

மோட்டார் சைக்கிளை நிறுத்தி, சிணுங்கிய மொபைலை எடுத்து "சொல்லு மதன். வந்து கொண்டிருக்கிறேன்" என்றதும், "இப்போது எந்த இடத்தில் இருக்கிறாய்?" என்று கேட்டவனிடம் "மெயின் ரோட்டில் மூர்த்தி மெடிக்கல் ஷாப் முன்னால் நிற்கிறேன். மருந்து வாங்கிக்கொண்டு அரைமணி நேரத்தில் வந்து விடுவேன்" என்றான் கதிர்வேல்.
"என்ன கதிர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். மருந்துக் கடையில் நிற்கிறேன் என்கிறாயே. எப்போதும் லேட் என்பது உனக்கு வழக்கமாகி விட்டது. சரி சரி சீக்கிரம் வா. ஜேம்ஸ், வெங்கட், கோமதிநாயகம், கைலாஷ், பாக்கியராஜ் வந்துகொண்டிருக்கிறார்கள்" என்றான் மதன்.
"ஓகே. ஓகே." என்று கூறிவிட்டு மருந்து கடைக்குள் சென்று டாக்டர் சீட்டைக் கொடுத்து, "எல்லா மருந்துகளும் இருக்கிறதா?" என்று கேட்டதும், "சார் எங்களிடம் அனைத்து மருந்துகளும் கிடைக்கும். 24 மணி நேரமும் கடை திறந்திருக்கும். சுற்று வட்டாரத்தில் பெரும்பான்மை மக்கள் எங்கள் வாடிக்கையாளர்களே. டோர் டெலிவரியும் உண்டு. நீங்கள் சென்னைக்கு புதியவர் போலும் அதனால்தான் எங்களைப் பற்றி சரியாக தெரியவில்லை," என்று சுய புராணம் கூறி போரடித்தவாறே மாத்திரைகளை எடுத்து வைத்தார்.