

ஏழை மக்களுக்கான குறைந்த விலை வீடுகள் கட்டும்போது அதிகபட்ச அளவுக்கு எஃப் எஸ் ஐ எனப்படும் தளபரப்பு குறியீட்டை அனுமதிக்கலாம் என மத்திய அரசுக்கு நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. "நாட்டில் அனைவருக்கும் வீடு" என்ற கொள்கை அடிப்படையில் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் (Urban Housing Scheme) துவங்கப்பட்டது. இதில் 1.22 கோடி வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. 96 லட்சம் வீடுகள் இதுவரை கட்டப்பட்டுள்ளது.
பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் துவங்கப்பட்ட பின் குறைந்த விலை வீடுகளுக்கான தேவை குறித்த நிலவரம் ஆய்வு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் குறைந்த விலை வீடுகளுக்கான செயல் திட்டம் என்று அறிக்கையை நிதி ஆயோக் அமைப்பு தயாரித்துள்ளது.
மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை விவரத்தில் நாட்டில் குறைந்த வருவாய் பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் குறைந்த விலை வீடுகளையே நம்பி உள்ளனர். இவர்களுக்கு தேவைப்படும் வீடுகள் எண்ணிக்கைக்கும், கிடைக்கும் வீடுகள் எண்ணிக்கைக்கும் இடைவெளி கவனத்தை ஈர்க்கிறது. இந்த இடைவெளியை சரி செய்யும் வகையில் இந்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பெரு நகரங்கள், இரண்டாம் நிலை நகரங்கள், மூன்றாம் நிலை நகரங்களில் 5.7 கோடி வீடுகளுக்கு தேவை உள்ளது. தற்போதைய நிலவரப்படி 300 சதுர அடி வீடு கட்ட, ஊரக பகுதிகளில் 6 முதல் 8 லட்சம் ரூபாய்; நகரங்களில் 25 லட்ச ரூபாயும் செலவாகிறது. நகரங்களில் பெரும்பாலான குடும்பங்களின் எதிர்பார்ப்பு 300 சதுர அடி வீடாக உள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் குறைந்த விலை வீடுகள் விஷயத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளில் சில நம் நாட்டு சூழலுக்கு ஏற்றதாக உள்ளன. அவற்றின் அடிப்படையில் குறைந்த பரப்பளவு நிலத்தில் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் கட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி குறைந்த விலை வீடுகள் கட்டுவதில் நிலத்துக்கான செலவு அதிகமாக உள்ளது. மாநில வாரியாக வீடுகளுக்கான தளப்பரப்பு குறியீடு அளவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றின் அடிப்படையில் குறைந்த விலை வீடுகள் என்ற வரையறைக்குள் வரும் கட்டிடங்களுக்கு கூடுதல் தளபரப்பு குறியீட்டை அனுமதிக்கலாம்.
அதிகபட்சமாக நிலத்தின் பரப்பளவில் நான்கு முதல் ஐந்து மடங்கு வரை தளபரப்பு குறியீட்டை அனுமதிக்கலாம். இதனால் அதிக உயரமான கட்டிடங்களில் குறைந்த விலை வீடுகள் கட்டுவதற்கு வாய்ப்பு ஏற்படும். இந்த பரிந்துரைகள் அடிப்படையில் மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கலாம் என நிதி ஆயோக் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.