
நீங்கள் என்றாவது உங்கள் மாணவப்பருவத்தில் வகுப்பிற்கு முன் முழங்காலில் நின்றிருக்கிறீர்களா? அதுதான் முட்டுக்கால் போடுவது என்பார்களே...
‘இல்லை’ என்பீர்கள். நீங்கள்தான் என்றும் வகுப்பில் முதலாவதாக வந்தவராயிற்றே!
அது சரி, கேட்பவர் எல்லாம் 'நான் வகுப்பில் முதலாவது', 'நான் இரண்டாவது' என்கிறீர்களே தவிர 'நான் இருபத்திமூன்று,' என்று சொல்வதில்லையே? கடைசி ரேங்கு மாணாக்கர்களுக்கு என்னதான் நடந்திருக்கும் என நான் எண்ணுவதுண்டு. எங்குதான் சென்று தொலைந்தனரோ? ஒரு வேளை வேற்று கிரகத்து மனிதர்கள் வந்து இவர்களை மூளைச் சலவை செய்ய தொலைதூர கிரகங்களுக்கு கடத்திச் சென்றுவிட்டனரோ?
அதனால் என்ன, இதை வாசிக்க நீங்களாவது இருக்கிறீர்களே, அதுவே போதும்!
சரி, விட்ட இடத்தில் இருந்து தொடங்குவோம்.
நான் வகுப்பிற்கு முன் முட்டுக்கால் போட்டு இருக்கிறேன். முழு மூன்றாம் வகுப்புமே என் மேல் குத்திட்ட கண்களை ஆசிரியர் பக்கம் திருப்பி இப்போது பாடம் கேட்டுக்கொண்டிருக்கின்றது. எமது கணித ஆசிரியர் குருமாணிக்கம் சார் கையில் பிரம்புடன் கணித வாய்ப்பாடுகள் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார். வகுப்பு பன்னிரெண்டாம் வாய்ப்பாட்டை உச்சத்தொனியில் ஒரு கோரஸாக பாடிக்கொண்டிருக்கிறது.