மணமக்களை நெகிழ வைத்த சிலேடை! | கலைஞர் 100

கலைஞரும் கல்கியும்
மணமக்களை நெகிழ வைத்த சிலேடை! | கலைஞர் 100
Published on

கலைஞரின் நூற்றாண்டுவிழாவினை ஒட்டி கல்கி இதழின் 80 ஆண்டு கால களஞ்சியத்தில் இருந்து நமது நிருபர் எஸ். சந்திர மௌலி மூழ்கி எடுத்த முத்துக்களின் தொகுப்பு.

கலைஞரது 94வது பிறந்த நாளை ஒட்டி, 2017 ஜூன் 11 இதழ் கல்கியில் “கலைஞர் 94 மு.க.வரிகள்” என்ற தலைப்பில் ஓர் சிறப்புக் கட்டுரை வெளியானது. பத்திரிகையாளர் இரா. சரவணன் எழுதிய அந்த சுவாரசியமான கட்டுரையின் முதல் பகுதியை நேற்று கண்டோம். இதோ அதன் மீதி:

மணமக்களை நெகிழ வைத்த சிலேடை!

நடிகர் விமல் திருமணம் முடிந்து மனைவியோடு கலைஞரிடம் ஆசிபெறச் சென்றார். தம்பதியின் ஊர் குறித்து கலைஞர் கேட்க, “நான் மணப்பாறை. மனைவி திண்டுக்கல்” என்றார் விமல். “பாறையும் கல்லும் சேர்ந்து இருந்தாத்தான்யா மரியாதை” எனச் சொல்லி கலைஞர் ஆசி வழங்க அசந்துபோனார் விமல்.

விவசாயப் பாசம்!

நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் எந்தப் போராட்டம் நடந்தாலும் அதுகுறித்து உடனே தனக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனச் சொல்வாராம் கருணாநிதி. ஒருமுறை திருத்துறைப் பூண்டியில் விவசாயிகள் ஏழு பேர் சாலை மறியல் நடத்தி, பின்னர் கலைந்து சென்றிருக்கிறார்கள். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, அப்போதைய திருவாரூர் மாவட்டச் செயலாளரான பூண்டி கலைச்செல்வனிடம் இதுகுறித்துக் கேட்க, “நாலஞ்சு விவசாயிகள்தான் அய்யா... பெரிசா ஒண்ணுமில்ல” என்றாராம். “அஞ்சு விவசாயிகளா இருந்தாலும் அவங்களோட பாதிப்பை சரிசெய்யத்தான் நம்மைத் தேர்ந்தெடுத்து இருக்காங்க. அதிகாரிகள்தான் சில விஷயங்களை மறைக்கிறாங்கன்னா, கட்சிக்காரங்களும் அப்படி இருக்கக் கூடாது. அந்த விவசாயிகளைப் பார்த்து அவங்களுக்கான குறை என்னன்னு கேட்டு எனக்கு உடனே தகவல் அனுப்பணும்” என்றாராம் கருணாநிதி. முதல்வர் நாற்காலியில் கோட்டையில் அமர்ந்திருந்தாலும், கடைக்கோடி விவசாய மண்ணில் என்ன நடக்கிறது என்பதை அக்கறையோடு அறிபவராகவும் இருந்திருக்கிறார் கருணாநிதி.

சமத்துவபுரம் சமத்து!

கருணாநிதி பிறந்த திருக்குவளையில் சமத்துவபுரம் அமைக்க ஏற்பாடாகி இருக்கிறது. அதுகுறித்துப் பேச அதிகாரிகளுக்கு போன் போட்டிருக்கிறார் கருணாநிதி. “இடம் தேடிக்கொண்டு இருக்கிறோம் அய்யா” என அதிகாரிகள் சொல்ல, “திருக்குவளை முனியன் கோயில் பக்கத்தில் போய்ப் பாருங்கய்யா.

அங்கேதான் இடம் இருக்கும்” எனச் சொல்லி இருக்கிறார் கருணாநிதி. அதிகாரிகள் போய்ப் பார்த்து அசந்துபோயிருக்கிறார்கள். சமத்துவபுரம் கட்டுவதற்கான விசாலமான இடம் அங்கே இருந்திருக்கிறது.

முருகனை நம்புகிறேன்’

“பிறந்த ஊரைப் பற்றிய அத்தனை விஷயங்களும் கலைஞருக்கு அத்துப்படி. தீவிர பகுத்தறிவாளராக இருந்தாலும் திருக்குவளைக்குச் சில கிலோ மீட்டர் முன்பு பிரியும் நான்கு ரோட்டில் உள்ள ஐந்து கோயில்களின் பெயரையும் அப்படியே சொல்வார் கலைஞர். ஒருமுறை தலைவர் திருக்குவளைக்கு வந்திருந்தபோது பிரசித்தியான முருகன் கோயில் உள்ள எட்டுக்குடி கிராமத்தைச் சேர்ந்த சிலர் கோரிக்கை மனுவோடு வந்தார்கள். அந்த மனு அமைச்சர் துரைமுருகன் சம்பந்தப்பட்டது. ‘நிச்சயம் உங்க கோரிக்கை நிறைவேறும். நீங்க அந்த முருகனை நம்புற மாதிரி நான் இந்த முருகனை நம்புறேன்’ எனச் சொல்லி துரைமுருகனைக் காட்டினார் கலைஞர். “பகுத்தறிவும் கடவுள் மறுப்பும் கொண்டவராக இருந்தாலும், கடவுள், நம்பிக்கை கொண்டவர்களின் மனம் நோகாமல் நடந்து கொள்வதிலும் கலைஞரை யாரும் குறைசொல்ல முடியாது” என்கிறார்கள் திருக்குவளைவாசிகள்.

பட்டு வண்ணார் பாசம்!

திருக்குவளையைச் சேர்ந்த பட்டு வண்ணார் என்பவர்தான் கருணாநிதியைச் சிறுவயதில் தூக்கி வளர்த்தவர். 98 வயது வரை வாழ்ந்த பட்டு வண்ணார் மீது கருணாநிதிக்கு அளவுகடந்த பாசம். மணலைப் பரப்பி கருணாநிதியின் விரல் பிடித்து ‘அ’ போடக் கற்றுக் கொடுத்தவர் பட்டு வண்ணார்தான். “ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கும்போதும் பிறந்த ஊரில் உள்ள பலரையும் பெயர் சொல்லி விசாரிப்பார். அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்வார். அதிலும் குறிப்பாக பட்டு வண்ணாரைப் பற்றி விசாரித்து அவருக்கு வேண்டியதைச் செய்யச் சொல்வார். பிறந்த மண்ணின் பாசத்தை மறக்காத பெருந்தலைவர் கலைஞர்” என்கிறார் தி.மு.க. விவசாயிகள் அணி மாநிலச் செயலாளரான விஜயன்.

அசரவைத்த ஞாபகம்!

கருணாநிதியின் ‘கண்ணம்மா’ படம் ஷூட்டிங் நடந்த நேரம். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் போலீஸ் அதிகாரி ஒருவர் வில்லனைக் கைது செய்கிற சீன். சம்பந்தப்பட்ட நடிகர் வராமல் போக, ஸ்பாட்டில் நின்ற முன்னாள் மேயர் மா.சுப்ரமணியனை அதிகாரியாக நடிக்கச் சொன்னார் இயக்குனர் பாபா விக்ரம். கருணாநிதி எழுதிய 18 வரி வசனத்தைப் பேசி நடித்தார் மா.சுப்ரமணியன். அப்போது பொங்கல் நேரம். கோபாலபுரம் சென்ற சுப்ரமணியனிடம், “என்னய்யா, நீயே போலீஸ் அதிகாரியாக நடிச்சியாமே! எங்கே, அந்த வசனத்தைப் பேசிக் காட்டு” எனச் சொல்லி இருக்கிறார் கருணாநிதி. 16 வரிகளை சுப்ரமணியன் பேசிக்காட்ட, விடுபட்ட 2 வரிகளைச்

சட்டென கருணாநிதி பேசிக் காட்டி இருக்கிறார். கூடவே, “உன் வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு. படத்துக்கான டப்பிங்கையும் நீயே பேசிடுய்யா” என்றாராம்.

“ஆற்காட்டார், நெப்போலியன் உள்ளிட்ட பலரும் இருந்த இடத்தில் என்னை வசனம் பேச வைத்து அழகு பார்த்தார் கலைஞர். மூன்று மாதங்களுக்கு முன்பு எழுதிய வசனத்தில் இரண்டு வரிகளை நான் மறந்துவிட்ட போது நொடியும் தாமதிக்காமல் அந்த வரிகளைச் சொன்னார். தலைவர் என்னையே டப்பிங் பேசச் சொன்னதைப் பெருமையாக நினைத்தபடி வீட்டை விட்டு வெளியே வந்தேன். இயக்குனர் பாபா விக்ரம் போன் செய்தார். ‘கற்பகம் ஸ்டூடியோவுக்கு டப்பிங் பேச வாங்க. தலைவர் சொன்னார்’ என்றார். வீட்டை விட்டு வெளியே வருவதற்குள் என்னிடம் சொன்னதை இயக்குனரிடம் சொல்லி அதை கலைஞர் செயல்படுத்திய வேகம் எவரிடமும் பார்க்க முடியாதது” என நெகிழ்ந்து சொல்லும் மா.சுப்ரமணியன் இன்னொரு நிகழ்வையும் பகிர்ந்துகொண்டார்.

வியக்கவைக்கும் பெருந்தன்மை!

“பெரம்பலூர் மேம்பாலம் திறப்பு விழாவில், ‘சுப்ரமணியனை மேயராக்கலாம் என ஸ்டாலின் அழைத்து வந்தபோது இவரால் முடியுமா என நான் தயங்கினேன். இரண்டு ஆண்டு கால வேலைகளில் என்னை வியக்கவைத்துவிட்டார் சுப்ரமணியன். நான் இவரிடத்தில் தோற்றுப்போய்விட்டேன்’ எனத் தலைவர் பேச நான் பதறிப்போய்விட்டேன். விழா முடிந்து தலைவர் வீடு திரும்பிய நேரம். தளபதி ஸ்டாலினிடம் இருந்து எனக்கு போன். ‘தலைவர் பேசிய வீடியோ பதிவை பத்திரமா எடுத்து வையுங்கள்’ என்றார் தளபதி. ஏதோ முக்கிய வேலைக்காகச் சொல்கிறார் என நினைத்து ‘பத்திரமாக எடுத்து வைத்துவிட்டேன்’ எனச் சொன்னேன். ‘தலைவர் தாம் தோற்றதாக எவர் குறித்தும் பேசியதே இல்லை. உங்க வாழ்க்கையில் முக்கியமான அங்கீகாரம் இது’ என்றார் தளபதி. நான் அழுதே விட்டேன்” என்கிறார் மா.சுப்ரமணியன்.

மருத்துவமனையிலும் வார்த்தை ஜாலம்!

சமீபத்தில் காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அட்மிட்டானபோது மருத்துவர் அவருக்கு நம்பிக்கையூட்டும் விதமாகப் பேசி இருக்கிறார்கள். கிரிக்கெட் ஆர்வலரான கருணாநிதி, “கிரிக்கெட்டில் 90-ஐ தாண்டிட்டால் செஞ்சுரி அடிச்சிடணும். பேட்ஸ்மேன் ஸ்ட்ராங்கா இருந்தாலும் பிட்சும் ஒத்துழைக்கணுமே...” எனச் சொல்ல, அசந்து போனார்கள் மருத்துவர்கள். மனரீதியாக, தான் உறுதியாக இருப்பதையும் உடல் ரீதியான முன்னேற்றத்தை மருத்துவர்களை ஏற்படுத்தச் சொல்லியும் வார்த்தை நயத்தோடு கருணாநிதி சொன்ன விதம் எல்லோரையும் வியக்கவைத்தது. தள்ளாத வயதிலும் தமிழ் இளமையாகவே இருக்கிறது கருணாநிதியிடம்!

கல்கி 11.06.2017 இதழிலிருந்து

தொகுப்பு: எஸ். சந்திர மௌலி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com