
தஞ்சை ரயில்வே ஜங்ஷன்!
சென்னை ரயிலுக்கு இன்னும் நேரமிருந்ததால் நடைமேடை காலியாகவே கிடந்தது.
ரவியின் மனதுக்குள் அப்பாவின் மீதும் அந்த அரசியல்வாதி மீதும் டன் கணக்கில் கோபம் இருந்தது. டாக்டரேட் வாங்கி விட்ட அவனால் அவர்கள் வலையிலிருந்து வெளியே வர வழி தெரியவில்லை.
ம்! நாட்டு நடப்பு இப்போதெல்லாம் அப்படித்தானே இருக்கிறது. அந்த அரசியல்வாதி மெல்ல மெல்ல முன்னேற அப்பாவின் கடின உழைப்பும் ஒரு காரணம்.
ஆனாலும் அவனுக்கு வேலை என்று வந்தபோது, மார்க்கட் ரேட்டை அந்த அரசியல்வாதி சொல்லி, ஒன்றிரண்டை வேண்டுமானால் குறைத்துக் கொள்ளச் சொல்லி கூற, இருந்த இரண்டு ஏக்கர் நிலமும் கையை விட்டுப் போயிற்று. அந்த இன்டர்வியூவில் கலந்து கொள்ளத்தான் சென்னை செல்கிறான் ரவி!
கையிலிருந்த ப்ரீப் கேசை கீழே வைத்தவன், நடைமேடையிலிருந்த ஷாப்பில் சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்தான்.
திரும்பியவன் அதிர்ந்தான்.
ப்ரீப் கேசைக் காணவில்லை!