
"குருநாத (முழுப்பெயர் சிவகுருநாதன்) வாத்தியார் மட்டுமல்ல, அவரின் வம்சமே இரண்டு மூன்று தலைமுறைகளாக ஆசிரியர் தொழிலையே குலத் தொழிலாக்கி விட்டனர்" என்று ஊர் பேசும் அளவுக்கு, தொடர்ந்து ஆசிரியராகவே இருந்து வருகின்றனர். அந்தக் காலத்தில் ஊரில் தனக்கிருந்த மையமான இடத்தில் தனது சொந்த செலவில் பள்ளிக்கூடம் கட்டி, ஊர்ப் பிள்ளைகளுக்குக் கல்வி போதித்தார்!
அப்பொழுதே அவர் பங்காளி, அந்த இடத்தைக் கடை வைக்கக் கேட்டும், கடையைக் காட்டிலும் கல்விக்கே முதலிடம் என்று துணிந்து பள்ளியைக் கட்டினார்! அப்பொழுது ஆரம்பித்த பகைதான்! அதுவும் தலைமுறை, தலைமுறையாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது! குருநாத வாத்தியார் பையன் நடராஜனும், அவர் பையன் சிவகுமாரும் கூட ஆசிரியப்பணியையே விரும்பிச் செய்து வருகிறார்கள்! அவர் பங்காளி பரமசிவம், வேறு இடத்தில் கடை வைத்து நிறையச் சம்பாதித்து, பிசினசைப் பெருக்குவதற்காகச் சென்னையிலும் வீடு வாங்கினார். பேரனை வக்கீலுக்குப் படிக்க வைத்து ஐகோர்ட் வக்கீல் ஆக்கி விட்டு, அவர் போய்ச் சேர்ந்து விட்டார். அவர் போய் விட்டாலும் பங்காளிச் சண்டையைப் பேரன் காதிலும் ஊதி விட்டுத்தான் சென்றார். பேரன் வக்கீலாயிற்றே! சும்மா இருப்பானா?