Interview: "மரபு வழி இசை காப்பாற்றப் பட வேண்டும்" - தவில் வித்வான் திருவல்லிக்கேணி சேகரின் தவிப்பு!
கெட்டி மேளம்! கெட்டி மேளம்! என்று சொன்னாலே நமக்கெல்லாம் திருமண நிகழ்வுகளில் இசைக்கப்படும் தவில் தரும் உற்சாக இசைதான் நினைவுக்கு வரும். தவில் வாசிக்கும் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்தான் திருவல்லிக்கேணி K.சேகர்.
தமிழக அரசு அவரின் இசைத்துறை சாதனையை அங்கீகரிக்கும் வகையில் அன்னாருக்கு ’கலைமாமணி’ விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. அவரை பாராட்டும் விதமாக திருவல்லிக்கேணி ஜிம்கானா கிளப் அவருக்கு பாராட்டு விழாவை சமீபத்தில் நடத்தியது.
அந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட பொழுது, அவர் தனது தவில் வாசிப்புக் கலை வாழ்வினைப் பற்றி நம்முடன் பகிர்ந்து கொண்டார். அப்போது, சென்னை ஜிம்கானா கிளப்பின் துணைத் தலைவர் திரு. மனோகரனும் என்னுடன் இருந்தார்.
நேர்காணலின் போது அவர் நம்முடன் பரிமாறிக் கொண்ட தகவல்கள் இதோ உங்களுக்காக!
உங்களுடைய குடும்பத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
என்னுடைய தாயார் சக்குபாய், அப்பா கோதண்டராமன். ஒரே தம்பி தன்ராஜ், இந்த மூன்று பேர்களைக் கொண்டதுதான் எங்களுடைய குடும்பம். நான் நான்காம் வகுப்பு வரை படித்துள்ளேன். என்னுடைய அம்மாவின் செவி வழிச்செய்தியின்படி எனக்கு இப்பொழுது 66 வயதாகிறது.
நீங்கள் எங்கு பிறந்தீர்கள்? எங்கு வளர்ந்தீர்கள்?
நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் சென்னை திருவல்லிக்கேணியில் தான். நான் திருவல்லிக்கேணி K.சேகர் என்றுதான் எல்லோராலும் அறியப்படுகிறேன்.
தவில் இசையை கற்பதன் மேல் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?
நான் தவில் வாசிப்பதற்கென்று தனிப் பயிற்சி எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த மூன்று தலைமுறைகளாக இது எங்களுக்கு கை வந்த ஒரு கலையாகவே இருந்து வருகிறது. என்னுடைய குருநாதர் தஞ்சாவூர் எஸ். வெள்ளைச்சாமிதான் என் தவில் வாசிக்கும் திறமைக்கு மெருகேற்றினார்.
நீங்கள் தவில் வாசித்து மகிழ்ந்த சில இடங்களைப் பற்றி சொல்ல முடியுமா?
நான் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், ஸ்வீடன், லண்டன், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்காவில் கலிபோர்னியா யுனிவர்சிட்டி, சீனா, ஜப்பான் ஆகிய வெளி நாடுகளிலும் பல முறை தவில் வாசித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளேன். எனக்கு லண்டனிலும் ஜெர்மனியிலும் ரசிகர்கள் அதிகம் இருப்பதை உணர்கிறேன்.
உங்களால் மறக்க முடியாத அனுபவம்?
எனக்குக் கிடைத்த காஞ்சி பெரிய ஸ்வாமிகளின் ஆசீர்வாதம், மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் கச்சேரியில் தவில் வாசித்தது, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தவில் வாசித்தது, சமீபத்தில் நான் பெற்ற கலைமாமணி விருது இவை எல்லாம் என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாதவை.
நீங்கள் சமீபத்தில் பெற்ற கலைமாமணி விருது பற்றி...
அன்று காலை 7:30 மணி இருக்கும். திரு ஏ. ஆர். ரகுமான் அவர்களுடன் கீ-போர்டு வாசிக்கும் நண்பர் ஒருவர் எனக்கு இந்த கலைமாமனி விருது கிடைத்திருப்பதாக கைப்பேசியில் சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை. இந்த விவரத்தை வெளியிட்டிருந்த பேப்பர் கட்டிங் ஒன்றை ஃபோட்டோவோவுடன் எனக்கு அவர் பிறகு அனுப்பி இருந்தார். பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
தற்போதைய தமிழக முதலமைச்சரிடமிருந்து இந்த கலைமாமணி விருதினை பெறும் பொழுது உங்களுடைய மனநிலை எப்படி இருந்தது?
கலைஞர் அவர்களுக்கு முன்னாலேயே சுமார் 15 வருடங்களுக்கு முன் பல முறை தவில் வாசித்து அன்னாருடைய வாழ்த்துக்களை நான் பெற்றுள்ளேன். அதை நான் தற்போதைய முதல்வர் அவர்களிடமிருந்து கலைமாமணி விருதினைப் பெற்ற போது பகிர்ந்து கொண்டேன். அவரும் மகிழ்வுடன் கேட்டுக் கொண்டு என்னை மேலும் பாராட்டினார்.
தற்போதைய தலைமுறைக்கு நீங்கள் இந்தக் கலையை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
தற்போதைய தலைமுறைக்கு இந்த மாதிரி இசையில் ஆர்வம் குறைவாகவே உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் தவில் வாத்தியத்தின் அளவும், எடையும் தான் என்று நினைக்கிறேன். வரும் காலத்தில் இந்த கர்நாடக இசையின் மீது மக்களின் ஆர்வம் குறைந்து விடுமோ? என்ற அச்சம் எங்களைப் போன்ற கர்நாடக இசைக் கலைஞர்களிடம் அதிகமாகவே இருக்கின்றது. பெற்றோர்கள், பள்ளிகள், இசைக்கல்லூரிகள் போன்றவை இந்தக் கலைகளை இன்றைய இளைஞர்களிடையே எடுத்துச் செல்வதில் அதிக முனைப்பினைக் காட்டுவது நல்லது.
நமது மரபு வழி இசைகளில் நாதஸ்வரமும் தவிலும் முக்கியமானவை என்பதை மாணவர்கள் உணர வேண்டும். குழந்தைகள் தவில் வாசிப்பதை சிறிது நேரம் பார்த்தாலே போதும். இயல்பாகவே இதைக் கற்பதில் அவர்களுக்கு ஆர்வம் வந்து விடும் என்பது எனது திடமான நம்பிக்கையாகும்.
உங்களிடம் இந்தக் கலையை கற்றுக்கொண்டு வரும் சில மாணவர்களைப் பற்றி?
என்னிடம் சிக்காகோ, சான் பிரான்சிஸ்கோ, ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலிருந்து பல மாணவர்கள் இந்தக் கலையை இன்றும் ஆன்லைனில் ஆர்வமுடன் கற்றுக் கொண்டு வருகிறார்கள்.
உங்களின் இந்த சாதனைக்கு எல்லாம் எதைக் காரணமாக நினைக்கிறீர்கள்?
என்னுடைய இவ்வளவு சாதனைக்கும் கடவுளின் ஆசியும், என்னுடைய மனைவி ஹேமாவதி, மகன் சுனில் குமார், மகள் ஜோதி ஆகியார் கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும்தான் காரணம்.
இந்தத் துறையில் உங்களுடைய எதிர்கால லட்சியம் என்ன?
நிறைய பேர் இந்த தவில் வாசிக்கும் கலையை கற்றுக் கொள்ள வேண்டும். நான் கற்றுக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.
உங்களுடைய தவில் உலக வாழ்வில் நீங்கள் பெருமையாக உணரும் தருணங்கள் பற்றி?
நான் திரு.டி.டி. வாசு அவர்களுடைய மகளின் திருமணத்திற்கு தவில் வாசித்தது ஒரு மகிழ்ச்சியான, மறக்க முடியாத தருணமாகும். என்னுடைய நிகழ்ச்சிக்குப் பிறகு திருமதி எம். எஸ். சுப்புலட்சுமி அம்மா அவர்களுடைய பாட்டுக் கச்சேரியும் நடந்தது. அது எனக்கு இன்றும் நன்றாக நினைவில் இருக்கின்றது.
உங்கள் நினைவில் இன்றும் இருக்கும் சில பிரபலங்களைப் பற்றி சொல்லுங்களேன்?
எனக்கு விருது கொடுத்த முன்னாள் குடியரசுத்தலைவர் திரு. ஆர். வெங்கட்ராமன் அவர்கள், முன்னாள் குடியரசுத்தலைவர் திரு கே. ஆர். நாராயணன் அவர்களுக்கு முன்னால் சீனாவில் நான் தவில் வாசித்துக் காட்டிய போது அவரால் பாராட்டப்பட்ட தருணம், டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பட்டத் தருணம், ஏ.சி.முத்தையா அவர்களால் பாராட்டட்டப்பட்ட தருணம், டெல்லியில் பலமுறை தவில் வாசித்த தருணங்கள். இவையெல்லாம் என் நெஞ்சில் எப்போதும் நிழலாடிக்கொண்டே இருக்கும். (அவரின் கண்கள் ஈரமாகி விட்டன).
தவில் உலகில் அவரது விரல் பத்தும் தொடர்ந்து நர்த்தனாமாடி, அவருக்கு மேலும் பல விருதுகளை கொண்டு வரட்டும் என வாழ்த்தி அவருக்கு வணக்கத்தைச் சொல்லி அவரிடமிருந்து விடை பெற்றேன்.

