா அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பாங்க. ஊரிலேயே எங்க வீடுதான் பெரீய வீடு. என்னங்க நான் சிலோன்ல மட்டக்களப்பு எங்களோட ஊரென்னு சொல்றேன், ஆனா நான் பேசுறப்போ என்னோட தமிழ் வித்தியாசமாயிருக்கேன்னு பாக்கிறீங்களா?
எப்பவாச்சும் இருந்துட்டு கனடாவிலயோ, லண்டன்லயோ, இல்லாட்டிப்போனா சிலோன்லயோ இருந்து மெட்றாசுக்கு வர்ர எங்களோட சொந்தக்காரங்களும் அப்படித்தாங்க கேக்குறாங்க. ஆனா கனடாவிலேர்ந்தும், லண்டன்லருந்தும் வர்ர சின்னப்பசங்களவிட நாங்க பரவால்லீங்க. அவங்க சிலருக்கு எந்தத் தமிழும் புரியவே இல்லீங்க. பொறந்த நாட்டுத் தமிழும் அவங்களுக்குப் புரியல்ல, போன நாட்டுத் தமிழும் புரியல்ல. இங்க வந்ததினால எங்களோட தமிழ் இப்படியாகிப்போச்சு. என்னங்க பண்றது? வாழுற இடத்தோட வாசனைதானுங்களே வார்த்தையிலேயும் வரும். இல்லீங்களா?
எனக்கும் வயசு இருபத்திநாலு ஆகுது. எனக்கு ஏழு வயசிலேயே நாங்க மெட்ராசுக்கு வந்துட்டோமா, அதனால மெட்ராஸ் பாசையே பழகிடுச்சு. சிலோன் தமிழ் மறந்துடிச்சு. நீங்களே பாருங்களேன் இங்க வர்ரவங்க எல்லாம் சென்னைன்னுதான் சொல்றாங்க. ஆனா நாங்க மெட்ராஸ்ன்னுதான் சொல்றமுங்க. நாங்க என்னங்க? மெட்ராஸ்காரங்க எல்லாருமே அப்படித்தானே சொல்றாங்க. சென்னைன்னு யாருமே சொல்றதில்லீங்களே! சென்னை, சிங்காரச்சென்னை அப்பிடி இப்பிடின்னு எங்கையாச்சும் போஸ்டர்களில அப்பப்ப எழுதி ஒட்டியிருப்பாங்க அவ்வளவுதானுங்க.
ஏனுங்க, எத்தினியோ இலட்சம் தமிழ்க் கொழந்தைங்க இப்படித் தமிழே தெரியாம வெளிநாடுகள்ள இருக்காங்களாமே! கனடாவுல, பிரான்சில, ஜேர்மனியில, இங்கிலண்ட்ல, ஆஸ்திரேலியாவுல, நியூசிலாந்தில, சுவிஸ்ல, நோர்வேல, டென்மார்க்லண்ணு எத்தினியோ நாடுகள்ள தமிழே தெரியாம தழிழ்ப் புள்ளைங்க இருக்காங்களாமே! அப்பிடீன்னா, இன்னும் கொஞ்சக்காலத்தில அந்த ஊருகள்ள எல்லாம் தமிழே இல்லாமப் போயிடுமாங்க? அப்பிடிப் போயிடுச்சின்னா அவங்கெல்லாம் தமிழரே இல்லைன்னு ஆகிடுமாங்க?
சரி, என்னோட கதைக்கு வர்ரனுங்க. அம்மாவோட பொறந்தவங்க ஆம்பிளைங்க அஞ்சுபேர். பொம்புளைங்க நாலுபேர். அம்மாவோட பத்து. ஆமாங்க பெரிய குடும்பந்தானுங்க. என்னோட சின்ன மாமாவ ஒருநாள் போலிஸ் வந்து புடிச்சிட்டுப் பொயிடிச்சு, ஏதோ பசங்களோட மீட்டிங்கில இவரும் கலந்துக்கிட்டாராமுன்னு. ஆனா அடுத்த நாளே அவர ரிலீஸ் பண்ணிட்டாங்க.
அந்தநேரம் சிலோன்ல பெரீசா புறொப்ளம் ஒண்டுமில்லீங்க. அப்பதானாம் ஆரம்பக் காலமாம். ஆனா என்ன நடந்ததோ எனக்குத் தெரியலீங்க அம்மாவும், அப்பாவும் எங்களையும் கூட்டிக்கிட்டு இங்க வந்துற்றாங்க. அதுக்கப்புறம் அங்க பெரிய பிரச்னையெல்லாம் நடந்துச்சாம். அப்பப்ப கேள்விப்படுவம். எங்களோட வீடெல்லாம் எரிச்சிட்டாங்களாம். அம்மம்மாவும் இங்க வந்து எங்களோட சேர்ந்திட்டாங்க. கஷ்டப்பட்டுத்தான் வந்தாங்களாம். மாமாமார், சித்திமார் எல்லாரும் ஒண்ணொண்ணா கனடாவுக்குப் போய் அங்கயே செட்டிலாயிட்டாங்க. நாங்க மெட்ராஸ்காரங்களாயிட்டம்.
எனக்கெண்டா ஊருக்கு ஒரு வாட்டியாவது போய்ப் பார்க்கணுமுண்ணு சரியான ஆசை. எப்பிடிப் போறது? பாஸ்போட் வேணுமே. எங்களுக்கு அந்தப் பாஸ்போட்டுமில்ல. இந்தப் பாஸ்போட்டுமில்லீங்களே.
இங்க மெட்ராஸ்ல நாங்க சந்தோசமாத்தான் இருந்தம். ஆனா சும்மா இருக்கப் பிடிக்காத அப்பா கனடாவுக்குப் போனார். மாமாவங்க ஆசை காட்டி கூப்பிட்டாங்க. அத்தோட அவர் போனா எங்களையும் அப்புறமா அங்க எடுத்துக்கலாமேன்னுதான் அப்பா நெனைச்சாரு. எத்தினையோ வருசத்துக்கு அப்புறந்தான் அவருக்கு அங்க பேர்மனன்டா இருக்க பெர்மிசன் குடுத்தாங்க. அதுக்கப்புறமா மூணு வருசத்துக்கு முன்னாடி அம்மாவும் கனடாவுக்குப் போயிட்டாங்க. நாங்க உடனே போக முடியாதாம். அதுக்கு ஸ்பொன்சர் பண்ணணுமாம். பண்ணியாயிடிச்சுன்னு ஒருநாள் அப்பா சொன்னார்.
கனடா போகப்போறமெண்ட ஆசையில நாங்க இருந்தோம். எங்களோட பிரண்டஸ், பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாருக்கிட்டயும் நாங்க கனடாவுக்குப் போகப் போறோமுன்னு சந்தோசமாச் சொல்லிக்கிட்டேயிருந்தோம். ஒரு நாள் திடீர்ன்னு அம்மா போன்ல அழுதா. அப்பா செத்துட்டாராம். எல்லாமே முடிஞ்சுபோயிடிச்சு. அப்பா எங்கமேல உயிரையே வச்சிருந்தார். இப்ப அவரோட உசிரே போயிடுச்சு. என்னால தாங்கிக்கவே முடியல.
அப்பா செத்த அப்புறமும் அம்மா இங்க வரவேயில்ல. அங்கேயே தங்கிட்டாங்க. மாமாவங்க எல்லாரும் அங்க இருக்கிறாங்கல்லியா... அவங்க சொல்றாங்களாம்... அம்மா கனடாவ விட்டு இப்ப வந்தா அந்த நாட்டு சிட்டிசன் குடுக்கமாட்டாங்களாம். சிட்டிசன் எடுத்ததுக்கு அப்புறம் வருவாளாம். அதுக்கு இன்னும் எத்தின வருசமாகும்? யாருக்குமே தெரியல. எனக்கு எதுவுமே புரியலீங்க. என்னன்னவோ எல்லாம் சொல்லிக்கிட்டேயிருக்காங்க.
நான் இங்க காலேஜ் டிகிறி முடிச்சிட்டேன். ஜொப் எடுக்கலாமுன்னா உங்களுக்கு இங்க இருக்கிறத்துக்கு விசா இருக்காங்கிறாங்க. சிலோனுக்கே திரும்பிப் போகலாமுன்னா, அங்க இன்னும் பிரச்னை முடியல்லியாம். புதுசு புதுசாப் பிரச்னை வந்துக்கிட்டேயிருக்குதாம். அப்படி இல்லைன்னாலும் அங்க போனா எங்களுக்கு அங்க யாருமே இல்லீங்களே.
தினம் தினம் காலைல எழும்புறதும் டீவி பாக்கிறதும் சமைக்கிறதும் சாப்பிடுறதும் அப்புறம் இரவானாப் படுத்துத் தூங்கிறதும் இப்பிடியே காலம் ஓடிக்கிட்டிருக்கு. சொந்த நாட்டுக்கும் போக முடியல்ல. வந்த நாட்டிலயும் வாழமுடியல்ல. அம்மாவும் மாமாக்களும் இருக்கிற அந்த நாட்டுக்கும் எங்கள எடுக்க முடியல்ல. எத்தனையோ மாமாமாருங்களும் அத்தைமாருங்களும் இருந்தும் யாருமே எங்களோட எதிர்காலத்தைப்பற்றி எண்ணிப்பாக்கல. அதுக்கெல்லாம் அவங்களுக்கு மனசு இருக்குதோ இல்லையோ... நேரம் இல்ல.
அப்பாவும் உயிரோட இல்ல. அம்மாவும் எங்களோட இல்ல. அம்மாவுக்கு கனடா சிட்டிசன் எங்களைவிடப் பெரிசாயிடுச்சு. அவங்களுக்கு அது கிடைச்சா எங்களோட வாழ்க்கை நல்லாயிடும்னு அம்மா நினைக்கிறா. அவளாலயும் எந்த முடிவும் எடுக்க முடியல்ல. வாழுற வயசு போனப்புறம் அது கிடைச்சென்ன கிடைக்காட்டியென்னங்க? அதனாலதானுங்க எனக்கு வாழவே பிடிக்கல. வாழ்க்கையே வெறுத்துப் போயிடிச்சு! இப்ப ஒத்துக்கிறீங்களா... எனக்கு, எனக்கு மட்டுமில்லீங்க... என்னையப்போல எத்தனையோ ஆயிரம் இலங்கைத் தமிழ்ப் பசங்களுக்கும், பொண்ணுங்களுக்கும் எங்கபோறதுன்னு தெரியாம, என்ன செய்யுறதுன்னும் தெரியாம வாழ்க்கையே வெறுத்துப்போயி, திசையே தெரியாம லைவ் ஓடிக்கிட்டிருக்குண்ணு?
சரிங்க டைம் இப்ப எட்டாயிடுச்சி. டீவியில டெலி ட்றாமா மெகாதொடர் ஒண்ணு பாக்கணுங்க. இங்க வேறென்னதான் செய்யுறதுங்க?