
முப்பது வருடங்களுக்கு முன்பு நண்பர் சுந்தர் அவர்களின் வற்புறுத்தலால், என்னால் முடியாது என்று விட்டுவிடாமல் அந்த மனையை வாங்கியது, இப்படி இக்கட்டான நேரத்தில் கைகொடுக்கும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. சில முடிவுகளை, வருவது வரட்டும் என்று துணிவாக எடுத்துவிடவேண்டும்.
மாவட்ட துணை ஆட்சியர் கூறியது இதுதான். “சார் நாங்கள் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால், அந்த விலாசத்தில் நபர் இல்லையென்று திரும்பி எங்களுக்கே வந்துவிட்டது. எங்கள் அலுவலக கோப்புகளில் உங்களின் பழைய விலாசமே உள்ளது. எனவே, எங்களால் உங்களை தொடர்புகொள்ள முடியவில்லை. “
“சார்... அப்போது நான் வாடகை வீட்டில் குடியிருந்தேன். அந்த இடமெல்லாம் இப்போது அடுக்குமாடி கட்டிடங்களாகிவிட்டது” என்றேன்.
“அப்ப சரி... நீங்கள் உடனடியாக மூலப் பத்திரத்தை எடுத்துவந்து என்னைப் பாருங்கள்.”
நான் என்னென்ன தஸ்தாவேஜ்களைக் கேட்பார்கள் என யூகித்து அனைத்தையும் திரட்டிக்கொண்டு துணை ஆட்சியர் அலுவலகம் சென்றேன்.