அமெரிக்காவில் ஆலய எழுச்சிக்கு அடிகோலிய தங்கம் பட்டர்!

தங்கம் பட்டர்...
தங்கம் பட்டர்...

‘கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!’ என்பது தமிழிலுள்ள பழமொழி. ஆலயங்கள் நிறைந்துள்ள பாரதத்தில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதே அதற்குக் காரணம். எடுத்துக்காட்டாக, ஆறு லட்சத்து நாற்பத்தொன்பதாயிரம் ஆலயங்கள் உள்ள பாரதத்தில், கிட்டத்தட்ட எட்டில் ஒருபங்கான எழுபத்தொன் பதாயிரத்து நூற்றைம்பத்து நான்கு கோயில்கள் நிறைந்தது, தமிழ்நாடு.

இப்படிப் பெருமைவாய்ந்த கோயில்களின் தலைவாயிலாக நிற்பது இராஜகோபுரம். அதுவே, தமிழ்நாட்டு அரசின் சின்னமாகவும் உள்ளது.

‘திரைகடலோடியும் திரவியம் தேடு,’ என்ற மூதுரைக்கு இணங்கத் தமிழர் பலநூற்றாண்டுகளாக உலகெங்கும் வணிகம் செய்துள்ளனர். கடந்த ஐம்பதாண்டுகளாகத் தமிழர் வெளிநாட்டுக்கு, அமெரிக்காவுக்குக் குடியேறுவது மிகவும் அதிகரித்து வருகிறது. தற்பொழுது அமெரிக்காவில் கிட்டத்தட்ட 3,41,000 தமிழர்கள் வசித்துவருகின்றனர். ஆனால், அமெரிக்காவில் ஆலயம் எழுப்புவது அவ்வளவு எளிதானதல்ல. மானியம் கொடுக்க அரசரும், நிதிபடைத்த செல்வர்களும் இங்கு இல்லை. ஆகவே, மக்களே ஒன்று திரண்டு சிறுதுளி பெரு வெள்ளமாக நிதி திரட்டிக் கோயில்கள் எழுப்பினர்.

இதையும் படியுங்கள்:
துன்பத்தில் கரம் பற்றி உடன் இருப்பதே நல்ல நட்பு!
தங்கம் பட்டர்...

கோயில்களை வடிவமைக்க ஸ்தபதிகள், சிற்பிகள், புனித நீராட்டித் தெய்வத் திருமேனிகளுக்கு உயிரூட்ட ஆகமம் அறிந்த ஆச்சாரியர்களும் தேவை. தினசரி பூசை நடத்துவதற்கு அர்ச்சகர்களும் வரவேண்டும். தமிழ்நாட்டிலிருந்துதான் பெரும்பாலோனார் வந்தனர்.

இவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் மதுரை மீனாட்சி சுந்தரேசர் ஆலயத்தில் அர்ச்சகராகப் பணியாற்றிய சிவாச்சாரியார் சந்திரசேகர பட்டர் ஆவார். இவர் அனைவராலும் அன்புடன் தங்கம் பட்டர் என்று அழைக்கப்படுகிறார். பெயருக்கேற்றபடி தங்கமான மனிதர். இதை அவருடன் பதினெட்டு ஆண்டுகள் நெருங்கிப் பழகியதில் தெரிந்துகொண்டேன்.

1982ம் ஆண்டு அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஹ்யூஸ்டன் மாநகரில் எழும்பிய மீனாட்சி கோயிலின் புனித நீராட்டலுக்கு (கும்பாபிஷேகம்) அமெரிக்க மண்ணில் தன் ஐம்பத்தைந்தாம் அகவையில் கால் பதித்தார். அமெரிக்காவின் டெக்ஸாஸில் தனது பெயருடைய கோயிலுக்குத் தனக்குப் பூசை செய்த சிவாச்சாரியாரை மதுரை மீனாட்சியே அனுப்பிவைத்தது எவ்வளவு பொருத்தம்!

அதைத் தொடர்ந்து அமெரிக்க மண்ணில் தமிழ் சிவ ஆகமப்படி பல கோயில்கள் எழுந்தன. அதற்கெல்லாம் தலைமை ஆச்சாரியராக புனித நீராட்டலை நடத்திவைத்தார், தங்கம் பட்டர். 2018ம் ஆண்டில், அவரது 91ம் அகவையில் அவருக்கு ‘ஹிந்து ரெனஸான்ஸ் (இந்து மறுமலர்ச்சி) விருது’ அளித்து கௌரவிக்கப்பட்டது.

தங்கம் பட்டர்..
தங்கம் பட்டர்..

லண்டன் பொருளாதாரக் கல்லூரியின் பேராசிரியரான கிரிஸ் ஃபுல்லரும் தங்கம் பட்டரைச் சிறப்பித்து தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். 2018ல் அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தின் இராஜகோபுரக் கும்பாபிஷேகத்தைத் தங்கம் பட்டர் தலைமை தாங்கி நடத்தித் தந்தபோது, கவ்வை ஆதீனத்தின் தலைவர் சத்குரு போதிநாத வேலன்சுவாமி அவரைப் புகழ்ந்து உரையாற்றினார்.

இப்படியாக தமிழ் ஆகமக் கோயில்களின் எழுச்சிக்குச் சிறப்பாக பணியாற்றிய சிவஸ்ரீ தங்கம் பட்டருக்கு அண்மையில் அவரது நூறாம் பிறந்தநாளையொட்டிச் சிறப்பான நிகழ்ச்சி அமெரிக்காவாழ் சிவாச்சாரியார்கள் சங்கத்தின் எட்டாம் ஆண்டுவிழாவில் அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் டி.சியில் நடத்தப்பட்டது.

அப்பொழுது அவருடன் சேர்த்து, நல்லசாமி குருக்கள், மாணிக்கசுந்தர பட்டர், பைரவமூர்த்தி ஆகிய சிவாச்சாரியார்களுக்கு ‘விஸ்வபார்த சிவகுலரக்ஷண’ என்ற விருதும் வழங்கப்பட்டது. அவ்விழாவில் அமெரிக்காவிலிருக்கும் பல சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டனர். அரிசோனா ஆனைமுகன் ஆலய (மகாகணபதி டெம்பில் ஆஃப் அரிசோனா) அர்ச்சகர் சிவஸ்ரீ ஜெயந்தீஸ்வரன் பட்டர் சிறப்புரை ஆற்றினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com