
பழைய பிளாஸ்க்கில் காபி கொணர்ந்த வேலுவை பார்த்து சிரித்த சிதம்பரம், (64) "வேலு நாங்க எல்லாரும் காபி குடிச்சாச்சி, அதுவும் நல்ல காபி. பத்மா மாமி சூப்பரா போட்டு கொடுத்த காபி."
"ஆமா பத்மா புண்ணியத்துக்கு காபி போட்டு கொடுத்தா நீ பாவத்துக்கு அவள போட்டு கொடு சிதம்பரம்" மூர்த்தி, (68) குரல் கொடுத்தார்.
வேலு, "என்ன மூர்த்தி சார், நா யார்ட்ட போய் இத சொல்லப்போறேன். உங்க கஷ்டமெல்லாம் எனக்கு தெரியாதா. என்னால தான் நல்ல காபி உங்களுக்கு கொடுக்க முடியல. குடுக்குற மாமிய நான் ஏன் தடுக்க போறேன். இத போய் அந்த கடன்கார manager கிட்ட சொல்வானேன். மாட்டேன்."
"சும்மா கிண்டலுக்கு சொன்னேன் வேலு நல்ல காபி மூளையை சுறுசுறுப்பாகி விட்டது..." நாலு பற்கள் இல்லாத ஒரு சிரிப்பு சிரித்தார்.
இவர்கள் எல்லோரும் மகன், மருமகள், மகள், மருமகன் மற்றும் உறவினர்களால் பார்த்து கொள்ள முடியாமையால் இறக்கி விடப்பட்ட பாரங்கள். தரிசாக போய் விட்ட தெரசா முதியோர் இல்லத்து inmateகள். 120 பக்கங்கள் கொண்ட விசிட்டர்ஸ் பேரேட்டில் 20 பக்கங்கள் கூட இன்னும் நிறைய பெறாத ஒரு முதியோர் இல்லமது.
வேலு "பத்மாம்மா, கை நடுக்கம் வராத வரைக்கும் நீங்க காபி போடலாம். அப்புறம் இந்த பிளாஸ்க் காபி தான்…. சொல்லிட்டேன். ஞாபக மறதி கூட பரவாயில்லே. ஏன்னா ஒருத்தர் இல்லனா ஒருத்தர் காஸ் ஆப் பண்ணாததை பார்த்து ஆப் பண்ணிடுவாங்க."