
"ஆமவட, உளுந்த வட, காராவட, சம்சா, தேங்கா பன்னு, போளி" என்ற சம்மூ தாத்தாவின் குரல் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான குரல். சம்மூ தாத்தா தினமும் காலையில் மூன்று மணிக்கு எழுந்து, நெற்றிக்கு திருநீறு அணிந்து, கடவுளை வணங்கி, நன்றி செலுத்திவிட்டு, தனது வடை சுடும் வேலையை ஆரம்பித்து விடுவார். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று உறுதியான நம்பிக்கையுடன் வடை சுடும் வேலையை மிகவும் பயபக்தியுடன் செய்வார். தரமான கடலை எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளையே பயன்படுத்துவார். பாமாயில் பக்கமே போக மாட்டார். பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்த மாட்டார். எல்லா வேலைகளையும் தானே கண்ணும் கருத்துமாக செய்வார். சிறு உதவிக்கு கூட தன் மனைவி பாப்பம்மாளை அழைக்காமல், தானே வடை சுடும் வேலையை செய்வார். ஆறு மணிக்கு தன் அடுப்படி வேலையை முடித்துவிட்டு, மணிமூத்திஸ்வரத்தில் தனது வீட்டுக்கு அருகில் தாமிரபரணியில் குளித்து விட்டு, வீட்டிற்கு வந்து, மீண்டும் கடவுளை வணங்கி விட்டு, கருப்பட்டி காப்பி குடித்து விட்டு, டான் என்று ஏழரை மணிக்கு தனது சைக்கிளில் வடை மற்றும் தின்பண்டங்களுடன் வியாபாரத்துக்கு கிளம்பி விடுவார். அவர் வரவுக்காக பல வீடுகளில் பெண்கள் காத்து கொண்டு இருப்பார்கள்.
முப்பது வருஷத்துக்கு மேலே அப்பகுதியில் வடை வியாபாரம் செய்து வருகிறார் சண்முகம் என்கிற சம்மூ தாத்தா.
அவர் வியாபாரத்தின் தினசரி காட்சிகள் சில: