ஏறக்குறைய இரண்டு ஆண்டுகாலமாக காஸாவில் நடைபெற்று வரும் இடைவிடாத போரால், அந்நாட்டு மக்கள் மிகவும் அதிர்ச்சியும், சோர்வும் அடைந்துள்ளனர். காஸாவில் பஞ்சமும் முழுமையான அளவில் பரவி வருவதால், காஸாவின் மக்கள் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்கு தினமும் போராடி வருகிறார்கள். குழந்தைகள் உட்பட பொதுமக்களைக் போரின் மூலம் கொல்வதும், ஊனப்படுத்துவதும், வீடுகள், பள்ளிகள், முக்கிய நீர் அமைப்புகளை அழிப்பதும் காஸா நகரத்தை திறம்பட வாழத் தகுதியற்றதாக மாற்றி வருகின்றன.
அதிகரிக்கப்பட்ட இராணுவத் தாக்குதல்களால் காஸா நகரில் 450,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறக்கும் அபாயத்தில் உள்ளனர் என்றும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 10,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது. கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்காக சிகிச்சை பெற்று வரும் 2,400 குழந்தைகளில் சிலர் பட்டினியால் இறக்கும் அபாயமும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
குழந்தைகள் உலகில் எங்கு இருந்தாலும் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டியவர்கள். இஸ்ரேல் அதன் சட்டப்பூர்வ கடமைகளுக்கு இணங்க வேண்டும் என்றும், இன்னும் பெரிய பேரழிவு ஏற்படுவதைத் தடுக்க உடனடியாக செயல்பட வேண்டுமென்றும் உலகத் தலைவர்களை யுனிசெஃப் வலியுறுத்தி வருகிறது.
காஸா நகரத்தில் உள்ள ஐந்தில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாறான குழந்தைகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
உணவுப் பற்றாக்குறையால் காஸாவில் கடுமையான பஞ்சம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. ஒரு நாட்டின் மக்கள் தொகையில் 20% குடும்பங்கள் உணவுக்கான தீவிர பற்றாக்குறையை எதிர்கொள்வது, குறைந்தது 30% குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவது, ஒவ்வொரு நாளும், 10,000 பேரில் குறைந்தது 2 பெரியவர்கள் அல்லது 4 குழந்தைகள் பட்டினி அல்லது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்களின் தொடர்பால் உயிரிழப்பது போன்றவை பட்டினியின் அடையாளங்களாக பொதுவாகக் கூறப்படுகின்றன. இவை அனைத்தும் காஸாவில் தற்போது காணப்படுகின்றன.
நீண்ட காலமாக உணவு உண்ணாததால் உடலின் அடிப்படை செயல்பாடுகளுக்கு தேவையான கலோரிகளைப் பெற முடியாத நிலை மக்களுக்கு இங்கு ஏற்படுகிறது. உடலுக்கு உணவு இல்லாதபோது உடலில் சக்தியும், மனதில் தன்னம்பிக்கையும் அவர்களுக்கு இயல்பாகவே குறைகிறது.
தொடரும் பட்டினியால் நுரையீரல், வயிறு மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் சுருங்கலாம். இவர்களின் மூளையின் செயல்பாடு பாதிக்கப்படலாம். தொடர்பட்டினி அவர்களுக்கு மனச்சோர்வு, பதட்டம், சுவாசம், நோய்த்தொற்றுகள், தட்டம்மை, நிமோனியா, வயிற்றுப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்தலாம். பட்டினியால் குழந்தைகள் அவர்களின் வயதுக்கு ஏற்ற உயரத்தை விட குறைவாக இருப்பார்கள். மேலும், தாய்மார்கள் கர்ப்பக் காலத்தில் போதுமான அளவு உணவு உண்ணாத போது, அவர்களுக்கு இரத்த சோகை, இரத்தக்கசிவு, மரணம், குழந்தைகள் இறந்து பிறப்பது, குழந்தைகள் குறைவான எடையுடன் பிறப்பது போன்றவை ஏற்படலாம்.
பட்டினியின் தாக்கம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியது. ஊட்டச்சத்து குறைபாடு நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிப்பதால் அவர்கள் தொற்றுநோய்களுக்கு ஆளாக நேரிடும். பட்டினி சிறுமிகளுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தலாம். அவர்கள் கருதரித்தாலும் இந்த பெண்கள் குறைந்த எடை கொண்ட குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம்.
அவர்களின் எலும்புகள் பலவீனமானதாகவும், உடையக்கூடியதாக மாறும் நிலையும் உருவாகலாம். வயதான பிறகு எலும்புகள் மடியக்கூடியதாக மாறுவதால், அவர்கள் தங்கள் உடல் எடையை சுமக்க முடியாமல் போகலாம். அதனால், கீழே விழும் ஒரு சிறிய நிகழ்வுக் கூட அவர்களுக்கு எலும்பு முறிவினை ஏற்படுத்தலாம்.
இந்த நெருக்கடிக்கு தீர்வுகாண, காஸாவிற்கு அதிக அளவிலான சத்தான உணவுகள் அனுப்பப்பட வேண்டும். தரமான மருந்துகளும், மருத்துவச் சிகிச்சையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வழிவகைகள் செய்யப்பட வேண்டும். தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான தேர்வாகும். எனவே, முதலில், தாய்க்கு உணவளிக்க வேண்டும்.
அதன்மூலம் அவர்கள் தங்கள் குழந்தைக்கு உணவளிக்க முடியும். அதனால், ஆண்களை விட, பெண்களுக்கு உணவு சென்றடைவதை உறுதிசெய்வது மிகவும் முக்கியம். எனவே, உணவைப் பெறுவதில் குழந்தைகளும் தாய்மார்களும் முன்னுரிமை பெற வேண்டும்.
பசிக்காக உணவை வழங்காமல், சத்தான உணவை அனைவருக்கும் வழங்க வேண்டும். மேலும், இதை ஆதரிக்கக்கூடிய ஒரு செயல்பாட்டு சுகாதார அமைப்பும் இருக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் அமைப்பும், வல்லரசு நாடுகளும் இதில் உடனடி கவனம் செலுத்தி இறக்கும் உயிர்களைக் காப்பாற்றவும் போரினை முடிவுக்கு கொண்டு வரவும் முனைப்புகள் காட்ட வேண்டும். இதுவே, நம் அனைவரின் தற்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.