டாவின்ஸியின் இறுதி விருந்து (The Last Supper)

 டாவின்ஸியின் இறுதி விருந்து (The Last Supper)

லியோனார்டோ டாவின்ஸியின் புகழ்பெற்ற The Last Supper ஓவியத்தை “இறுதி இராப்போஜனம்” அல்லது “இறுதி இராவுணவு“ என்றால் அடிக்க வருவீர்கள்! எனவே அதை அழகு தமிழில் “இறுதி விருந்து“ என்று சொல்லலாம்.

மோனா லிஸா அளவுக்குப் புகழ்பெற்ற இன்னொரு ஓவியம் இந்த இறுதி விருந்து ஓவியம். இயேசு கிறிஸ்து துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்ததற்கு முந்திய இரவில் தம் சீடர்களோடு சாப்பிட்ட விருந்தை மையப்பொருளாகக் கொண்டு லியோனார்டோ டா வின்சி வரைந்த தலைசிறந்த சுவரோவியம் ஆகும். இந்த ஒரிஜினல் ஓவியத்தின் அளவு கிட்டத்தட்ட 15 அடிக்கு 30 அடி கொண்ட கான்வாஸ்! அந்த பிரம்மாண்டத்தில் கூட டாவின்ஸியால் அபார கலைநுணுக்கத்துடன் வரைய முடிந்திருப்பதுதான் அவருடைய சிறப்பு. 1495ஆம் ஆண்டு தொடங்கி விட்டுவிட்டு 1498ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது என்கிறார்கள் சரித்திர ஆய்வாளர்கள்.

லியோனார்டோ டா வின்சிக்குப் புரவலராக இருந்த லுடோவிக்கோ ஸ்ஃபோர்சா (Ludovico Sforza) என்னும் மிலான் குறுநில ஆளுந ர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, டா வின்சி இச்சுவரோவியத்தை வரைந்தார்.

யோவான் நற்செய்தியில் (Gospel of John ) இயேசு தம் சீடர்களோடு இறுதியாக உணவு அருந்திய நிகழ்ச்சி பற்றி விவரிக்கும் காட்சியை அடிப்படையாகக் கொண்டு டா வின்சி இந்த ஓவியத்தை உருவாக்கினார். இயேசு அந்த இறுதி விருந்தின் போது நற்கருணை விருந்தை ஏற்படுத்தினார் என்று கிறித்தவர்கள் நம்புகின்றனர். எனவே இந்த இறுதி விருந்து "ஆண்டவரின் திருவிருந்து" (Supper of the Lord) என்றும் அழைக்கப்படுகிறது.

லியோனார்டோ இந்த ஓவியத்தை தீட்டும்போது அதிகாலையில் எழுந்து தொடங்கி மாலை வரையும், பசி தாகம் என்று பாராமல் ஓவியம் வரைவதிலேயே கண்ணாயிருந்தார் என்று சம கால எழுத்தாளர் மத்தேயோ பண்டேல்லோ (Matteo Bandello) என்பவர் குறிப்பிடுகிறார். 

சுவரில் ஓவியம் வரைய முடிவு செய்த லியோனார்டோ அதிக நாள்கள் நீடித்து நிலைபெறும் தன்மையுடைய fresco முறையைக் கையாள விரும்பவில்லை. அம்முறையில் முதலில் சமதளமான சுவரில் சீராகச் சுண்ணத்தால் முதல் பூச்சு செய்ய வேண்டும். பூச்சு உலர்ந்துபோவதற்கு முன்னால், ஈரமாக இருக்கும்போதே சாயம் கலந்த நிறக்கலவைகளைத் தூரிகையால் பூச வேண்டும். ஆனால், லியோனார்டோ ஓவியம் வரைந்த போது ஒவ்வொரு தூரிகைப்பூச்சுக்கு முன்னும் சிந்தனையில் ஆழ்ந்திருப்பாராம்.

எனவே, "ஈரவோவிய முறையை" கையாளாமல், உலர்ந்த சுவர்தளத்தில் ஒரு பலகையில் ஓவியம் எழுதுவதுபோல முதலில் பசைக்கூழ் அப்பி, அடிநிறம் (underpainting) பூசி, அது உலர்ந்தபின் பல வண்ணங்களைத் துல்லியமாக விரித்தும் அழுத்தியும், பரவியும் கருமையாக்கியும் இறுதி விருந்து ஓவியத்தை லியோனார்டோ வரைந்தார்.

லியோனார்டோ ஒவியத்தை வரைந்து முடித்த உடனேயே, "உலர்முறை" கையாண்டதில் சில அடிப்படைக் குறைபாடுகள் இருந்ததைக் கண்டார். ஓவியத்தின் கீழ்ப்பகுதியில் இடதுபுறம் ஒரு கீறல் தோன்றியது. அது காலப்போக்கில் ஓவியம் சிறிதுசிறிதாகச் சிதைந்து போயிற்று. இருபது ஆண்டுகளுக்குள்ளாக அந்த ஓவியத்தில் "பளபளப்பான கறை தவிர வேறொன்றையும் காண இயலவில்லை" என்று வசாரி (Vasari) என்னும் சமகால அறிஞர் எழுதினார்.

1642இல் எழுதிய ஃப்ரான்செஸ்கோ ஸ்கன்னெல்லி என்பவர், இறுதி விருந்து ஓவியத்தில் உள்ள ஆட்களை அடையாளம் காண்பதே கடினமாக உள்ளது என்றார்.

பல சீரமைப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டு இந்த ஓவியம் இன்றும் வடக்கு இத்தாலியில் இருக்கும் மிலானில் சாண்டா மரியா சர்ச்சில் டைனிங் அறையில் பார்வைக்கு இருக்கின்றது.

இந்த ஓவியத்தின் கரு பற்றிய ஒரு சுவாரஸ்யம் உண்டு.

இயேசு தம் நெருங்கிய நண்பர்களாகவும் தோழர்களாகவும் தெரிந்துகொண்டவர்கள் பன்னிரெண்டு பேர். அவர்களுள் ஒருவர் தம் எதிரிகளோடு சேர்ந்துகொண்டு, தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறார் என்று இயேசு கூறியது எல்லாருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. “என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்' என்று சொல்லும்போது அவரின் உதடுகள் அசைந்து மூடாமல் இருக்கும் காட்சியையே லியோனார்டோ ஓவியத்தின் மையமாக்கினார்.

இந்த ஓவியத்தின் நுட்பங்களை ஏராளமானோர் அலசி ஆராய்ந்து எழுதியிருக்கின்றனர். அதையெல்லாம் விளக்க ஒரு தனி புத்தகமே போட வேண்டியிருக்கும். இந்த ஓவியத்தின் சிறப்புக்கு சான்று 1980இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் இந்த ஓவியத்தையும் அதன் தொடர்புடைய அருளன்னை மரியா கோவிலையும் உலக பாரம்பரிய உடைமை என்று அறிவித்திருக்கிறது.

டாவின்ஸி பன்முகக்கலைகளில் தேர்ந்த விற்பன்னர். அவரின் பங்களிப்பு ஓவியம் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் இன்றும் கூட முன்னோடியாக இருந்து வருகிறது.

டா வின்ஸி கோட் கதை மற்றும் திரைப்படம் மூலம் மீண்டும் இந்த 21ஆம் நூற்றாண்டுக்கு அறிமுகமான டா வின்ஸியின் புகழ்பாட பல சான்றுகளை அவர் விட்டுச்சென்றிருக்கிறார்.

(நிறைந்தது)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com