நீ பெற்ற அனுபவமே சிறந்தது! -சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்!

நீ பெற்ற அனுபவமே சிறந்தது!
-சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்!
Published on

உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக்கொள்வது மிகப்பெரிய பாவம்.

   நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய். (முயற்சி இருந்தால்)

    பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

     நீ பெற்ற துன்பத்தை விடவும் அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது.

    உண்மைக்காக எதையும் துறக்கலாம் ஆனால் எதற்காகவும் உண்மையத் துறக்கக் கூடாது.

    ன்றைய வாழ்க்கைக்கும் பொருந்தும் இந்தப் பொன்மொழிகளைத் தந்தவர் யார் தெரியுமா? நூறு இளைஞர்களைத் தாருங்கள் பாரத தேசத்தை மாற்றிக் காட்டுகிறேன் என்று இளைய தலைமுறையின் வலிமையை உலகுக்கு எடுத்துகாட்டிய நம் இந்திய மண்ணின் மைந்தர் சிறந்த ஆன்மீகத் தத்துவவாதி சுவாமி விவேகானந்தரின் மொழிகளே இவைகள்.  
     அப்போதும் இப்போதும் எப்போதும் இளைஞர்களின் எழுச்சி நாயகன் சுவாமி விவேகானந்தர் எனலாம். உலக அளவில் தலை சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளர், தத்துவஞானியான விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இவர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி கொல்கத்தாவில் விஸ்வநாத் தத்தா- புவனேஸ்வரி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தாய்மொழி வங்காளம். இவரது பெற்றோர் ஆன்மீக வழியில் பக்தி உணர்வுடன் திகழ்ந்தவர்கள் என்பதால் சுவாமி விவேகானந்தரும். சிறு வயது முதலே ஆன்மீகத்தில் அதிக ஆர்வமும் தியாக மனப்பான்மை கொண்டவராகவும் வளர்ந்தார்.

     ஆன்மீகத்தில் மட்டுமின்றி படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்த மாணவராகவும், துடிப்புடன் பல்வேறு கலைகளையும் கற்றுத் தேர்ந்தவராக இருந்தார். கல்விப்படிப்புடன் பகுத்தறிவால் சிந்திக்கும் திறனையும் சிறு வயதிலிருந்தே பெற்றிருந்தார். 1879  இல் பள்ளிப்படிப்பை முடித்த சுவாமி விவேகானந்தர் கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் மேல்கல்வி படித்த பின் ஸ்காட்டிஷ் சர்ச் என்னும் கல்லூரியில் தத்துவ பாடத்தை எடுத்துப் படித்து கல்வியில் சிறந்தார். தத்துவம் படித்த பின் அவர் மனதில் கடவுள் பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன.

      கடவுள் உண்மையில் இருக்கிறாரா என்று சந்தேகம் மனதில் இருந்ததால் அதைப் பற்றிய விடையை அறிய முயன்றார். இந்தத் தேடுதலே பின்னாளில் அவர் சிறந்த ஆன்மிக தலைவராகவும் துறவியாகவும் மாற வழிவகுத்தது எனலாம் . கடவுள் எங்கிருக்கிறார் என்று அவர் தேடிய காலகட்டத்தில் தான் தத்துவஞானியான ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்த விவேகானந்தர் அவரிடமும் தனது சந்தேகத்தினை கேட்க முதலில் அவர் அளித்த பதிலும் அவரின் உருவ வழிபாடு போன்றவற்றையும் விவேகானந்தரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனினும் நாளடைவில் இராமகிருஷ்ணரின் போதனைகளால் விவேகானந்தரால் பக்தி மார்க்கம் மற்றும் ஞான மார்க்கம் இரண்டின் வித்தியாசம் மற்றும் இரண்டின் அவசியத்தை உணர்ந்து கொள்ள வைத்தது. ஒரு சமயம் ராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுள் குறித்து ஏற்றுக்கொள்ளும் வகையில் அளித்த  பதிலால் விவேகானந்தர் திருப்தியடைந்து அவரையே குருவாக ஏற்றுக்கொண்டு அவரின் பிரதான சீடரானார்.

     அதன் பின் 1886 ஆம் ஆண்டு  ராமகிருஷ்ண பரமஹம்சர் காலமானதைத் தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் மற்றும் ராமகிருஷ்ணரின் முதன்மை சீடர்களும் துறவறம் ஏற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு ஆன்மீக பயணம் சென்று சொற்பொழிவு ஆற்றினர். செல்லும் இடங்களில் விவேகத்துடன் செயல்பட்டு நன்மை தீமை பற்றி விளக்கி ஆன்மீக சேவை தந்ததால்  மக்களால் சுவாமி விவேகானந்தர் என்றும் அழைக்கப்பட்டார்.

    இந்தியா முழுவதும் வலம் வந்து மக்களின் கலாச்சாரம் பண்பாடுகளை அறிந்த விவேகானந்தர் 1892 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வந்தார். அங்குள்ள ஒரு பாறையின் மீது அமர்ந்து மூன்று நாட்கள் இந்தியாவின் வளம் முன்னிட்டு தியானம் செய்தார். அப்போது ஆங்கிலேயரிடம் இந்தியா அடிமைப்பட்டு இருந்த காலம் அவர் செய்த தியானத்தின்  நினைவாக தற்போதும் அங்கு அந்த பாறையும் மற்றும் விவேகானந்தருக்கு நினைவு மண்டபமும் உள்ளது.

    தொடர்ந்து 1893 சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் உள்ள சிகாகோவிற்கு சென்று அங்கு நடந்த சர்வதேச மதங்களுக்கான மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அவரது ஆங்கிலப் பேச்சு திறமையும் பகுத்தறிவுடன் ஆன்மீகத்தை அவர் அணுகிய விதமும்  உலக அளவில் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அதன் பின்னர் ஆன்மீக உரை நிகழ்த்த உலக நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுவாமி விவேகானந்தர் 1897 இந்தியா திரும்பி மக்களிடையே ஆன்மீக சொற்பொழிவுகளை நடத்தினார்.

     மேலும் சுதந்திரம் குறித்த கருத்துக்களை பரப்பினார். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எழுச்சிமிக்க கருத்துக்களை பரப்பி அவர்கள் வாழ்வில் முன்னேற வைத்தார். தொடர்ந்து தனது குருவான ராமகிருஷ்ணரின் நினைவாக “ராமகிருஷ்ணா மிஷன்” என்ற ஏழை எளியவர்களுக்கு இலவச சேவை அமைப்பையும் கங்கை நதிக்கரை பேலூரில் ராமகிருஷ்ணர் என்ற பெயரில் மடத்தையும் நிறுவி சமூக சேவையில் ஈடுபட்டார்.

       இப்படி ஆன்மீகத்திலும் சமூக சேவையிலும் பெரும் பங்காற்றிய சுவாமி விவேகானந்தர் கொல்கத்தாவில் பேலூரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் 1902 ஆம் ஆண்டு ஜூலை நான்காம் தேதி தனது 39 ஆவது வயதில் மறைந்தார். சிறு வயதிலேயே அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் இந்த உலகம் உள்ளவரை அவரின் எழுச்சி உரைகளும் சேவை மையங்களும் என்றும் நமக்கு அவரை நினைவூட்டும் என்பது உண்மை. இந்தியா என்றால் ஆன்மீகத்திலும் சேவையிலும் ஒரு அடையாளமாக விளங்கும் சுவாமி விவேகானந்தரின் நினைவு தினமான இன்று அவரை நாம் நினைவு கூறுவதில் பெருமை கொள்கிறோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com