நட்சத்திரம் வீழ்ந்தது!

ஆகஸ்ட் 30 –கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நினைவு நாள்!
நன்றி: கல்கி கேலரி
நன்றி: கல்கி கேலரி

ஆகஸ்ட் 30 – இன்று கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள். 1957-ல் அவர் மறைந்ததையொட்டி 08.09.1957 கல்கி வார இதழில் ‘நட்சத்திரம் வீழ்ந்தது’ என்ற தலைப்பில் அஞ்சலி வெளியானது. கல்கி களஞ்சியத்திலிருந்து உங்களுக்காக... அந்த பதிவு மீண்டும் இன்று...

திரைப்பட உலகில் ஈடு இணையிலாப் புகழ் பெற்று விளங்கிய நகைச்சுவையரசு திரு என். எஸ். கிருஷ்ணனின் அகால மறைவு  தமிழ் மக்கள் யாவரையும் கண்ணீர் வடிக்கும்படி செய்துவிட்டது. அவரது பூத உடலின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் தமிழ் மக்களின் இருதயத்தில் திரு என். எஸ். கிருஷ்ணன் எத்தகைய இடம் பெற்றிருந்தார் என்பதை உணர்ந்து கொண்டிருப்பார்கள். இரண்டு மைல் தூரம் வரையில் ஊர்ந்து சென்ற ஜன சமுத்திரத்தைப் பார்த்தபோது. மறைந்த கலைமேதைக்கு இறுதி மரியாதை செய்யத் தமிழகமே திரண்டு வந்துவிட்டது போல் தோன்றியது. பன்னிரண்டு மைல் தூரம் படித்தவர்களும் பாமரர்களும் நடிகர்களும் ரசிகர்களும் சோகமே உருவெடுத்தாற்போல் சென்ற உருக்கமான காட்சியை என்றும் மறக்க முடியாது.

சினிமா வானில் சென்ற இருபத்தைந்து ஆண்டுளாகச் சுடர் விட்டு ஒளி வீசிக்கொண்டிருந்த நட்சத்திரம் மறைந்துவிட்டது. வாழ்க்கையின் வெற்றிக்கு இன்றியமையாதவை என்று கருதப்படும் கல்லூரிப் படிப்பு, பதவி, பணம் இவற்றில் எதுவுமே இன்றித் தம் உழைப்பினாலும் நடிப்புத் திறமையினாலும் கலை உணர்ச்சியினாலும் மகோன்னத நிலையை அடைந்து தமிழ் மக்களின் மனத்தைக் கொள்ளை கொண்ட தனிப் பெருமை திரு என்.எஸ். கிருஷ்ணன் ஒருவருக்குத்தான் உரியது. தின்பண்டங்கள் விற்கும் பரம ஏழையாக வாழ்க்கையை ஆரம்பித்த திரு கிருஷ்ணன், நகைச்சுவை மன்னராகி மக்களின் இதய சிம்மாசனத்தில் இடம் பெற்றார்.  அவர் பொதுமக்களுக்கு ஹாஸ்யச் சுவையை வாரி வழங்கியதுபோல், தாம் சம்பாதித்த பெரும் பொருளையும் ஏழைகளுக்கு வாரி வழங்கி எல்லோருடைய பேரபிமானத்துக்கும் பாத்திரரானார்.

திரு கிருஷ்ணன் கலை பக்தராக இருந்ததுபோல் தேசபக்தராகவும் விளங்கினார். நாகர்கோவிலிலே நாற்பதாயிரம் ரூபாய் செலவில் காந்தி ஸ்தூபி நிர்மாணித்து, அந்நகரில் தேசத் தந்தையின் ஞாபகம் என்றென்றும் நிலைக்குமாறு செய்தார். வில்லுப்பாட்டு மூலம் தேச சரித்திரத்தையும் காந்தி மகானின் உபதேசங்களையும் அவர் பொதுமக்கள் நன்கு அறிந்துகொள்ளும்படி செய்தார். அவருடைய உபகாரச் சம்பளத்தால் எண்ணற்ற ஏழை மாணவர்கள் பட்டப்படிப்பு பெற்றிருக்கிறார்கள். எத்தனையோ ஏழைகளுக்குத் தம்முடைய செலவில் திருமணம் செய்து வைத்திருக்கிறார். தம்மைத் தேடி வந்தவர்கள் யாராயிருந்தாலும் அவருக்கு உதவி செய்யத் தவறியதில்லை. இவ்விதம் ஒருங்கே கலைப் பணியிலும் தேசப் பணியிலும் ஈடுபட்டுப் பொதுமக்களின் அன்பையும் மதிப்பையும் கவர்ந்து கலைவாணராகத் திகழ்ந்தவர் வேறு எவருமே இல்லை எனலாம்.

ஐம்பது வயதுக்குள் நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் திரைப்பட உலகிலேயே அவர் ஒருவர்தான். அவரும் திருமதி டி. ஏ. மதுரமும் சேர்ந்து ஹாஸ்ய தம்பதிகளாக நடித்ததே பல தமிழ்ப் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.

வ்வளவு படங்களில் நடித்தும்கூட அவரது ஹாஸ்யம்
பொதுமக்களுக்கு அலுப்புத் தட்டவில்லை. அதற்கு மாறாக
திரு கிருஷ்ணனின் நகைச்சுவை ஒவ்வொரு படத்திலும் புது மெருகுடன் விளங்கியது. இதிலிருந்தே மிகக் கஷ்டமான ஹாஸ்ய நடிப்பில் அவரது தனிப்பெரும் மேதையைத் தெரிந்துகொள்ளலாம். ஹாஸ்யச் சுவைக்குத் திரைப்படங்களில் முக்கிய இடம் உண்டு என்பதை முதன்முதலாக ஸ்தாபித்தவர் திரு என். எஸ். கிருஷ்ணன்தான்.

முதன் முதலாக ருஷ்யாவுக்குச் சென்ற கலச்சார தூதுகோஷ்டியில் திரு கிருஷ்ணன் கலந்துகொண்டார். தமிழ்நாட்டின் தனிப்பெரும் நகைச்சுவையை உலகம் வியக்கும்படி செய்து காட்டிய மேதை அவர்.

திரு கிருஷ்ணனின் மறைவு பொதுமக்களுக்கு எவ்வளவு துக்கத்தை உண்டு பண்ணியதோ, அதுபோல் சினிமா வானில் புகழ் பெற்று விளங்கும் நடிகர்களையும் கண்ணீர் விடும்படி செய்துள்ளது. இன்றைய தினம் பிரபலமாகத் திகழும் பல நடிகர்கள் அவரைத் தங்கள் குருவாகக் கருதி வருகிறர்கள். கருத்து வேற்றுமையின்றி நிபுணர்களான சகல நடிகர்களாலும் திரைப்பட உலகத்தின் இணையற்ற நட்சத்திரம் என்று போற்றப்படும் பெருமைக்கு உரியவராகத் திகழ்ந்தவர் திரு கிருஷ்ணன் ஒருவர்தான். அதனால்தான் திரு என்.எஸ். கிருஷ்ணனின் திடீர் மறைவு மக்களின் உள்ளத்தை உலுக்கிவிட்டது.

திரு என். எஸ். கிருஷ்ணனின் மரணத்தினால் தமிழ் அன்னை தன் அருமைப் புதல்வனை இழந்தாள். திரைப்படக் கலை உலகம் ஒரு சிறந்த மேதையை இழந்துவிட்டது. சென்ற பல ஆண்டுகளாகத் தெவிட்டாத ஹாஸ்ய விருந்து அளித்து வந்த ஒரு தலைசிறந்த நடிகரைப் பொதுமக்கள் இழந்தனர்.

தமது அருமைக்கணவரை இழந்து துடிக்கும் திருமதி டி.ஏ.மதுரத்துக்கு எந்த மொழியில் ஆறுதல் கூறமுடியும்?  “துக்கத்துக்கு ஆறுதல் கடிதம் எழுதியோ, நேரில் கண்டு பேசியோ சமாதானம் சொல்வது இயலாத காரியம்: எத்தனை பேர் பங்கு கொண்டாலும். கொள்முதல் குறையாது. கிருஷ்ணன் காலி செய்த இடத்தில் வேறு யாரும் புகுந்து புகழ் பெற முடியாது" என்று ராஜாஜி அவர்கள் திருமதி டி.ஏ. மதுரத்துக்கு எழுதியிருக்கும் ஆறுதலைவிட வேறு என்ன கூறமுடியும்?

அவரது பிரிவால் ஆறாத் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ரஸிகப் பெருமக்களுக்கும் நமது அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com