‘’சொன்னால் மக்கள் செல்வாக்கை இழந்துவிடுவோம்’’ என்ற அச்சம்.

தராசு பதில்கள்
‘’சொன்னால் மக்கள் செல்வாக்கை இழந்துவிடுவோம்’’ என்ற அச்சம்.
Published on

இந்துக்களைப் பற்றி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசியுள்ள கருத்துக்கள் பற்றி ?

- ஶ்ரீராமன்,  பெங்களூரு

மனுதர்ம சாஸ்திரம்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளதையே,  ஆ.ராஜா சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார்.  ஆனால், சூத்திரர்கள், இந்துக்கள் குறித்து மனுதர்ம சாஸ்திரம் இழித்துரைத்துள்ளதை அவரும் அவரை எதிர்ப்பவர்களும்  ஓர் அரசியல் ஆயுதமாக  பயன்படுத்தி  பலனடையப் பார்க்கிறார்கள். “ஏற்பதற்கில்லை” என்று ஒதுக்கித் தள்ளவேண்டிய  உபயோகமில்லாத விஷயம் இது.   

ரோஜர் பிரெடரரின் ஒய்வு ?

- வாசுதேவன், பெங்களூரு

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் “ஃபெடரர் வெர்சஸ் நடால், ஃபெடரர் வெர்சஸ் ஜோகோவிச் மோதல்களை இனி நினைத்தாலும் காண முடியாது” என்பது உண்மையிலேயே இழப்புதான்.  ஒரு மகத்தான இசைக் கலைஞனால் 70 வயதுக்குப் பிறகும் திறமை குன்றாமல் பணியாற்ற முடியும். உடல் வலுவை  முன்னிறுத்திச்  செயல்படும் விளையாட்டு வீரர்களுக்கு 40 வயதே எல்லைக்கோடுதான். அதுவரை இயங்கினாலே பேரதிர்ஷ்டம். ஃபெடரர் வாழ்ந்த காலத்தில் அவருடைய ஆட்டங்களை நேரலையில் கண்டிருக்கிறோம் என்பதே ஒரு பாக்கியம். அந்த ஆட்டத்தில் தென்பட்ட அழகும் நளினமும் ஆற்றலும் உத்திகளும்  அவர் மீது தனி மரியாதையை ஏற்படுத்தியது

போதைமருந்து போன்ற பழக்கங்களிலிருந்து ,மாணவர்களை "மீட்க"...தமிழக முதல்வர் அறிவித்துள்ள  " சிற்பி "...திட்டம் குறித்து ?

- மஹாலட்சுமி, திருமங்கலம்

நல்ல திட்டம். ஆனால் தினந்தோறும்  இப்படித்  திட்டங்களை அறிவித்துக் கொண்டிருப்பதில்  விளம்பரத்தை தவிர பலன் ஏதும் இருக்க போவதில்லை. இப்படி மாணவர்களுக்காக அறிவிக்கப்படும் திட்டங்களை  செயல்படுத்த எந்த நிர்வாக அமைப்பும், அதற்கான மனித வளமும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே பெரும் பணிச்சுமையில் இருக்கும் பள்ளி ஆசிரியர்களின் மீது சுமத்தப்படும் கூடுதல் சுமையாக அமைந்துவிடும்  

உலகப்பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ள அதானி ?

- மஞ்சுவாசுதேவன், பெங்களுரு

சொத்து மதிப்பிடும் முறைகளினால் இந்தப் பட்டியலில் முதல் ஐந்து இடங்கள் நகர்ந்து கொண்டேயிருக்கும். சில நாட்கள் இரண்டாம் இடத்தைத் தொட்ட அவர் மீண்டும் பழைய நிலைக்கு வந்திரு,க்கிறார். ஆனால் உலகப்  பணக்காரர்கள்  பட்டியலில் இந்தியர் இடம் பெற்றிருப்பது இந்த அரசின் சாதனை  என்று சொல்லிக்கொள்வது தவறு. 


கிராமங்களின் டீ கடை பெஞ்சு?

- ஷாகுல் அஹமது, தென்காசி

உள்ளூர்  அரசியலிலிருந்து  உலக அரசியல்வரை  கிளாசில்  இருக்கும்  டீயுடன்  ஆற்றி அலசப்படும் இடம். பல  கிசுகிசுக்களின்  பிறப்பிடம். பத்திரிகையாளர்களின்  செய்தி வங்கி.

“சனாதன எதிர்ப்பாளியாக பிரதமர் நரேந்திர மோடி வந்தால் அவரை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம்” என்ற திருமாவளவனின் பேச்சை எப்படிப் பார்க்கிறீர்கள் ? 

- ஜெ. கிருஷ்ணதேவு,புதுச்சேரி – 605107

நடக்காத, நடக்க முடியாத  விஷயங்களைச்  சவாலாக்குவது நம் அரசியல்வாதிகளின் வாடிக்கை.

“பிரதமருக்கு தமிழ்நாட்டின் மீது தனிப்பட்ட மதிப்பும், மரியாதையும் உண்டு” என்று நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறாரே ?

- டாக்டர். இரா. அருண்குமார், புதுச்சேரி - 605001

தமிழக அரசு தொடர்ந்து எழுப்பிக்கொண்டிருக்கும் கடிதங்களுக்கு அந்த மரியாதையும் மதிப்பும்  கிடைத்தாக தெரியவில்லையே. 

தமிழகத்தில் நான்கு முதல்வர்கள் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகின்றாரே ?

- சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்

‘’ஒரு முதல்வரையே சமாளிக்க முடியாமல் திணறும் அவர் கட்சி 4 பேரைச் சமாளிக்க முடியாமல் போய்விடுமோ’’ என்று அச்சப்படுகிறாரோ?

நடிகர் விஜய் நடிக்கும்" வாரிசு " திரைப்படம் தன் படப்பிடிப்பு முடியும் முன்பே 180 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்து விட்டதாமே ?

- சி. கார்த்திகேயன்,சாத்தூர் - 626203

இம்மாதிரி வதந்திகளை நம்பாதீர்கள். தமிழ்த்திரையுலகம் ரிலீசான பெரிய பட்ஜெட் படங்களுக்கே வசூல் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது.

மரணம் வரைக்கும் மனம் மாறாமல் இருக்கும் உறவு சாத்தியமா தராசாரே ?

- மீ.யூசுப் ஜாகிர்,வந்தவாசி

என்ன சந்தேகம்?  நாட்டில் பல கோடி தம்பதியினர் அப்படித்தானே வாழ்கிறார்கள்.

ராணி, மன்னரை போற்றும்  இங்கிலாந்து மக்கள்  எப்படி  ஜனநாயகத்தையும் ஆதரிக்கிறார்கள் ?  

- வண்ணை கணேசன், சென்னை

அரச குடும்பம் ஒன்று நாட்டின் தலைமைப் பீடத்தில் இருப்பதைத் தங்கள் பாரம்பரியப் பெருமையாக இங்கிலாந்து மக்கள்  கருதுகிறார்கள். இங்கிலாந்து வேல்ஸ், ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து   இணைந்ததுதான் ‘யூனைட்டெட்’ கிங்டம்  என்று  அழைக்கப்படும் இந்த நாடுகளிலும் மக்கள் அரசர் அல்லது அரசி  நாட்டின் தலைவராக இருப்பதைத்தான் விரும்புகிறார்கள். ‘’இந்த முறை நமக்கு வேண்டாம்’’ என்று சொல்ல  அங்குள்ள  அரசியல் கட்சிகளுக்கும் துணிவில்லை.   ‘’சொன்னால் மக்கள் செல்வாக்கை இழந்துவிடுவோம்’’ என்ற  அச்சம்.  நாட்டின் வரிப்பணத்தில் அரசு குடும்பத்தின் சொத்துகளையும், (பல கோட்டைகள்)  ஆடம்பரமான  சம்பிரதாயங்களையும்  பின்பற்றக் கணிசமான பகுதி செலவழிக்கப்படுகிறது. ஆனாலும் மக்கள் இம்முறை தொடர்வதை விரும்புகிறார்கள்.  மறைந்த அரசியின் இறுதி யாத்திரையை நாள் முழுவதும்  லண்டன் நகரத் தெருக்களில் காத்திருந்து பார்த்தவர்கள் 25 லட்சம் என்கிறது பிபிசி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com