

'அறைகளின் ஜன்னல் கதவுகள் ஏன் மூடி இருக்கிறது? கதவை மூடினால் காற்று எப்படி வரும்?' அந்த கேள்வி தோன்றிய அந்த கணமே வேகமாக போய் ஜன்னலை கதவை திறந்து வைத்தேன்.
நாள் முழுதும் காற்று நன்றாக ஜிலு ஜிலுவென்று வரும். அதற்கு காரணம் எங்கள் ஜன்னலை, ஒட்டிய ஒரு வேப்பமரம். ஜன்னல் வழியாகவோ அல்லது பால்கனியில் நின்று கொண்டோ, இந்த வேப்பமரத்தை பார்த்துக் கொண்டே இருப்பது, எனது முக்கிய இனிமையான பொழுதுபோக்கு. ஒரு உற்ற நண்பனுக்கு சொல்வது போல காலை வணக்கம், மாலை வணக்கம் கூட சொல்லுவேன்.
சில நாட்கள், அதிகமாக இலைகள், வளர்ந்து பசுமை கொண்டு விளங்கும். ஏதோ பொக்கிஷம் கிடைத்தது போல, குழந்தையின் வளர்ச்சியை போல ஒரு மகிழ்ச்சியை தரும். அது மட்டுமல்ல, அந்த மரம் அணில்களும், காக்கைகளும் குடியிருக்கும் வீடாகும். மரத்தில் குதித்து விளையாடும் அணில்கள், குடும்பத்தோடு என் பால்கனியில் தாவி வரும்.
சில நேரங்களில் வீட்டுக்குள் நுழைந்து, பின்னர் வெளியில் போக வழியின்றி விழித்தும் போனது உண்டு. மெதுவாகக் கொண்டுபோய் மரத்தில் சேர்ப்பதும் என் பணி.
ஜன்னல் வழியே அவைகளை தினம் பார்த்து ரசித்துக் கொண்டே இருப்பேன். வேப்பமரம், ஏறக்குறைய எங்கள் ஜன்னலை மட்டுமின்றி, எங்கள் பகுதி முழுவதையும் வெயிலும் வெப்பமும் தெரியாத அளவுக்கு அதன் கிளைகளை வியாபித்திருந்தது. இப்படி சிட்டியில் இருக்கும் எந்த பிளாட்டுகளுக்கும் கிடைக்காத, எங்களுக்கு மட்டுமே கிடைத்த ஒரு வரம் இந்த மரங்கள்.
அந்த வேப்பமரம், எங்கள் ஜன்னலை மட்டும் அல்ல, முழு பகுதியையே தன்னுள் மூடியிருந்தது. சிட்டி மக்கள் மார்ச்சிலேயே ஏசி போட துவங்கினாலும், நாங்கள் ஏப்ரல் 20 வரை ஜிலு ஜில்லுவென்ற இயற்கை காற்றோடு வாழ்ந்தோம். இருபத்து நான்கு தென்னை மரங்கள், இரண்டு மாமரங்கள், ஒரு வாதநாராயணன், பவழமல்லி செடிகள், இந்த ஒரு வேப்ப மரம், என்று எங்கள் வீட்டுக்கு அருகே ஒரு தனி பூங்கா போலவே...
ஜிலுஜிலு காற்று மட்டுமல்லாமல், சிட்டி முழுக்க தண்ணீர் லாரிகள் குறுக்கும் நெடுக்கும் ஓடி கொண்டிருக்கும், சுட்டெரிக்கும் காலக்கட்டத்திலுமே, நிலத்தடி நீரை குறையாமல் பார்த்துக் கொள்ளும் கற்பக விருட்சம் ஆகும் எங்கள் மரங்கள்.
சில நாட்களில் மாற்றம் ஆரம்பமானது.
பக்கத்து காலிப் பிளாட்டில் வீடு கட்டப்போகிறார்கள். ஒரு நாள் பிளாட்டின் உரிமையாளர் வீட்டுக்குள் வந்து, “உங்க வேப்பமரமும், தென்னைமரமும் எங்க பக்கம் சாயுது. வெட்டணும். அனுமதி குடுங்க,” என்றார்.
“மரம் வெட்ட முடியாது. சட்டப்படி கூட இது தவறு. கிளைகளை வெட்டிக்கலாம். தென்னைமரத்தையும். வேப்ப மரத்தையும் வெட்ட கூடாது வெட்டவும் முடியாது,” என்று உறுதியாக சொன்னேன். “கிளைய மட்டும் வேணுமானாலும் வெட்டிட்டு போங்க. மரத்தை வெட்டக்கூடாது”
“கிளைய மட்டும் வெட்டணுமா! பின்ன வேரு வந்து எங்க கட்டடம் விரிசல் விடாதா?"
"மரத்தை வெட்டினால் இந்த பகுதி கீழ தண்ணீர் மட்டம் குறைஞ்சு போய்டும் தெரியுமில்ல!!"
"இவ்ளோ பெரிய கட்டடம் கட்டற எங்களுக்கு தண்ணி பிரச்னையை சமாளிக்க தெரியும் “ என்றார் கோபமாக.
என் கண் முன்னே அணில்களும், காக்கைகளும் ஊடாடியதை நினைத்து பார்த்தேன். வாக்குவாதம் நீண்டது. எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு பத்து நாள் கால அவகாசம் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டார், அடுத்த பிளாட் உரிமையாளர்.
அடுத்த பத்து நாட்களும் எதிர்பார்ப்போடு சென்றன. ஆனால், எதுவும் நடக்கவில்லை. மறுநாள் வக்கீல்கள், ஆட்கள், பில்டர் என அனைவரும் வந்தார்கள். ஒரு சட்ட ஆவணத்தை காட்டியபடி மரங்களை வெட்டத் தொடங்கினார்கள்.
எனக்குள் சத்தமின்றி என்னை யாரோ வெட்டும் உணர்வோடு நின்றேன்.
மரங்கள் அழிக்கப்பட்டன. வெறும் இரண்டு மாதங்களில் மூன்று மாடி கட்டடங்கள் எழுந்தன. புதிய வீடுகள். புதிய ஏசி இயந்திரங்கள். மொட்டை மாடி தோட்டம் புதிய குடியிருப்பாளர்கள், என் கண்ணில் தென்பட, என் ஜன்னல் வழியே வீசிய காற்றும், அணில்களும் பறவைகளும் மட்டும் இல்லை.
அறையின் ஜன்னலைத் திறந்தால் ஏக்கப்பட்ட வெளிச்சம். ஆனால், மரமில்லாமல் அந்த இடம் காலியாக இருந்தது. பழக்கப்பட்ட அணில்கள், பாவம், பால்கனியின் ஓட்டை வழியே எட்டி எட்டி பார்த்துவிட்டு எதையோ தேடிக் கொண்டும், காக்கைகள் அங்கும் இங்கும் பறந்து அலைபாய்ந்துக் கொண்டும், இருந்தன. தங்கள் குடி இருந்த வீட்டை தேடுகின்றனவோ?!
அணில்கள், பாவம், பழைய பால்கனியின் ஓட்டை வழியே ஓடி ஓடி வந்து எட்டிப் பார்த்தன. காக்கைகள் கூட்டம் சுற்றி பறந்து வட்டமிட்டன. தங்கள் வீடு இல்லாமல் போனதைத் தேடிக் கொண்டிருந்தன.
கண்ணை விற்று சித்திரம் வாங்கிய கதை. ஏனோ நினைவுக்கு வந்தது. வேப்பமர காற்று இல்லாத, அன்றைய இரவு, தூக்கம் இல்லாத வெற்று இரவாக வெறுமையாக கழிந்தது. அவைகள் வசிக்க வேண்டிய இடத்தில் நாம். நெஞ்சம் கனத்தது. கால்கள் மட்டும் மெதுவாக நடக்கத் தொடங்கின அவற்றைத் தேடி.