கொஞ்சம் யோசிக்கலாமே!

கொஞ்சம் யோசிக்கலாமே!
Published on

பொதுவாக எல்லா பத்திரிகைகளும் குழந்தை வளர்ப்பு பற்றி தாய்மார்களுக்கு அறிவுரை கூறும்போது உங்கள் குழந்தைகளே மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் என்று மிகவும் வலியுறுத்திக் கூறுகிறர்கள்'

ஆனால், எத்தனை தாய்மார்கள் அந்த அறிவுரையைக் கடைப்பிடிக்கிறார்கள்?!

அதற்காக மற்ற சூடிகையான குழந்தைகளைப் பாராட்டக் கூடாது என்பதல்ல பொருள்.

 "அதோ அந்தப் பையன் பரிசு வாங்கி இருக்கான். எவ்வளவு சந்தோஷமாகப் போகிறான் பார்." என்பதற்கும், "அவனைப் பார் பரிசெல்லாம் வாங்கிக்கிட்டு, நீயும்தான் இருக்கியே தண்டச்சோறு" என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள்.

சரி, எதற்கு இவ்வளவு முன்னுரை என்கிறீர்களா?”

ஒப்பிட்டுப்பேசியதால், வாழ்வையே இழந்தாள் எங்களுக்கு வேண்டியவர் ஒருவரின் மகள். இதோ:

"சுசீலாவின் சிறிய வயதிலிருந்தே அவள் தாயார் எப்போது பார்த்தாலும் தன் குழந்தைகளைத் தன் நாத்தனார் குழந்தைகளுடனும் ஓரகத்தி குழந்தைகளுடனும் ஒப்பிட்டே பேசுவாள். விடுமுறை நாட்களில் எல்லாக் குழந்தைகளும் விளையாடும்போது, தன் குழந்தைகள் தோற்று விட்டால், போயிற்று. ஆரம்பித்து விடுவாள் புலம்பலை. இது அப்படியே வளர்ந்து அந்தக் குழந்தைகளின் ஆழ் மனத்தில் பதிந்து விட்டது.

வாழ்க்கையில் அந்தக் குழந்தைகள் எவராலும் எந்த உயர்ந்த இடத்தையும் பெற முடியவில்லை.

இதில் பெண் குழந்தையான சுசீலாவிற்கு திருமணமும் நடந்தது. இதோடு விட்டதா?

சுசீலாவின் கணவனுக்கு ஒரு கம்பெனியில் உத்தியோகம். அவனது தம்பி. பி.ஈ  படித்திருந்தான். மஸ்கட்டில் நல்ல வேலையில் இருந்தான். இந்தியா வரும்போது பல பொருள்களை வாங்கிவந்து தன் செல்வாக்கினைப் பறைசாற்றிக் கொண்டிருந்தான்.

சுசிலாவிற்கோ ஆழ் மனத்தில், தன் கணவன் அப்படிச் சம்பாதிக்கவில்லை என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. போதாக்குறைக்கு தாயார் வேறு அதை விசிறி விட்டுக் கொண்டே இருந்தாள்.

போதாதா?

தினமும் சண்டை ஆரம்பமாயிற்று. “தம்பியைப் பாருங்கள். கொடுத்து வைத்தவர். தம்பி பெண்டாட்டி அப்படி வரம் வாங்கி வந்திருக்கிறாள். நீங்கள் இங்கேயே குப்பை கொட்டுங்கள். எல்லாம் என் தலைவிதி என்று பொழுது புலர்ந்தால் புலம்பல், போதாக் குறைக்குப் பெண் குழந்தையும் பிறந்து விடவே, வேதனை பொறுக்க முடியவில்லை சுசீலாவின் கணவனுக்கு!

என்ன தோன்றியதோ! என்ன நினைத்தானோ? சண்டை போட்டுக்கொண்டு தாய் வீடு சென்ற மனைவி வருவதற்குள், வீட்டிலேயே தூக்குப் போட்டுக்கொண்டு இறந்து விட்டான்.

இப்போது மனநிலை பாதிக்கப்பட்டவளாக சுசீலா. எப்போது நன்றாக இருப்பாள், எப்போது படபடப்பாள் என்று யாருக்கும் தெரிவதில்லை. பாவம் அந்தப் பெண் குழந்தை.

சுசீலாவின் கோபம் முக்கியமாக அவள் தாயாரைப் பார்த்தால், தலைமீது ஏறிவிடுகிறது. பல்லைக் கடித்துக்கொண்டு, புடவை விலகுவது தெரியாமல், "இப்போ திருப்தியா... திருப்தியா..?" என்று கேட்டுக் கொண்டே 'ணங்... ணங்...' என்று சுவரில் பிடித்து முட்ட ஓடிவருகிறாள்.

இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட என் கணவரின் நண்பரும், மனோதத்துவம் படித்தவருமான ஒருவர் சொன்னார்:

"பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் நிறைய எதிர்பார்ப்பது இயற்கைதான். ஆனால், தாங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும், குழந்தைகளின் எதிர்கால நன்மைக்கு மட்டுமே என்ற ஓர் உணர்வை ஊட்ட பல பெற்றோர் மறந்து விடுகிறார்கள். முக்கியமாக ஒப்பிட்டுப் பேசப்படும் குழந்தை வாழ்க்கையில் முன்னேறியதாகச் சரித்திரமே இல்லை. 'இப்படிச் செய்' என்று சொல்ல மட்டுமே பெற்றோர் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, 'அவனைப் போல இப்படிச் செய்' என்று கூறவே கூடாது" என்றார்.

பெற்றோர்களாகிய நாம் சிந்திப்போமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com