1930ம் ஆண்டு காலகட்டங்களில், சென்னை மயிலாப்பூர் தாடி ஸ்கூலில் தனது தொடக்கக் கல்வியை தொடங்கினான் அந்தச் சிறுவன். ‘தாடி ஸ்கூல்’ என்று அழைக்கப்பட்டதற்குக் காரணம், அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் தாடி வைத்திருந்ததுதான்! அதைத் தொடர்ந்து, அச்சிறுவன் தனது நடுநிலைக் கல்வியை மயிலை, முண்டகக் கண்ணியம்மன் கோயில் அருகில் உள்ள பி.எஸ். உயர்நிலைப் பள்ளியின் கிளைப் பள்ளியில் தொடர்ந்தான்.
தாடி ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒருநாள் அந்த வகுப்பறையில் மாணவர்கள் தரையிலும், ஆசிரியர் இருக்கையிலும் அமர்ந்திருந்தனர். வகுப்பு தொடங்கிய சற்று நேரத்தில், மாணவர்களைப் படிக்கச் சொல்லிவிட்டு அந்த ஆசிரியர் பாடம் எடுத்த அசதியில் சற்று கண்களை மூடி அயர்ந்து போனார். ஆசிரியர் கவனிப்பு இல்லாமல் போனால் மாணவர்கள்பாடு கொண்டாட்டம்தானே! அப்படித்தான் அந்த வகுப்பறையும் மாணவச் சிறுவர்களின் கூச்சலில் களேபரமாக இருந்தது.
அந்தக் காலங்களில் பள்ளிகளில், ‘ஸ்கூல் இன்ஸ்பெக் ஷன்’ என்று அரசு கல்வி அதிகாரிகள் திடீரென்று வருகை தருவதுண்டு. எதிர்பாராத விதமாக அன்று அந்தப் பள்ளிக்குக் கல்வி அதிகாரிகள் திடீரென்று வருகை தந்தனர். அப்போது அந்தப் பள்ளியின் ஒரு வகுப்பில் மட்டும் ஆசிரியர் கண்களை மூடி உறங்கிக் கொண்டு இருப்பதையும், மாணவர்கள் கூச்சல் போட்டுக் கொண்டு இருப்பதையும் ஜன்னல் வழியே அந்த அதிகாரிகள் கண்டனர். அதுமட்டுமின்றி, அவ்வளவு கூச்சலுக்கு மத்தியிலும் ஒரே ஒரு சிறுவன் மட்டும், தனது நோட்டுப் புத்தகத்தில் சிரத்தையாக எதையோ எழுதிக் கொண்டு இருப்பதை அவர்கள் பார்த்தனர்.
சந்தடி இல்லாமல் மெதுவாகச் சென்ற அந்தக் கல்வி அதிகாரிகள், அந்தச் சிறுவன் அப்படி என்னதான் எழுதிக்கொண்டு இருக்கிறான் என்பதைக் கண்டனர். அந்தச் சிறுவன் தனது நோட்டுப் புத்தகத்தில் எழுதியது பள்ளிப் பாடம் அல்ல; வகுப்பறையில் இருக்கையில் அமர்ந்து கண்களை மூடி உறக்கத்தில் ஆழ்ந்திருந்த அந்த ஆசிரியரின் அச்சு அசலான பென்சிலால் வரையப்பட்ட கோட்டு ஓவியம்தான்.
அந்த ஓவியத்தைக் கண்டு வியந்த அதிகாரிகள், அதன் பிறகு அந்த ஆசிரியரைத் தட்டி எழுப்ப, அவரோ பதறி எழுந்து அதிகாரிகளிடம் பம்மியிருக்கிறார். ‘எவ்வளவு நேரமாக இப்படி உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்?’ என்று அதிகாரிகள் கேட்க அவரோ, ‘இப்போதுதான்… சற்று நேரத்துக்கு முன்புதான்… ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான்’ என்று பதற்றத்தோடு சமாளித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, அந்த அதிகாரிகள் சிறுவன் தனது நோட்டுப் புத்தகத்தில் வரைந்திருந்த ஆசிரியரின் உறக்க நிலை பென்சில் ஓவியத்தை அவரிடம் காட்டி, ‘இந்த ஓவியத்தை வரைய இச்சிறுவனுக்கு எவ்வளவு நேரமாகி இருக்கும்? அவ்வளவு நேரமாக நீங்கள் உறங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்!’ என்று கண்டித்தனர்.
ஆசிரியருக்கு, அந்தக் கண்டிப்புக்கு காரணமாக இருந்த சிறுவன் மீது ஒருபுறம் கோபம் இருந்தாலும், சிறுவன் தன்னை தத்ரூபமாக வரைந்ததைக் கண்டு அவனைப் பாராட்டுகிறார். இப்படி, தொடக்கக் கல்வி படிக்கும்போதே, தனது வகுப்பின் ஆசிரியரை தத்ரூபமாக வரைந்த அந்த மாணவன்தான் பிற்காலத்தில் பத்திரிகை உலகே போற்றிய பிரபல ஓவியர்!
அந்த ஓவியர் யார் என்பதை நாளைக்குச் சொல்கிறேனே!
நேர்காணல்: எம்.கோதண்டபாணி