காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த நாள் – அக்டோபர், 26, 1947.

காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த நாள் – அக்டோபர், 26, 1947.

பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்க, பிரிட்டிஷ் இந்தியாவை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று முஸ்லீம் லீக் கோரியது. அதன்படி, பிரிட்டிஷ் இந்தியாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதிகள் பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் உருவாகியது. சுதந்திரத்திற்கு முன்னால், பிரிட்டிஷ் இந்தியாவில் 570 சுதேச அரசுகள், பிரிட்டிஷ் ராணியின் ஆதிக்கத்தில் இருந்தன.

இந்த சுதேச அரசுகள் அவர்கள் விருப்பப்படி, இந்தியா அல்லது பாகிஸ்தான் நாட்டுடன் இணைந்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி, 15 ஆகஸ்ட், சுதந்திர தினத்திற்கு முன்னால் 560 சுதேச அரசுகள் இந்தியாவுடன் இணைந்தன. ஜூனாகாத், ஜம்மு காஷ்மீர், ஹைதராபாத் ஆகியவை இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணையவில்லை.

ஜம்மு காஷ்மீர் அரசர், மகாராஜா ஹரிசிங் இந்து மதத்தைச் சேர்ந்தவர். ஆனால், பெரும்பான்மையான மக்கள் முஸ்லீம் மதத்தை தழுவியவர்கள். இந்தியக் குடியரசுடன் காஷ்மீரை இணைத்தால், மன்னர் பதவியை இழக்க நேரிடும் என்பதால் மகாராஜா, காஷ்மீரை தனி நாடாக வைத்துக் கொள்ள விரும்பினார். வியாபாரம், போக்குவரத்து ஆகியவை தடையில்லாமல் நடக்க மகாராஜா, பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்தியாவுடன், எந்த உடன் படிக்கையும் செய்து கொள்ளவில்லை.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தம்
காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தம்

அக்டோபர் 26ஆம் தேதி, பாகிஸ்தான் ராணுவம், தலைமையில், பதான் பழங்குடியினர் அதிரடியாக காஷ்மீரில் நுழைந்து அதனைத் தங்கள் வசமாக்க முயற்சி செய்தனர். இந்த ஆக்ரமிப்பில் காஷ்மீரில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர், கூலிப் படையினரால் கொல்லப்பட்டனர். ஸ்ரீநகரிலிருந்து, ஜம்முவிற்குத் தப்பி ஓடிய காஷ்மீர் அரசர்,  இந்திய ராணுவத்தின் உதவி கேட்டார். சர்வதேச விதிகளின் படி காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தால் மட்டுமே ராணுவத்தை அனுப்ப முடியும் என்றார் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன். அன்றே, காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் மன்னர். ஷேக் அப்துல்லா மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அக்டோபர் 27 அன்று இந்திய ராணுவம் காஷ்மீரில் நுழைந்தது. இரண்டு வாரம் நடைபெற்ற சண்டையில் கூலிப்படைகள் முறியடிக்கப்பட்டன. காஷ்மீர், இந்தியாவுடன் இணைவதாக கையெழுத்திட்ட உடன்படிக்கையை ஒப்புக் கொள்ள மறுத்த பாகிஸ்தான், இந்தியாவின் மீது போர் தொடுத்தது. பல மாதங்கள் நீடித்த சண்டை டிசம்பர் 31, 1948 அன்று முடிந்தது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி, காஷ்மீரில் இந்திய ராணுவம் இருந்த பகுதிகள் – பரப்பிளவில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியா வசம் வந்தன. மீதிப் பகுதிகள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்த பகுதிக்குப் பெயர் ஆசாத் காஷ்மீர் – பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்.

இந்தியாவுடன் இணைந்ததாக, காஷ்மீர் அரசர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டதால், பாகிஸ்தான், அத்துமீறி காஷ்மீரில் நுழைந்தது தவறு, என்று இந்தியா ஐ.நா. சபையில் முறையிட்டது. அமெரிக்காவும், பிரிட்டனும் நமக்கு சாதகமாக இல்லாததால் நியாயம் கிடைக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில், காஷ்மீரில் கருத்துக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு பாகிஸ்தான் தான் ஆக்கிரமித்த இடங்களிலிருந்து படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா. வலியுறுத்தியது. படைகளை விலக்கிக் கொள்ள பாகிஸ்தான் சம்மதிக்கவில்லை. ஆகவே, இன்று வரை கணக்கெடுப்பு நடக்கவில்லை.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் முடிந்தும், ஒரு முடிவில்லாத தொடர் கதையாக இருந்து வருகிறது காஷ்மீர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com