

காலை மணி ஒன்பது இருக்கும். டிஃபன் சாப்பிட்டுவிட்டு கையில் மொபைலுடன் வெளியே வந்த குமார், திடீரென்று கத்தினான்.
"ஐயோ... பாம்பு... பாம்பு..."
அவனது சத்தம் கேட்டு, அவனது மனைவிக்கு முன்பே, பக்கத்து வீட்டு செண்பகம் வெளியே வந்து எட்டிப் பார்த்தாள். பதட்டத்துடன் காம்பவுண்டை கண்களால் துலாவிக்கொண்டிருந்தான், இவன்.
சில நொடிகளில் குச்சியுடன் வெளியே ஓடி வந்த அவனது மனைவி கமலா, "எங்கேங்க பாம்பு... எங்கே..." என்று கத்தினாள்.
அவனுக்குத் தெரியும், கரப்பான் பூச்சி, தேள் இவைகளுக்குத்தான் கமலா பயப்படுவாள். பாம்புக்கு பயப்படவே மாட்டாள்.
அவர்களது வெளிகேட்டைக் காட்டி, "நம்ம கேட்டுக்கடீல வந்து இதோ இந்த காம்பவுண்டு மேல ஏறிச்சு... அவ்ளோதான் நான் பார்த்தேன்... அதுக்குள்ளே மாயமா மறைஞ்சிடுச்சு..." என்று படபடத்தான் இவன்.
அதைக் கவனித்துக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு செண்பகம் அலறிக்கொண்டு திரும்பி உள்ளே ஓடினாள்.
"ஏங்க... பாம்பாம்ங்க... ஓடிவாங்க..." அவள் அலறும் சத்தம் இங்கே கேட்டது.