கலைஞரின் நூற்றாண்டு விழாவினை ஒட்டி கல்கி இதழின் 80 ஆண்டு கால களஞ்சியத்தில் இருந்து நமது நிருபர் எஸ். சந்திர மௌலி மூழ்கி எடுத்த முத்துக்களின் தொகுப்பு.
வைணவ ஆச்சார்யர்களில் முக்கியமானவர் ஸ்ரீராமனுஜர். அவருடைய வாழ்க்கை வரலாற்றையும், இந்து மதத்துக்கு அவரது பங்களிப்பையும் எடுத்துக் கூறும் விதமாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான தொடர்தான் ராமானுஜர். இதற்கு கதை வசனம் எழுதியவர் கலைஞர் என்பது குறிப்பிடத் தக்கது. நாடறிந்த பகுத்தறிவுவாதியான கலைஞர், எழுதியது என்பதால் இந்தத் தொடர் பரபரப்பாக பேசப்பட்டது.
2015 ஜூன் முதல் தேதி துவங்கி 27 ஜனவரி 2017 வரை 433 எபிசோடுகள் ஒளிபரப்பான இந்தத் தொடர் ஏராளமான ஆஸ்திக அன்பர்களால் விரும்பிப் பார்க்கப்பட்டது. அது மட்டுமில்லாமல், இந்தியாவுக்கு வெளியே இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளிலும் ஒளிபரப்பானது. தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, டிடிடி பக்தி சேனலிலும் ஒளிபரப்பானது.
5.4.2015 கல்கி இதழில் ராமானுஜர் தொலைக்காட்சித் தொடர் குறித்து கலைஞரை பேட்டி கண்டார் பத்திரிகையாளர் பிரியன். அந்தப் பேட்டியில் பல அரிய கருத்துக்களை நெகிழ்ச்சியோடும், ஆர்வத்துடனும் பகிர்ந்துகொண்டார் கலைஞர்.
“மதத்திலே புரட்சி செய்த மகான்” என்ற தலைப்பில் வெளியான அந்த நெடிய பேட்டியின் முதல் பகுதி இதோ:
“முதலில் இராமானுஜர் பற்றி எந்த வயதில் தெரிந்துகொண்டீர்கள்?”
“இளம் வயது என்பது மட்டும் நினைவிலே இருக்கிறதே தவிர, எந்த வயது என்பது ஞாபகத்தில் இல்லை. அந்த இளம் வயதில், நானும், என் நண்பர்கள் மறைந்த தென்னன், இசைவாணர் டி.வி. நமசிவாயம் மூவரும் முயற்சி எடுத்து, சிறுவர்களிடம் உணர்வை ஊட்ட, ‘சிறுவர் சீர்திருத்தச் சங்கம்’ என ஒரு அமைப்பை உருவாக்கி, வாரந்தோறும் ஒரு ஆஞ்சநேயர் கோயில் மண்டபத்தில்தான் கூட்டம் நடத்துவோம். அந்தக் கால கட்டத்திலேயே ‘இராமானுஜர்’ பற்றிப் படித்த ஞாபகம் உள்ளது. ஆத்திக எண்ணம் கொண்டவர்கள் மத்தியிலும், மதத்தைப் பற்றிய புரட்சி எண்ணம் கொண்டவர்களும் இருந்திருக்கிறார்களே என்ற ஆச்சரியம்தான் ஏற்பட்டது.”
“அவரது வாழ்க்கைப் பாதையில் உங்கள் மனத்தைத் தொட்ட சம்பவம் எது?”
“இராமானுஜரின் வாழ்க்கைப் பாதையில் என் மனத்தைத் தொட்ட பல சம்பவங்கள் உண்டு. அவை அனைத்தையும் தொலைக்காட்சித் தொடரில்
காணவிருக்கிறீர்கள். தற்போது நீங்கள் கேட்ட கேள்விக்கு அனைவருக்கும் தெரிந்த ஒன்றையே பதிலாகக் கூறுகிறேன்.
தொண்டை மண்டலத்தில் உள்ள திருப்பெரும்புதூர்தான் இராமானுஜரின் பிறந்த ஊர். கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். எமதர்மத்துக்கான முன்னோடியாகத் திகழ்ந்தார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த திருக்கச்சி நம்பியைத்தான் இவர் தனது குருவாக ஏற்றுக்கொண்டு பாடம் கற்றார். மனிதர்கள் இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்றால், அவர்களிடையே ஏற்றத் தாழ்வு இருப்பது நியாயமற்றது என்று சாடியவர் இவர். இறைப் பணியும் மக்கள் பணியும் ஒன்றே என்றார்.
உறங்காவில்லி தாசன் என்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் உட்பட பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களையும் தனது சீடர்களாக ஏற்றுக்கொண்டார். வைணவ மூல மந்திரங்களைக் கற்க இவர் முனைந்தபோது, திருக்கோட்டியூர் நம்பியை அணுகுமாறு கூறப்பட்டு, அவரை அணுக இவர் பலமுறை முயற்சித்தும் 18 முறைகள் பலனின்றித் திரும்பினார்.
இறுதியாக வேறு யாருக்கும் திரும்பச் சொல்லக்கூடாது. அப்படி தெரிந்தால் இராமானுஜர் நரகம் செல்வார் என்ற எச்சரிக்கையுடன் திருக்கோட்டியூர் நம்பி, இராமானுஜருக்கு அந்த மந்திரத்தை உச்சரித்துக் காட்டினாராம். வைணவ மூல மந்திரத்தை அறிந்துகொண்டவுடன் இராமானுஜர், அந்த ஊரிலே இருந்த செளமியநாராயணன் கோயில் கோபுரத்தில் ஏறி நின்றுகொண்டு, ஊர் மக்களையெல்லாம் அழைத்து, தான் திருக்கோட்டியூர் நம்பியிடம் மிகுந்த சிரமத்தோடு கற்றதையெல்லாம் உரத்த குரலில் அனைவருக்கும் கூறினாராம்.
உடனே அவர் வாக்குறுதியை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டபோது, தான் ஒருவன் சுவர்க்கம் சென்று, மற்ற மக்கள் எல்லாம் நரகத்தில் இருப்பதைவிட, தான் நரகம் சென்றாலும் பரவாயில்லை, மற்றவர்கள் எல்லாம் சொர்க்கம் செல்வதையே தான் விரும்புவதாகச் சொன்னாராம்.
இந்தச் சம்பவம்கூட என் நினைவிலே நிற்பதற்கு ஒரு காரணம் உண்டு. இந்தக் காலத்தில் தணிக்கை என்பது அவ்வளவு சிரமமல்ல என்றபோதிலும், திரைத்துறையில் ஆரம்பக் காலத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்று உண்டு. 1957 ஆம் ஆண்டு ‘பராசக்தி’ படம் வெளி வந்த காலத்திலேயே தணிக்கைத் துறையினரிடம் நான் சங்கடப்பட்டிருக்கிறேன்.
நான் திரைக்கதை வசனம் எழுதி, நடிகர் திலகம் நடித்த படம் ‘திரும்பிப்பார்’. அண்ணா சாலையில் உள்ள ஐந்து மாடிக் கட்டடத்தின் மேல்மாடியில்தான் தணிக்கை அலுவலகம். அப்போது ‘லிப்ட்’ வசதியெல்லாம் அங்கே இல்லை. படிகளில் ஏறித்தான் செல்ல வேண்டும். அந்தப் படத்துக்குத் தணிக்கை வேலையாகச் சென்றபோது, தணிக்கை அதிகாரிகள் அந்தப் படத்தில் நான்காயிரம் அடி வெட்ட வேண்டுமென்றார்கள். எந்தெந்தப் பகுதிகளை வெட்ட வேண்டுமென்பதற்காக நானும், இயக்குனர் காசிலிங்கம் அவர்களும்,
நண்பர்களும் அந்த மாடிக்கு ஒவ்வொரு நாளும் படிகளிலே ஏறித்தான் செல்வோம்.
ஒருநாள் அதிகாரியிடம் “இப்படி ஏறி வருவதைப் பார்த்துக்கூட உங்களுக்குக் கருணை ஏற்படவில்லையா” என்று கேட்டேன். அதற்கு அவர், “திருப்பதி மலையில் ஏறிச் சென்றால் எவ்வளவு புண்ணியமோ, அதுபோல இங்கு ஏறி வருவதும் உங்களுக்குப் புண்ணியம்தான்” என்றார்.
என்னுடைய கொள்கையை உணர்ந்து என்னைக் கேலி செய்வதற்காக அவர் அப்படிச் சொன்னார்.
அப்போது அந்த அதிகாரிக்கு கலைஞர் கொடுத்த பதிலடி என்ன?
நாளை பார்க்கலாம்.
05.04.2015 கல்கி இதழிலிருந்து
தொகுப்பு: எஸ். சந்திர மௌலி