
மக்களை எப்படியாவது சைக்கிள் ஓட்ட வைக்க வேண்டும்!
இயற்கையாக, இயல்பாக நாம் மேற்கொண்டிருந்த உடற்பயிற்சிகளை இப்போது பணம் செலவழித்து மேற்கொள்கிறோம்! ஆமாம், வெளியிடங்களில் காலாற நடந்து உடம்புக்கு உரமேற்றிக் கொண்டிருந்த நாம், இப்போது ஜிம் என்ற உடற்பயிற்சிக் கூடத்தில், இயந்திரம் மூலமாக நடைபயிற்சியை மேற்கொள்கிறோம்!
உற்சாகமாக நடந்து போய்க் கொண்டிருந்த சிறுவர்கள் இப்போது ஆட்டோ ரிக்ஷாக்களிலும், வேன்களிலும் புளிமூட்டையாக அடைந்து, மூச்சு விடவும் கஷ்டப்பட்டு பள்ளிக்கூடம் போய்வருகிறார்கள்! துள்ளலும், துடிப்பும் மிகுந்த ஆரோக்கியமான அந்த நாட்கள் எங்கே, திணிப்பும், நெருக்கடியும், கசகசப்பும் மிக்க ஆரோக்கியக் கேடான இந்த நாட்கள் எங்கே!
சிறுவர்களின் உடல்நலத்தில் அக்கறை கொண்ட சென்னை மாநகராட்சி தம் பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் அளித்தது. ஆனால் சிறுவர்களைவிட, அந்தந்த வீட்டுப் பெரியவர்கள்தான் அதை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இலவசமாக சைக்கிள் பெற்றுக் கொண்ட சிறுவர்கள் தத்தமது பள்ளிகளுக்கு சைக்கிளில்தான் வருகிறார்களா என்பதை அந்தப் பள்ளிகள் உறுதி செய்யவில்லை என்பது வேதனை. இது மட்டுமல்லாமல், இலவச சைக்கிளோடு சீருடை அணிந்த மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று பேருந்து பயண சலுகையும் கிடைத்ததால், பல சிறுவர்கள் பேருந்துகளில் பயணிக்க, சைக்கிள்கள் வீட்டிலேயே முடங்கி விட்டன.
பொதுவாக உடல்நலத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக, சைக்கிள் ஓட்டிகளுக்கென்றே சாலைகளில், நடைபாதையை ஒட்டி பிரத்யேகமாகமாக வழி அமைக்கப் பட்டது. சைக்கிள் ஓட்டிகள் மிகுந்த உற்சாகத்துடன் அந்தப் பாதையைப் பயன்படுத்திக் கொண்டார்கள். மறைமுகமாக அவர்களுடைய உடல்நலனும் மேம்பட்டது.
ஆனால், நாளாவட்டத்தில் அந்தப் பாதையை ஆட்டோ ரிக்ஷாக்கள் ஆக்கிரமித்துக் கொள்வதும், சிக்னலுக்காகக் காத்திருக்கும் பேருந்துகள் சைக்கிளோட்டிகளுக்கு வழி கொடுக்க மறுப்பதும், இடது பக்கமாக, முந்தைய வாகனத்தை முந்திச் செல்லும் டூவீலர்களின் பயமுறுத்தல் என்றெல்லாம் தொடர் தொல்லைகள் அதிகரிக்கவே, சைக்கிள் பாதையைக் குறிக்கும் மஞ்சள்கோடு கூட அழிந்துபோய் விட்டது, சைக்கிளோட்டிகளும் காணாமல் போய்விட்டனர்.
எப்படியாவது மக்களின் உடல்நலனைப் பாதுகாத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு தனியார் பொதுநல நிறுவனம் ஒன்று ‘வாடகை சைக்கிள்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதாவது நகரின் ஏதேனும் ஒரு பகுதியில் இந்த சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். விரும்புவோர், உரிய கட்டணம் செலுத்தி விட்டு, அந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு, தாம் போக வேண்டிய இடத்திற்குப் போய், அங்கே இதே நிறுவனம் உருவாக்கியிருக்கும் சைக்கிள் நிலையத்தில் விட்டு விட்டுச் செல்லலாம். ஆனால் சில நாட்களிலேயே சைக்கிள்கள் பழுதுபட்டதும், பல சைக்கிள்கள் திருடு போனதும்தான் கிடைத்த பலன்கள்!
சைக்கிள் இருந்த வீடுகளில் எல்லாம் இப்போது டூவீலரும், ஸ்கூட்டரும் ஆதிக்கம் செலுத்தி, குடும்பத்தார் ஆரோக்கியத்தை புகைமண்டலமாக சூழும் வேதனையையும் பார்த்து கொண்டுதான் வருகிறோம்.
இந்தச் சமயத்தில், ‘சைக்கிள் ஷேரிங்’ என்ற வாடகை சைக்கிள் திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. சென்னையில் நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை, கிரீன்வேஸ் சாலை உள்ளிட்ட சாலைகளில் 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு முதற் கட்டமாக சைக்கிள் ஷேரிங் திட்டத்தை அறிமுகப் படுத்த நினைத்தார்கள்.
பொதுமக்களால் வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தப்பட 5000 சைக்கிள்களும் தயாராயின. சைக்கிள் எடுக்க விரும்பும் ஒருவர் ஆதார் எண்ணுடன், தங்கள் விவரங்களை ‘ஆன்லைனில்’ பதிவு செய்ய வேண்டும். ‘க்யூ.ஆர். கோடு’ வசதி மூலம் சைக்கிள் ஷேரிங் திட்டம் செயல்படும்.
சைக்கிள்கள் திருடு போகாமல் காக்க அவற்றில் ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்படும்; இதனால் சைக்கிள் இருப்பிடத்தை எளிதில் கண்டு பிடித்து விடலாம்; ஆரம்ப கட்டமாக ஒரு மணி நேரத்துக்கு ஐந்து ரூபாய் கட்டணம் என்றெல்லாம் திட்டம் வகுக்கப்பட்டது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கு சில நிபந்தனைகளுடன் இத்திட்டத்தை சென்னையில் அமுல்படுத்த வாய்ப்பளிக்கலாம் என்றும் தீர்மானமானது.
ஆனால், மக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் பல கேலிக்கூத்தாகிப் போனதுபோல, இந்த ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டமும் போய்விட்டதுதான் பரிதாபம்.