நட்சத்திர இரவு (The Starry Night)

நட்சத்திர இரவு (The Starry Night)
Published on

இந்த ஓவியத்தைப் பாருங்கள்.

உலகின் மிகச் சிறந்த ஓவியர்களில் ஒருவராகக் கருதப்படும் வான் கோவில் இந்த ஓவியம் எங்கே வரையப்பட்டது தெரியுமா?

அவர் மனநலம் குன்றிய காப்பகத்தில் இருந்தபோது!

என்னது மனநலம் குன்றிய……?”

ஆம்! அந்தக் கதை பிற்பாடு பார்ப்போம். இப்போது ஓவியம்!

உலக ஓவிச்சரித்திரத்தில் மிக முக்கியமான ஓவியமாக சொல்லப்படும் இந்த நட்சத்திர இரவு ஓவியம் பணக்கார ஓவியச் சேகரிப்பு உற்சாகர்களின் கனவு ஓவியம். இதன் விலையெல்லாம் நமக்கு தேவையே இல்லை. ஏனென்றால் நம்மால் யோசித்துக்கூடப் பார்க்க முடியாத உசரத்தில் இருகிறது இதன் விலை!

இந்த ஓவியத்தின் சிறப்பே அதன் சுழல் வானம் என்கிறார்கள் விற்பன்னர்கள். இந்த ஓவியத்தை வரைந்த பின்னர் வான் கோவே தன் சகோதரனிடம் இதைப்பற்றிய காட்சியை தான் கண்டபோது எப்படி இருந்தது என்பதை விவரித்திருக்கிறார்.

“வானம் நீரின் நீலமாகவும், நீர் அமைதியான நீலத்திலும், நிலமானது மெல்லிய ஊதா, ஊரின் தோற்றம் அழுத்தமான ஊதாவிலும் காற்று மண்டலம் வெங்கல மஞ்சள் அமைதிப்பச்சையின் மீது இறங்கிக்கொண்டிருந்தது. சப்த ரிஷி மண்டல நட்சத்திரங்கள் (the Great Bear) துடிக்கும் பச்சையும் நீலமுமாய் ஒளிர, அந்த வெங்கல மஞ்சளுக்கு நேரெதிர்ப்பதமாய் ஜொலித்த ஜாலம்…”

பாருங்கள், வான் கோவின் வர்ணனையே என்ன ஒரு வண்ண ஓவியமாய் மிளிர்கிறது!

வான் கோக் மனநோய் மற்றும் மருட்சிகளால் அவதிப்பட்டார், மேலும் அவரது மன உறுதியற்ற தன்மையக் குறித்து அவர் கவலையடைந்தபோதிலும், அவர் அவரது உடல் ஆரோக்கியத்தைப் புறக்கணித்தார், ஒழுங்காகச் சாப்பிடாமல், பெரிதும் குடித்தார். வறுமையால் அவருக்குக் கோபம் அதிகரித்தது. ஒரு சமயம் கோபத்தில் அவர் தனது இடது காது பகுதியைத் துண்டித்துக்கொண்டார். அவர் ஒரு காலகட்டத்தில் செயிண்ட்-ரெமியில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப் பெற்றார். அவர் மருத்துவமனையில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, பாரிஸ் அருகிலுள்ள ஆவெர்ஸ்-சூர்-ஓஸ்ஸில் உள்ள ஆபுர்கெ ரவொக்ஸிற்கு குடிபெயர்ந்த பிறகு, ஹோமியோபதி மருத்துவரான பால் காகேட்டையின் கவனிப்பில் இருந்தார். அவரது மன அழுத்தம் தொடர்ந்து, ஜூலை 27, 1890 இல், வான் கோக் மார்பில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். காயமுற்ற இரண்டு நாட்களுக்கு பின்னர் இறந்தார்.

பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாழ்நாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே. இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமே விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார்.

முப்பது வயதுவரை தூரிகையைக் கையால் தொட்டதில்லை. முப்பத்தியேழாம் வயதில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அந்த இடைப்பட்ட ஏழு ஆண்டுகளில் வரைந்த ஓவியங்கள் இன்று உலகப்பெரும் பணக்காரர்களின் வரவேற்பறையில் இருந்து அவர்களுக்கு மிகப்பெரும் சமூக கௌரவத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

ஆம் வின்ஸெண்ட் வில்லியம் வான் கோ (Vincent Van Gogh ) என்ற இம்ப்ரெஷனிஸ்ட் ஓவியத்தின் மாமன்னர் பெரும் துரதிர்ஷ்டசாலி!

அது ஏன் துரதிர்ஷ்ட சாலி?

அவர் உயிருடன் இருந்தவரை ஒரே ஒரு ஓவித்தைத்தான் அவரால் விற்றுக்காசாக்க முடிந்திருக்கிறது!

1990-ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற 'கிரிட்டிக்ஸ்' ஓவிய ஏலத்தில் வான் கோவின் 'டாக்டர் கேச்' (Portrait of Dr. Gache) என்ற ஓவியம் அமெரிக்க டாலரில் பெரும் தொகைக்கு விற்கப்பட்டது என்னும் செய்தி எப்பேர்ப்பட்ட நகைமுரண்!

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com