
சினிமா பிரபலங்கள் பேட்டிகளில், சென்னைக்கு வாய்ப்பு தேடி வரும்போது ஒரு பழைய ட்ரங்கு பெட்டியுடன்தான் வந்தேன் என்பார்கள். அப்படித்தான் ஐம்பது வருடங்களுக்கு முன் வாழ வழி தேடி தருமமிகு சென்னைக்கு வந்தேன் ஒரு ட்ரங்கு பெட்டியுடனும் ஒரு லாரி நிறைய பிரம்மாண்ட கனவுகளுடனும்.
சென்னை மாநகரம், என்னை வரவேற்று வேலையும் கொடுத்தது. வருமானம் சொற்பம்தான். திருமணம் ஆனது. இரண்டு பிள்ளைகள். அவர்களை வளர்ப்பதும், பள்ளிக்கு அனுப்புவதில் செலவுகள் கட்டுக்கு அடங்கவில்லை. வாழ்க்கை ஒரு போராட்டமாகவே இருந்தது. வரவுக்கும் செலவுக்கும் ஈடுகொடுக்க முடியவில்லை. கடனில்லாமல் வாழ்க்கையைத் தள்ளுவதே பெரிய சோதனையாக இருந்தது.
வாழ்க்கை போராட்டத்திற்கிடையே எதேச்சையாக நெருங்கிய நண்பர் சுந்தரை, ஒரு ஓட்டலில் சந்திக்க நேர்ந்தது. வாடகை வீட்டில் கடுமையான நிபந்தனைகளுடன் வாழ்வதைப்பற்றி குறைபட்டுக்கொண்டேன். "எலிவலையானாலும் தனிவலையா இருக்கணும்பா" என்றேன்.