
மாலையிலும் கத்திரி வெயில் தகித்துக்கொண்டிருந்தது. சற்றும் மனமில்லாமல், 'போதும் இவர்களை வாட்டியது இன்று' என்று நிதானமாக சூரியன் மறைய ஆரம்பித்தார். வாசலில், ஸ்கூட்டர் ஸ்டாண்டு போடும் சப்தம் கேட்டு, யார் என்று எட்டிப் பார்த்தேன்.
நம்பிக்கை கொண்ட, வயதில் மூத்த, நெருங்கிய உறவினர் வந்தார். அவர் முகத்தில் ஒரு பூரிப்பும், கண்களில் சிறு ஏளனமும், உதட்டில் ரெடிமேட் புன்னகையையும், பரந்த நெற்றியில் சிறிய சந்தனப் பொட்டும், வானத்தைப்போன்ற நீலவண்ணத்தில் அரைக்கை சட்டையும், எட்டுமுழ வேஷ்டியும், HMT ரிஸ்ட் வாட்ச் அணிந்திருந்தார். இவையே அவரின் அடையாளம்.
“வாங்க மாமா” என்று இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தேன்.
மெல்ல குசலம் விசாரித்தவர், “என்னடா? உன்னோட கேளம்பாக்கம் மனையை அரசாங்கம் கையகப்படுத்திட்டங்களாமே?” என்று கேட்டார்.
“மாமா என்னுது மட்டுமல்ல, என்னைப்போல அறுநூறு பேருக்குமேல் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்றேன்.