கோலியின் தலைசிறந்த டி20 அரைசதம் இதுதான்.

கோலியின் தலைசிறந்த டி20 அரைசதம் இதுதான்.
Published on

? இந்த வருடம் தீபாவளி எப்படி?

- வாசுதேவன், பெங்களூரு

! இந்தியாவில் தீபாவளி தொடங்குவதற்கு முதல் நாளே முதல் அதிர்வேட்டை கொளுத்திப் போட்டு ஆரம்பித்து வைத்தவர் டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் விராட் கோலி.

டி20 உலகக் கோப்பையின் முதற் போட்டியில் நிச்சயமாக ஜெயிக்க வேண்டிய இடத்தில் இருந்து இந்தியாவின் துவக்க வீரர்கள் பதற்றமாக ஆடி சொதப்பிட, நிச்சயமாக தோற்க வேண்டிய ஓர் ஆட்டத்தை கோலி - பாண்டியாவின் துணையுடன் - இறுதிவரை போராடி வென்றளித்தார். அதுவும் ஹாரிஸ் ரவுபின் 19வது ஓவரில் அவர் அடித்த இரு சிக்ஸர்களையும் மறக்க முடியுமா? கோலியின் தலைசிறந்த டி20 அரைசதம் இதுதான்.

இந்த உலகக்கோப்பை தொடர் பட்டாசாக இறுதிப் போட்டி வரை எடுத்து சென்றால் கோப்பை நமக்குத்தான்.

? தமிழில் முதலில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் எது?

- சண்முக சுந்தரம், பாளையங்கோட்டை

! கிருத்துவ மதத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்த ஜெர்மனியர்கள் வந்து இறங்கிய இடம். ஏற்கெனவே டேனிஸ்காரர்கள் வந்து தங்கள் கோட்டையை அமைத்திருந்த தரங்கம்பாடி.

இப்பகுதியில் தங்கள் சமயப் பணியை தொடங்குவதற்காக வந்தவர்களில் முதன்மையானவர் பாத்தலோமஸ் சீகன்பால்க். 1710 ஆம் ஆண்டு தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்த ஓர் அச்சு இயந்திரத்தை வைத்து ஓர் அச்சுக் கூடத்தை உருவாக்குகின்றார் பாதிரியார் சீகன்பால்க்.

இதில் உருவாக்கப்பட்டதுதான் இந்த பைபிள்.

‘பைபிள் லத்தின் மொழியிலேயே இருக்க வேண்டும்’ என்ற பழைமை வாதத்தை முறியடித்து மக்கள் பேசும் மொழியில் எல்லாம் சமய சிந்தனைகள் செல்ல வேண்டும் என்பதை முன்னெடுத்து செய்த முயற்சியின் விளைவு தான் 1714 ஆம் ஆண்டு தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் புத்தகம். “தமிழில் அச்சு வடிவில் வெளிவந்த முதல் பைபிள்” என்ற பெருமை இந்த நூலுக்கு உண்டு. இன்றும் இது ஜெர்மனி ஹாலே நகரில் உள்ள பிராங்க கல்விக்கூடத்தில் பாதுகாக்கப்படுகிறது.

? அண்ணா ஹிந்தி மொழி குறித்து தெரிவித்த கருத்துக்காக விமர்சிக்கப்பட்டிருக்கிறாரே?

- திருச்சி, ராஜா

! அண்ணாவை அவரது வார்த்தைகளுக்காக தவறான வார்த்தையால் விமர்சித்தது தவறுதான். அந்த மாதிரியான சொற்பிரயோகங்கள் எல்லாம் அரைகுறை அரசியல் அறிவு கொண்டவர்கள் பேசியிருந்தால்கூட ஒதுக்கிவிடலாம். ஆனால், அத்தகைய வார்த்தையை பயன்படுத்தியவர் தமிழில் கணினி பயன்பாட்டை மேம்படுத்த உழைப்பவர்களில் ஒரு அறிவு ஜிவி என்பது தான் அவலமானது. ஆனால், இதர இந்திய மொழிகளைப் போலவே தீவிர இலக்கிய மற்றும் இலக்கண ஆழம் கொண்ட மொழிதான் இந்தியும் என்பதும் உண்மை.

? சீனாவில் ஜி ஜின் பிங் மீண்டும் அதிபராகிறாரே?

- கார்த்திகேயன், திருச்சி.

! விதிமுறைகளை திருத்தி மூன்றாவது முறையாக ஜி ஜின் பிங் பொதுச்செயலாளராகாமல் அடுத்த சீனியருக்கு வழிவிட்டிருப்பாரேயானால் மிகுந்த மகிழ்ச்சியுடன் உலகம் அதை வரவேற்றிருக்கும். தலைவர்களின் பதவி நோக்கம் இயக்க பலவீனத்தின் அறிகுறி. மாநாட்டு விவாதங்களிலும் அரசியல் நகர்வுகளிலும் எதிர்பார்த்த வெளிப்படைத் தன்மை இல்லை. உலக அரங்கில் சீனாவின் வெற்றி கூட்டுத் தலைமையின் வெற்றி. முப்பது ட்ரில்லியன் டாலர் ஜிடிபி என்பது ஜி ஜின் பிங்கின் வெற்றி மட்டும் இல்லை. உண்மையில் அது சீன உழைப்பாளி மக்களின் வெற்றி. அடுத்த 5 ஆண்டுகளில் சீனா பெறப்போகும் வளர்ச்சியின் மீது ஜி ஜின் பிங் ஒரு சர்வாதிகாரி எனும் நிழல் படரத்தான் செய்யும்.

? திராவிட ஆட்சியில் தமிழ் எவ்வித பலனும் அடைய வில்லை என்று பி.ஜே.பி. கூறுகிறதே?

- சி. கார்த்திகேயன், சாத்தூர் – 626203

! தமிழகத்தில் பா.ஜ.க. பிறப்பதற்கு முன்னரே இங்கு மக்கள் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்தவர்கள் திராவிட ஆட்சிக்கு சொந்தமானவர்கள். எந்தப் பலனையும் அடையாமலா தமிழக மக்கள் இவர்களை 50 ஆண்டு காலம் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள்?

? அண்மையில் வெளியான இரண்டு விசாரணை அறிக்கைகள் குறித்து?

- ஹரி கோபி, புது டெல்லி

! தீபாவளி சீசனில் பயங்கரமான ஓசையுடன் வெடிக்கும் என எதிர்பார்க்கபட்ட இரண்டு வெடிகளில் ஒன்று புஸ்வாணம். மற்றொன்று எதிர்பார்த்தைவிட அதிக ஓசையுடன் வெடித்திருக்கிறது.ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடை அளிக்காமல் புதிய கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பி காலதாமதப்படுத்த மற்றொரு கமிஷனுக்கு வழிசெய்திருக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

தூத்துகுடி கலவரத்தையும் துப்பாக்கி சூட்டையும் ஆராய அமைக்கப்பட்ட அருணா ஜகதீசன் ஆணையம் நம்பிக்கை விதைக்கிறது. “தவறு செய்தவர்கள் அதிகாரத்தின் எந்த மட்டத்திலிருந்தாலும் கண்டிக்க, தண்டிக்கப்படுவார்கள்” என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது .

? அளவுக்கு அதிகமாக அரசியல்வாதிகளுக்கு பேராசை இருப்பது ஏன்?

- சொக்கலிங்க ஆதித்யன், ரோஸ்மியாபுரம்

! ‘பேராசை’ என்பதே ‘அளவுக்கு மீறிய ஆசைதானே’ இதற்கு அளவுகோல் ஏது?

? “ஆதீன மடங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத் துறைக்கு கட்டுப்பட்டவையே” என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது பற்றி?

- மாடக்கண்ணு, நெல்லை

! அண்மையில் ஒரு ஆதினத்தின் சொத்துக்கள் முறைகேடாக விற்கப்பட்ட வழக்கில், நீதியரசர்கள் சொன்ன தீர்ப்பில் சொல்லப்பட்ட கருத்து இது. வரும் காலங்களில் தவறுகள் நேராமல் தடுக்க நீதிமன்றங்கள் இப்படி ஆலோசனைகள் வழங்குவதுண்டு. ஆனால், இதை எல்லா மடங்களுக்கும் ஆதினங்களுக்கும் பொதுவாக்கி சட்டமாக்குவது வேறு சில பிரச்னைகளை உருவாக்கும்.

? தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் "...துணை வேந்தர்கள் நியமனத்தில் ரூ. 40 கோடி, ரூ.50 கோடி...க்கு விற்பனை!!.. என்ற குற்றச்சாட்டு கூறியுள்ளது பற்றி?...

- கே.ஆர்.ஜி. ஶ்ரீராமன், பெங்களூரு

! ‘முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு இன்னுமொரு தலைவலி’ என்ற எண்ணம் மேலெழுந்தவாரியாக எழுந்தாலும், எழும் முக்கிய கேள்வி, ‘அப்போது பதவிலியிருந்த இவர் ஏன் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை?’

? “அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் அறிவிப்பதை தடை செய்ய வேண்டும்” என்கிறாரே பிரதமர் ?

- சாமிநாதன், வேட சந்தூர்.

! அதனால்தான் மாநில சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் ‘வீட்டிற்கு இரண்டு சிலிண்டர்’ என்று அறிவித்திருக்கிறது. தேர்தல் அறிக்கையில் கட்சி அறிவித்தால் அது தவறு. அதை பதவியிலிருக்கும் போது அறிவித்துவிட்டு, ஓட்டு கேட்டால் தவறில்லை. இது பா.ஜ.க. மாடல்.

? சட்டமன்றத்துக்கு பன்னீர்செல்வம் பவுன்சர்களுடன் வந்தாராமே?

- ரவி, மதுரை

! அப்படியெல்லாம் வர அது அ.தி.மு.க. பொதுக்குழு இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் சட்டமன்ற பணிகள் சார்ந்த அதிகாரிகளையும் தவிர, மற்றவர்கள் சட்டமன்றத்தில் நுழைய முடியாது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com