தோழி - 21

தோழி - 21
Published on

ஓவியம்; தமிழ்

“வித்யாவதி என்னும் நான், இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும், உண்மையாகவும் உளச்சான்றின்படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், அரசியல் அமைப்புக்கும் சட்டத்துக்கும் இணங்கி, அச்சமும் ஒருதலைச்சார்பும் இன்றி, விருப்பு வெறுப்பை விலக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதைச் செய்வேன் என்றும் இறைவனின் பெயரால் உறுதி ஏற்கிறேன்”

வாசித்து முடித்ததும் பூந்தொட்டிகளாலும் மலர்ச் சரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த மேடையின் நடுவே, முதுகுயர்ந்த நாற்காலியில் அமர்ந்திருந்த, ஆளுநர் மிஸ்ராவைப் பார்த்து வணங்கினாள் வித்யா. பின் அவையைப் பார்த்துக் கையசைத்தாள். விரலை உயர்த்தி ‘வி’ குறி காட்டினாள். அவையில் ஓ! என்று ஓர் உற்சாகக் கூவல் எழுந்தது. யாரோ “வெற்றிச் செல்வி” என்று முழங்கினார்கள். வாழ்க என்று தொடர் முழக்கங்கள் எழுந்தன.

இப்போது அந்த ‘வி’ விக்டிமைக் குறிப்பதல்ல. விக்டரை – வென்றவரைக் –குறிப்பது என்ற  எண்ணம் மனதைக் கடந்த போது வித்யா புன்னகைத்தாள்.

தன்னைப் பார்த்துத்தான் புன்னகைக்கிறாள் என்று நினைத்த முருகய்யன் தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்றார். முதல் வரிசையில் முதல் இருக்கையில் அமர்ந்திருந்த அவர்தான், முதல் பூங்கொத்தையும் நீட்டினார். அதன் பின் வரிசையாய் எத்தனையோ பூங்கொத்துக்கள். வாழ்த்துரைகள். வணக்கங்கள். இடுப்பை நெளித்துக் கொண்டு போடப்பட்ட கூழைக் கும்பிடுகள். எல்லாவற்றையும் புன்னகையோடு கடந்தாள் வித்யா. ஏற்றுக் கொண்டாளா, நிராகரித்தாளா என்று யாராலும் கணிக்க முடியவில்லை.

கணிப்புகளைப் பொடிப் பொடியாக நொறுக்கி விட்டுத்தான் காலம் நகர்ந்திருந்தது. போட்ட கணக்குகள் பொய்யாகின. ஊடகங்களின் ஊகங்கள் இப்போது வெளிறிப் போய் உளறல்களைப் போலத் தெரிந்தன.

பேசிக்கொண்டே இருந்த பெரியவர் மூர்ச்சை போட்டு விழுந்தார் என்ற செய்தி பத்திரிகைகளை எட்டியதுமே அவை பரபரப்பாகின. அடுத்த முதல்வர் யார் என்று ஆருடங்கள் சொல்லத் தொடங்கின. கட்சி கலகலத்துப் பின் பிளவுபடும் என்று கணக்குகள் போட்டன. முருகய்யனுக்கும் வித்யாவிற்கும் இடையே மூண்ட பகை மூர்க்கமான மோதலாகும் எனக் கட்டுரைகள் தீட்டின.

தர்க்க பூர்வமாகப் பார்த்தால் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும். ஆனால் அரசியல் தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டது. கைப்பிடிக்குள் அடங்காப் பெருங்கடல் அது.

முற்றுப் புள்ளி போல், சிறிதாய் மூளையில் ரத்தம் கட்டிக் கொண்டிருக்கிறது, பெரியவரை அமெரிக்கா கொண்டு போனால் பிழைக்க வைக்கலாம் என மருத்துவர்கள் சொன்னபோது முருகய்யன் மனமொடிந்து  போனார். வித்யா பரபரவென்று செயலில் இறங்கினாள். பிரதமரைத் தொடர்பு கொண்டு பேசினாள். ஒர் ஆகாய விமானம் ஆம்புலன்ஸாக மாறிச் சென்னைக்கு வந்து சேர்ந்தது.

நினைவிழந்த நெடிய மேனியாய் படுக்கையிலிருந்த பெரியவரோடு முருகய்யனும் சில மருத்துவர்களும் அமெரிக்கா செல்வதென்று முடிவாயிற்று. அறைக்குள் அடைந்து கொண்டு நடந்ததை எல்லாம் அசை போட்டுக் கொண்டிருந்தாள் வித்யா. அப்போது வாசலில் வந்து நின்றார் முருகய்யன். வணங்கினார்.

அவளுக்குள் எழுந்த ஆச்சரியத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் வரவேற்று வணங்கினாள் வித்யா

“நாளைக்குப் புறப்படறோம். போவதற்கு முன் உங்களிடம் ஒன்றைச் சொல்லிவிட்டுப் போக வேண்டும் என்று தோன்றியது, வந்தேன்” என்றார் முருகய்யன்

“அனுபவம் உங்களுக்குச் சொன்ன பாடங்களை உங்களிடமிருந்து அறிந்து கொள்வதில்  எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு” முகமனைப் போல் இல்லாமல் பொத்தாம் பொதுவாகச் சொல்லி வைத்தாள் வித்யா.

புன்னகைத்து விட்டு முருகய்யன் பேச ஆரம்பித்தார்:

“பத்திரிகைகள் என்னவெல்லாமோ எழுதுகிறார்கள். அவற்றை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்”

“நான் அவறைப் படிப்பதே இல்லை. என்னைப் பற்றி என்னைவிட யாருக்குத் தெரியும்? என்னை நான் யாருக்கு நிரூபிக்க வேண்டும்?”

“அவர்களுக்குப் பசி. பரபரப்பைக் கிளப்பிப் பணம் பார்த்துவிட வேண்டும் என்ற பசி. அதனால் கற்பனைகளை விற்பனை செய்கிறார்கள். கயிறு திரிக்கிறார்கள். கட்சி கட்டிக் கொண்டு ஆடுகிறார்கள்.”

“நானும் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறேன். ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது”

“இப்போது எல்லாம் மாறிவிட்டது. அதைத்தான் பெரியவரும் சொன்னார்”

“பெரியவரா?”

“பேசிக் கொண்டே இருந்தார், நினைவிழந்தார்” என்று எழுதுகிறார்களே, அவர்களுக்கு அவர் யாருடன் பேசிக் கொண்டிருந்தார், எதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் எனத் தெரியுமா? அவர் என்னோடுதான் பேசிக் கொண்டிருந்தார். உங்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்”

“என்னைப் பற்றியா?” திகைப்பும் வியப்பும் வித்யாவைத் தொற்றிக் கொண்டது. ”என்னைப் பற்றியா? என்ன சொன்னார்?”

“இரண்டு மூன்று நாட்களுக்கு முன் பெங்களூரிலிருந்து இரண்டு தொழிலதிபர்கள் வந்திருந்தார்கள். ஏதோ கம்ப்யூட்டர், கிம்ப்யூட்டர் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சொன்னதில் பாதிக்கு மேல் புரியவில்லை. ஆனால் அவர்கள் சொன்ன ஒரு வாக்கியம் தலைவர் மனதில் ஆழப் பதிந்து விட்டது.”

“அப்படி என்ன சொன்னார்கள்?”

“சொல்கிறேன். சொல்கிறேன். அவர்கள் எழுந்து போகும் போது வேலைக்கு நல்ல ஆட்கள் இருந்தால் சிபாரிசு செய்யுங்கள், சேர்த்துக் கொள்கிறோம் என்றவர்கள். அவசரமாக கூட ஒரு வரியும் சேர்த்துக் கொண்டார்கள். ‘எங்களுக்கு படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கியவர்கள் வேண்டாம். ஸ்மார்ட் பீபிள்- இன்னும் சொல்லப்போனால் ஸ்ட்ரீட் ஸ்மார்ட் பீபிள்தான் – வேண்டும் என்றார்கள். அப்படியென்றால்? என்றார் பெரியவர். புத்திசாலிகள் வேண்டாம், கெட்டிக்காரர்கள்தான் வேண்டும் என்றார்கள்.”

“அட!”

“ இத்தனை நாளாய் பரிட்சையில் முதல் மார்க் வாங்குகிற புத்திசாலிகள்தான் கெட்டிக்காரர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்திருக்கிறோம். ஆனால் இரண்டும் வேறு வேறு என்று புரிந்து கொள்ளவே நமக்கு இத்தனை நாளாயிற்று என்ற பெரியவர் இப்போது எல்லாம் மாறிவிட்டது முருகா என்றார்.”

“வியாபாரிகளுக்கு இது ரொம்ப நாளைக்கு முன்பே தெரியும். அரசியல்வாதிகளுக்குத் தெரியவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது”

“அப்போதெல்லாம் அரசியல் வியாபாரமாகவில்லையே அம்மா. அப்போதெல்லாம் கட்சிப் பத்திரிகை படிப்போம். காசு கொடுத்து வாங்க வசதி இருக்காது. நாலைஞ்சு பேராக சேர்ந்து கடைசி வரி வரை படிப்போம். கசங்கிப் போகும் வரை வாசிப்போம்.  கட்சிக் கூட்டத்திற்குப் போவோம். மாநாட்டுக்கு போவோம். அந்தப் பேச்சுக்களைக் காது கொடுத்துக் கேட்போம். கேட்டால் ஒரு ஆவேசம் வரும். அநியாயத்தை வெட்டிச் சாய்த்துவிட்டுதான் அடுத்த வேலைனு வரிஞ்சு கட்டுவோம்.  நாங்கள் எல்லாம் ஒரு லட்சியத்தோடு அரசியலுக்கு வந்தோம். ஆதிக்க சக்திகளை வீழ்த்த வேண்டும் என்ற வெறியோடு வந்தோம். ஏழைகளை எழுப்பி நிற்க வைக்க வேண்டும் என்று வந்தோம். ஏனெனில் நாங்களே ஏழைகளாக இருந்தோம். இப்போது எல்லாம் மாறிவிட்டது!

பெரியவர் சொன்னார்: முன்பெல்லாம் திருநாகேஸ்வரத்தில் வீதியோரக் கடைகளில் வேட்டி கொண்டு வந்து விற்பார்கள். வாங்க வருகிறவர்கள் விலை கேட்பார்கள். பேரம் படிந்தது என்றால் வாங்கிக் கொண்டு போவார்கள். இப்போது ஒரு சட்டை வாங்க வேண்டு மென்றால் ஒன்பது சட்டைகளைப் பார்க்கிறார்கள். சந்தைக்கு வந்த பொருட்களை வாங்கிப் போவது என்பது ஒரு காலம். சந்தைக்குப் பொருளைத் தயார் செய்வது என்பது இந்தக் காலம். அப்போது பெரிய பேனர், விளக்கலங்காரம், விளம்பரம், தள்ளுபடி, இலவசம், வாய்ச் சாதுர்யம் எல்லாம் கிடையாது. இப்போது அவையெல்லாம் இல்லாமல் முடியாது. நாமும் மாறணும் இல்லேனா காணாமல் போயிடுவோம் முருகா என்றார். கடைசியா நான் நடிச்ச படம் இரண்டு மூணு சரியாப் போகலை. எனக்கு மவுசு குறைஞ்சு போச்சா? இல்லையே கூட்டம் கூட்டமா வந்து குடும்பத்தோடு ஓட்டுப் போடறாங்களே. அப்ப படம் ஏன் போகலை? ஏன் போகலைனா  சரக்கு பழைய சரக்கு. சொன்னதையே சொல்லிட்டிருந்தா எத்தனை நாளைக்குப் பார்ப்பான்? போய்யானு எந்திருச்சி போயிற்றான். புதுசு புதுசா ஏதாவது செய்யணும்னு சொல்லி நிறுத்திய பெரியவர், அப்போ உங்களைப் பற்றி சொன்னார். அதனாலதான் நான் போய் அவங்களை அரசியலுக்கு அழைச்சுட்டு வந்தேன் என்று சொன்னார்.

அதுவரைக்கும் நான் நீங்கதான் ஆசைப்பட்டு அரசியலுக்கு வந்திருக்கீங்கனு நினைச்சிட்டு இருந்தேன். அப்புறம் பெரியவர் இன்னொண்ணும் சொன்னார்: “நீ என்னவோ அவங்களை உன் எதிரினு நினைச்சுக்கிட்ட. அவங்க உன்னை எதிரினு நினைச்சுட்டாங்க. ரெண்டு பேரும் மோதிக்கிட்டதல யாருக்கு லாபம்? அதை திருச்செந்தூர் காண்பிச்சிருச்சு. ஒண்ணு சொல்றேன் ஞாபகம் வைச்சுக்க. உனக்கு, அவங்களுக்கு, எனக்கு எல்லோருக்கும் ஒரே எதிரிதான். என் எதிரிதான் உங்களுக்கும் எதிரி. நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் எதிரி இல்லை. எனக்கு யார் எதிரினு தெரியும்ல? நீங்க சண்டை போட்டுக்கிட்டு அவரை ஜெயிக்க வைச்சிராதீங்க. இது என் வேண்டுகோள், உத்தரவு, கட்டளை எப்படி வேணா வைச்சுக்கங்க என்று சொல்லிக்கிட்டே இருந்தவர் சடார்னு மயக்கமாயிட்டார்.

இப்ப நாளைக்கு அவர் கூட அமெரிக்கா கிளம்பறேன். அவரை மீட்டுக் கொண்டு வரணும்கிறது ஒன்றுதான் என் லட்சியம். அவர்தான் என் தலைவர். அந்த இடத்தில வேறு யாரையும் ஏத்துக்க என்னால முடியாது. அதே நேரம் நான் உங்களுக்குப் போட்டியா மறிச்சுக்கிட்டு நிற்க மாட்டேன். நீங்க கட்சியை நடத்துங்க. நான் அரசியல்ல இருந்து விலகிக்கிறேன். அவர் எப்போ இது என் உத்தரவு சொல்லிட்டாரோ அதற்கப்புறம் அதை எப்படி மீற முடியும்? அதுவும் அவர் இந்த மாதிரி இருக்கிற சூழ்நிலைல? அவரோட எதிரியை வீழ்த்தணும். அது உங்களால முடியும். அவர் செயலா செளக்கியமா இருந்த வரைக்கும் அவரோட எதிரியை எழுந்திருக்க விடலை. அந்த மாதிரி நீங்களும் அந்த எதிரியை வீழ்த்தணும் அதுக்கு நான் குறுக்க நிற்க மாட்டேன். குறுக்க நிற்க மாட்டேன் என்பது மட்டுமில்ல. துணையாவும் நிற்பேன். அது என் தலைவன் எனக்கிட்ட ஆணை. அவர் மேல சத்தியமா நான் இதைச் சொல்றேன்னு நீங்க எடுத்துக்கலாம்”

முருகய்யன் பேசி முடித்து விட்டு பதிலுக்குக் காத்திராமல் எழுந்து கொண்டார்.நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன், விடை பெற்றுக் கொள்கிறேன் என்பது போலிருந்தது அவரது பாவனை

மெரிக்காவிலிருந்து பெரியவர் வரவில்லை. முதலில் அவர் மறைவுச் செய்தி வந்தது. பின் அவர் பூத உடல் வந்தது. பிரம்மாண்டமாய் இறுதி ஊர்வலம் நடந்தது. ஒரு லட்சம் பேர் கூடினார்கள் என வட இந்திய ஊடகங்கள் எழுதின. உண்மையோ பொய்யோ மிகையோ, சென்னை நகரம் திணறியது என்பது நிஜம். வீதிக்கு வீதி சந்துக்கு சந்து அவரது திரைப்படப்பாடல்கள் ஒலித்தன. மதுரைக்கு அருகில் நான்கு பேர் தீக்குளித்தார்கள். அவர்களில் இருவர் பெண்கள். அரசியல் தலைவர் மறைவுகாகப் பெண்கள் தீக்குளித்தது என்பது அதுவரை வரலாற்றில் இல்லை. இறுதி அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் இந்தத் திரளையும் திணறலையும் கண்கூடாகப் பார்த்தர்.

பெரியவரை மீட்டுக் கொண்டு வருவேன் என்று முருகய்யன் சொன்ன வார்த்தைகள் பொய்த்தன. ஆனால் அவர் வித்யாவிற்குக் கொடுத்த வாக்கைக் கைவிடாமல் காப்பாற்றினார். தனது தலைவன் தனக்கு இட்ட கடைசிக் கட்டளை, அது அவரது மரண சாசனம் என்று அவர் நிச்சயமாக நம்பினார். வித்யாவிடம் கட்சியை விட்டுவிட்டு ஒதுங்கி நின்றார்.

‘என் தலைவரையன்றி வேறு யார் தலைமையையும் ஏற்க மாட்டேன், அதனால் அரசியலை விட்டு விலகுகிறேன்” என்று அவர் விடுத்த அறிக்கையை வித்யாவிற்கு எதிரானது ஊடகங்கள் விளக்கவுரை எழுதின. “என் தலைவன் எனக்கிட்ட இறுதிக் கட்டளையை என் மூச்சு ஓய்வதற்குள் முடிப்பேன். எதிரிகளைச் சாய்ப்பேன்” என்ற அவரது வார்த்தைகள் வித்யாவைக் குறிப்பவை  என்று விளக்கங்கள் எழுதின. மறுப்பு ஏதும் சொல்லாமல் வித்யாவும் முருகைய்யனும் மெளனமாக முறுவலித்தனர். மெளனம் சம்மதம் என நம்பிய எதிர்கட்சிகள் உற்சாகம் கொண்டன.

தில்லி திரும்பிய பிரதமர் வித்யாவை அழைத்தார். அதிகம் காலம் தாழ்த்தாமல் தேர்தலை நடத்தி முடித்து விட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார்.

“எனக்கு அதிகாரம் வந்தா நான் சோறு போடுவேன். ஏழைகளுக்குச் சோறு போடுவேன். ஏன்னா, எனக்கு ஏழைகளின் பசி தெரியும்.” உணர்ச்சிகள் தொண்டையை அடைக்க குரல் கம்ம பெரியவர் பேசிய காட்சி வீதிக்கு வீதி வீடியோ மூலம் திரையிடப்பட்டது. போதும் போதாதற்குப் பிரசாரத்திற்கு வந்த பிரதமர் சத்துணவுத் திட்டம் பற்றிப் பேசினார்.

கனவு கைக்கெட்டும் தூரத்தில் நெருங்கும் போது காலடியில் தரை நழுவுவதைப் போல உணர்ந்த எதிர்கட்சி அவதூறுப் பிரசாரத்தில் இறங்கியது. பெரியவரைப் பற்றிப் பேசினால் அது தங்களுக்கு எதிராகத் திரும்பும் என்பதை அறிந்திருந்த அவர்கள் தங்கள் பீரங்கிகளை வித்யாவை நோக்கித் திருப்பினார்கள். புருஷோத்தமனை மயக்கிய புதிய வசந்த சேனை எனப் போர்முழக்கத்துப் பேனாக்கள் புழுதியை இறைத்தன. இளைய தலைமுறையினருக்கு இந்த வசனம் என்னவென்று புரியவில்லை. புரிந்தவர்கள் வளைத்துப் போட்டது வசந்த சேனையாக இருக்கலாம், ஆனால் வழுக்கி விழுந்தது புருஷோத்தமனும் அல்லவா? இவர்கள் யாரைக் குறை சொல்கிறார்கள் என எதிர்க் கேள்வி எழுப்பியதும். தங்கள் வசையின் அபத்தத்தை உணர்ந்து எதிர்த்தரப்பு அமைதியானது. பெரியவரைத் தவிர்த்து விட்டு வித்யாவைக் குறி வைத்தார்கள். அவரது ஜாதி சந்திக்கு இழுக்கப்பட்டது. அவரது அம்மாவின் கற்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அவர் மீதே பாலியல் ரீதியான வன்மங்களும் வசைகளும்  வாரி இரைக்கப்பட்டன, அவற்றைக் கேட்டு பெண்கள் முகம் சுளித்தார்கள். அதனை அறியாமல் எதிர்கட்சி அவதூறுகளை அதிகம் வாரி இறைக்க  உதட்டுச் சுளிப்புகள் ஊமைக் கோபங்களாக உருமாறத் தொடங்கின.

வாக்குப் பதிவுக்கு இரண்டு நாள் இருக்கும் போது முருகய்யன் இன்னொரு அறிக்கை விடுத்தார். பெரியவரின் எதிரி யார் என்று சம்பவங்களைச் சாட்சி வைத்து பட்டியல் போட்ட அந்த அறிக்கை  வரலாற்றின் விள்ளல். ஆனால் வாளை விடக் கூர்மையாக இருந்தது. இத்தனை நாள் வித்யாவை அவரது எதிரி என்று விவரித்து வந்த பத்திரிகைகள் இந்தத் திருப்பத்தை எதிர் கொள்ள முடியாமல் திகைத்தன. கடைசி நேர பிரம்மாஸ்திரத்தைக் கண்ட எதிர்கட்சி என்ன செய்வது எனத் தெரியாமல் பீரங்கிகளை அவர் மீது திருப்பின.

அனுதாபம், விசுவாசம், நன்றிக் கடன், ஊமைக் கோபம் எல்லாம் ஓர் அலையாகத் திரண்டு வித்யாவை அதிகாரத்தின் பீடத்தில் கொண்டு அமர்த்தின.

தேர்தல் முடிவுகள் வந்த அன்று வித்யா பால்கனியில் வந்து நின்றாள். வீட்டெதிரே திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து விரலை உயர்த்தி வி குறி காட்டினாள்

வி ஃபார் வெற்றிச் செல்வி.  

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com