

அண்மைக் காலமாக எந்த ஊடகங்களிலும் எதிர்மறை செய்திகளே(Negative news) அதிகமாகவும், தலைப்பு செய்திகளாகவும் வெளி வருகின்றன. நடைபெறுவதைத் தான் எழுதுகிறார்கள் என்றாலும், அதற்கான தேவையற்ற முக்கியத்துவம் தான் கவலையைத் தருகிறது.
இப்படிப்பட்ட செய்திகளைப் படிக்கும் வாசகர்களுக்கு எத்தகைய தாக்கத்தை இது ஏற்படுத்தும்; எத்தகைய சிந்தனை மற்றும் செயல்பாட்டைத் தூண்டும் என்பதைப் பற்றி யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. இதெல்லாம் சாதாரணம் தானே என்கிற அளவுக்கு மலிந்தும் போய்விட்டது.
எதிர்வினை செய்தியைச் சிலர் கடந்து போனாலும், பலருக்கு அது மாற்றுச் சிந்தனையைத் தூண்டிவிடும். இப்படியும் ஒரு வழி இருக்கிறது. இப்படிச் செய்தால் என்ன? என்று தோன்றக்கூடும். இந்த போக்கு அவர்களைக் குற்றங்கள் செய்யத் தூண்டும். அதனையே கதையாக்கி திரைப்படமாகவோ, தொலைக்காட்சி தொடராகவோ ஆக்கும் பொது ஒரு கதாநாயக அந்தஸ்தே அதற்குக் கிடைத்து விடுகிறது.
இந்த எதிர்வினையாளர்கள் வீரம் மிகுந்தவர்களாகத் துணிச்சல் காரர்களாகக் கொண்டாடப்படவும் செய்கிறார்கள்.
பொதுவாகச் சொல்வார்கள்... ராமாயணம் ஒருவர் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லும் காவியம், மஹாபாரதம் எப்படி வாழக்கூடாது என்று உரைக்கும் காதை என்று.
இன்றைய போக்கில் ராமர் கோழையாகவும், துரியோதனனும் துச்சாதனனும் வீரம் மிகுந்தவர்களாகவும் புரிந்து கொள்ளப்படும் அளவுக்குச் சிந்தனைகள் பிறழ்ந்து போயிருக்கின்றன.
தற்குறித்தனத்தை போற்றும் கொண்டாடும் சமூகம் எப்படி முன்னேறும். தீங்கு தவிர்க்கப் படவேண்டியது என்ற சிந்தனை வராமல் போற்றப் படவேண்டியதாக ஆகி நிற்கும் அவலம் இது. கடந்து போக வேண்டிய எதற்கும் தகுதியற்ற முன்னுரிமை தந்து தேவையற்ற வெளிச்சத்தை பாய்ச்சி சாதாரணத்தை சாதனையாக்க துடிக்கிறோம்.
பிறர் சங்கடப்படுவதை, அல்லல்படுவதை ரசிக்கும் செயல் எத்தகையது. அதைத் தானே பல திரைகளில் கண்டு மகிழ்கிறோம். கைதட்டி ரசிக்கிறோம். அவர்களைக் கதாநாயகர்களாகக் கொண்டாடித் தீர்க்கிறோம். அத்தகையவர்களை திரையிலும், நேரிலும் பார்க்க ஆளாய் ஆவலாய் பறக்கிறோம். இடிபட்டும் மிதிபட்டும் சாகவும் துணிகிறோம்.
எந்த பதிவும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியே தீரும் என்பது நிரூபிக்கப்பட்ட விதி. அதனை உணர்ந்து பதிவினை பகிர்தல் வேண்டும். பொதுவெளியில் வந்து விட்ட பதிவை அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த யாராலும் முடியாது. பகிர்வதற்கு முன்பே அதற்கான தணிக்கை அவசியம்.
நமது உணவில் உப்பும், காரமும், புளிப்பும் கூடியது போல, ஊடக பகிர்வுகளிலும் இவை தேவைப்படுகிறது. மேலும் அழகு மற்றும் பார்வையை ஈர்க்க வண்ணத்தூவல்களும் அவசியமாகிறது. தண்ணீரையே சுவைகூட்டி தானே குடிக்கிறோம். தண்ணீர் என்பது சுவையற்ற, வாசனையற்ற திரவம் என்ற அடிப்படை பாலப்பாடத்தை மறந்துவிட்டோம். சுவைகூட்டி சுவைத்து அதில் மயங்கி அதுவே இயல்பு என்று நம்பத்துவங்கிவிட்டோம்.
ஒரு ராணுவ வீரனின் வாழ்க்கையே வீரமானது தான். நம்மை பாதுகாப்பதில் தன்னை தன் குடும்பத்தை அர்ப்பணித்தவன் என்பது அவனது சவப்பெட்டியை காணும் போது தான் உணரமுடிகிறது. அவனது தியாகம் எப்படி அளவிடப்படுகிறது. இறந்தால் மட்டுமே ராணுவ வீரனின் வீரம் போற்றப்படும் என்றால் எத்தகைய சமூகமாக நாம் மாறி நிற்கிறோம்.
திரைகளில் கம்பு சுத்துவதும், குத்திக்கிழிப்பதும் வெற்று வசனங்களும் வீரமாக கோலோச்சியிருக்கும் சமூகம் மீளுவது எப்போது. இந்த தூசிகளை தட்டி சுத்தம் செய்ய நம்மை தவிர யாரால் முடியும். துடைப்பத்தை தூக்கிக் கொண்டு ஒருவர் வந்து இந்த துப்புரவை செய்வார் என்று எதிர்ப்பார்ப்பது எவ்வளவு பெரிய அறிவீனம்.
ஒவ்வொருவர் கையிலும் எப்போதும் இருக்க வேண்டிய துடைப்பத்தை தொலைத்தது எப்போது? குறைந்த பட்சம் ஒரு வடிக்கட்டியையாவது நமது பகிர்வுகளுக்கும், புலன்களுக்கு வைத்துக் கொள்வோம் .
சுவாரசியம் தரும் எதிர்மறை செய்திகள் புறக்கணித்து, சமூகம் முன்னேற நேர்மறை செய்திகள், சிந்தனையைகள் செயல்களில் ஈடுபடுவோம்...
அல்லது தேய நல்லது நடக்கும்!