
லிங்கசாமிக்கு அறுபத்து இரண்டு வயது ஆகிறது. நினைவு தெரிந்த நாள்முதலாக அவன் பன்றிகளைத்தான் மேய்த்துக்கொண்டிருந்தான். அதைத் தவிர அவ்வப்போது கூடை முடைகின்ற வேலையும் செய்துவந்தான். அவன் முடைந்த கூடைகளை அவனது மனைவி கருப்பி ஊருக்குள் எடுத்துச் சென்று விற்றுவிட்டு வருவாள். சிலர் லிங்கசாமியின் வீட்டிற்கே வந்து கூடைகளை வாங்கிக்கொண்டும் செல்வர். எக்காரணத்தைக் கொண்டும் லிங்குசாமி மட்டும் ஊருக்குள் செல்லவே மாட்டான். இந்த அறுபத்து இரண்டு வருடங்களில் ஒரு முப்பதுமுறை அவன் ஊருக்குள் சென்று வந்திருந்தால் அதுவே பெரிய விஷயம்.
ஊரின் கிழக்குப்புறத்தில் அவனது வீடும் அவனைப் போன்ற சிலரது வீடுகளும் அமைந்திருந்தன. அவனிடம் ஒரு ஆண்பன்றி, இரண்டு பெண்பன்றிகள் மற்றும் பதினோரு குட்டிப் பன்றிகள் என மொத்தம் பதினான்கு பன்றிகள் இருந்தன. அவனது வீடு மண் சுவரின்மேல் கூரை வேயப்பட்ட ஒரு சிறிய வீடு. வாசல் கிழக்குப் பார்த்து இருந்தது. வீட்டிற்குத் தென்புறத்தில் ஒரு குடிசை அமைத்து லிங்கசாமி தனது ஒரே மகன் கந்தனை அதில் குடிவைத்திருந்தான்.