தோழி -27

தோழி -27

ஓவியம்; தமிழ்

“அவசரம் என்று சொன்னீர்களாம். ஏதாவது கையெழுத்துத் தேவைப்பட்டால் சென்னையிலேயே வாங்கிக் கொண்டிருக்கலாமே?மூணாறு வரை வரணுமா? வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்து விட்டீர்களா?” வித்யாவின் கேள்விக்கு ஆடிட்டர் உடனே பதில் சொல்லிவிடவில்லை. சற்று தயங்கினார்.

“அதில்தான் பிரசினை. சென்னையிலேயே பேச முயற்சித்தேன். நீங்கள் பிசியாக இருந்தீர்கள். விரிவாகப் பேச வேண்டும். இங்கு வந்தால் பேச முடியும் என்று தோன்றியது” என்றார் ஆடிட்டர்.

“என்ன பிரசினை?” என்ற வித்யா “சித்ரா!” எனக் கூவினாள்

சீராக ரோமம் கத்தரிக்கப்பட்ட பசும் ஆடுகளைப் போலப் பரவி நின்ற தேயிலைத் தோட்டங்களையும், மலைமுகடுகளில் மிதந்து கொண்டிருந்த மேகங்களையும் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சித்ரா ,”இதோ வந்துட்டேன் அக்கா!” என்று ஓடி வந்தாள்.

“அந்த ரூம் ஹீட்டரைக் கொண்டு வந்து பக்கத்தில வை. நீயும் உட்கார்” என்ற வித்யா, “சொல்லுங்கள், என்ன பிரசினை?” என்றாள் ஆடிட்டரைப் பார்த்து மறுபடியும்.

“உங்கள் முதலீடுகள் உங்களது இந்தாண்டு வருமானத்தை விடக் கூடுதலாக இருக்கின்றன அவற்றை எப்படிக் கணக்கில் கொண்டு வருவது என்று தெரியவில்லை”

“வழி சொல்ல வேண்டியவர் நீங்கள். ஆனால் நீங்கள் என்னிடம் வழி கேட்கிறீர்கள். விவசாயம் மூலம் வந்த வருமானம் என்று காண்பியுங்கள். விவசாய வருமானத்திற்கு வரி கிடையாது இல்லையா?|

“செய்யலாம். ஆனால் அதற்கு உங்கள் பேரில் ஏதாவது நிலம் இருக்க வேண்டும்”

“ஏன் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்ய முடியாதா?” என்றாள் சித்ரா குறுக்கிட்டு.

‘அட, பரவாயில்லையே, இவள்’ என்பது போலச் சித்ராவைப் பார்த்த வித்யா. “உனக்கு ஊர்ல நிலம் இருக்கா?” என்றாள்

“பொம்பளைங்க பேர்ல ஏது நிலம்? அண்ணங்க பேர்ல கொஞ்சம் இருக்கு”

“அந்த விவரம் கேட்டு வாங்கிக்கங்க. அதை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்ணினதா காமிச்சுருங்க. என்னடி உனக்கு ஓகேதானே?”

“எனக்கு ஒண்ணும் இல்லக்கா. ஆனா அவங்க யாருக்காவது வாரத்திற்கு கொடுத்திருங்களானு தெரியலையே!”

“கொடுத்திருந்தா பணத்தைக் கொண்டு குத்தகைய நம்ப பேருக்கு மாற்றச் சொல்லு”

“இந்த வருஷம் இதை வைச்சு நான் சமாளிச்சுடுவேன் மேடம். அடுத்த வருஷத்திற்கு நான் ஒரு யோசனை சொல்லவா?”

“என்ன?” விவசாய வருமானத்தை ஓரளவிற்குத்தான் காட்ட முடியும். பொதுவா ஒரு மகசூல்ல எவ்வளவு தேறும்னு எல்லாருக்கும் தெரியும். ஒரு போகத்தில ஒரு கிராமத்தில எவ்வளவு விளைஞ்சதுனு அரசாங்கத்திட்ட கணக்கு இருக்கும். அதுனால நாம் ஓரளவுக்கு மேல அதில மிகைப்படுத்த முடியாது. பத்திரிகையோ டிவியோ ஆரம்பிச்சுடுங்க. அதில சந்தா, விளம்பர வருவாய்னு காமிச்சிட முடியும்.”

“சரி பார்க்கலாம்”

பேசிக் கொண்டிருக்கும் போதே வேலைக்காரப் பெண் வந்து தயங்கி தயங்கி நின்றாள்.

“நீ எதுக்கு வந்த? முக்கியமா பேசிக்கிட்டு இருக்கோம்கிறது தெரியலை? என்ற சித்ராவின் அதட்டலைக் கேட்டு அரைக்கணம் மெளனமான அவள் பின் சொன்னாள்: “ஐயா வந்திருக்காங்க!”

“ஐயாவா? எந்த ஐயா? எங்க வீட்டு ஐயாவா?” என்றாள் சித்ரா.

“முருகய்யன்னு சொல்லச் சொன்னாங்க!”

முருகய்யனா? இங்கா? திடுக்கிட்டுத் திரும்பிய வித்யா, ஆடிட்டரைப் பார்த்து, “சரி சார்! வேற ஏதாவது சொல்லணும்னா இவள்கிட்டச் சொல்லிட்டுப் போங்க! சென்னையில நான் பிஸியா இருந்தாலும் இவள்கிட்டச் சொல்லுங்க. எனக்குத் தகவல் வந்திடும்” என்று அடுத்த அறையில் காத்திருக்கும் முருகய்யனைச் சந்திக்க கிளம்பினாள். சித்ரா பக்கம் திரும்பி, “ அவரை சீக்கிரம் அனுப்பிச்சுட்டு நீயும் வாடி!” என்றாள்.இப்போதெல்லாம் வா, போ வோடு அவளை அறியாமலே இந்த ‘டி’யும் சேர்ந்து கொள்கிறது என்பதைக் கவனித்த சித்ரா, முறுவலித்தாள்

முருகய்யன் எதற்கு வந்திருக்கிறார்? அதுவும் இவ்வளவு தூரம் இங்கு தேடிக் கொண்டு? 'நான் குறுக்கே நிற்க மாட்டேன்’ எனச் சொல்லி விலகிக் கொண்டுவிட்ட பின்னர், பொங்கி வந்த பாலில் தெளித்த தண்ணீர் மாதிரி,  வித்யாவிற்கு அவர் மீது இருந்த ஆதங்கம் மன வேற்றுமை எல்லாம் விலகிவிட்டது. அவர் சொன்னது மட்டுமல்ல, சொன்ன சொல்லைக் காப்பவராகவும் இருந்தார். அவ்வப்போது தனக்குக் கிடைக்கும் உட்கட்சி விவகாரங்களைத் தெரியப்படுத்துபவராகவும் இருந்தார். போனில் பேசுவார். அல்லது அவரது நம்பிக்கைக்குரிய தேனி சேவியரிடம் சொல்லி அனுப்புவார். சேவியர் ஒரு பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார்.அவர்தான் வித்யாவின் பேச்சுக்களைத் தயாரித்துக் கொடுக்கிறார் என்று ஊரில் பேச்சு. அதனால் அவர் வந்து சந்திப்பதை யாரும் வித்தியாசமாக எடுத்துக் கொள்வதில்லை

கேள்விகளில் மிதந்தவாறே அறைக்குள் நுழைந்தாள் வித்யா. “வாங்க, வணக்கம். ஆச்சரியமா இருக்கே!, என்ன இவ்வளவு தூரம்?”

“சேவியர் தங்கைக்குக் கல்யாணம்னு தேனி வந்தேன். அப்படியே உங்களையும் பார்த்துட்டுப் போலாம்னு தோணிச்சு!”

“ம்?”

“இன்னும் சொல்லப் போனா உங்களைப் பார்க்கலாம்னுதான் சேவியர் வீட்டுக் கல்யாணத்திற்கே வந்தேன்”

“அப்படியானால் விஷயம் முக்கியமானதாகத்தான் இருக்கும்.”

“முக்கியமானதுதான். ஆனால் அவசரமில்லை”

“சொல்லுங்கள்”

“நீங்கள் மதுவைப் பற்றி யோசித்துத்தான் முடிவெடுத்திருப்பீர்கள். ஆனாலும் அது கட்சியை பெரிய அளவில் பாதிக்கும்.”

“பெண்கள் ஓட்டு பற்றிச் சொல்கிறீர்களா?”

“இல்லை இல்லை நான் அதைச் சொல்லவில்லை. அதை நான் நம்பவும் இல்லை. நம் பெண்கள் கணவன்மார்கள் குடித்தால் தப்பு என்பார்கள். சரி என்று குடிப்பவனைப் பிடித்து ஜெயிலில் வைத்தால் அதற்கும் நம்மிடம் வந்து கண்ணீர் விடுவார்கள். அதனால் நான் அதை நம்புவது இல்லை. நான் சொல்வது கட்சிக்காரர்களைப் பற்றி. அவர்கள் இதனால் வறண்டு போயிருக்கிறார்கள். தேர்தல் வந்தால் கட்சிக்காக அவர்கள்தான் களத்தில் சில்லறையை அவிழ்த்துக் கொட்ட வேண்டும். அவர்கள் கையில் காசு புழங்கவில்லையென்றால் எப்படிச் செலவழிப்பார்கள்? இது தெரிந்துதான் பெரியவர் மதுக்கடைகளைக் கட்சிக்காரர்கள் ஏலம் எடுத்துக் கொள்ளும் முறையைக் கொண்டு வந்தார்”

“ஆனால் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஏமாற்றுகிறார்களே?”

“அதைத்தான் சொல்ல வந்தேன். பெரியவர் அதற்கு ஒரு செக் வைத்திருந்தார். கடைகளுக்கு மது விநியோகம் செய்கிற நடராஜ முதலியாரைத் தன் நேரடிக் கண்காணிப்பில் வைத்திருந்தார்.அவர் வீட்டிற்கு எதிரிலேயே ஒரு அமைச்சரைக் குடி அமர்த்தினார்”

“யார்?”

“திருச்செல்வம்”

“ஒவ்வொரு நாள் ராத்திரியும் அன்றாட விற்பனைக் கணக்கு முதலியாருக்கு வரும். முதலியாரிடமிருந்து வர வேண்டியது காலையில் திருச்செல்வத்திற்கு வந்துவிடும். திருச்செல்வம் பகலுக்குள் அதைப் பெரியவரிடம் தெரிவித்து விடுவார்”

“நல்லாத்தான் இருக்கு. இரண்டு பேரும் சேர்ந்து பெரியவரை ஏமாற்றிவிடமாட்டார்களா?”

“அதனால்தான் திருச்செல்வத்தைக் கண்காணிக்கிற வேலையை எனக்குக் கொடுத்தார்”

பெரியவர் எல்லோரையும் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்திருந்தார் என ரஞ்சனி சொன்னது வித்யாவின் நினைவுக்கு வந்தது.

“என்ன செய்யலாம்?”  

“மதுவை அரசு விற்பது என்ற முடிவை நீங்கள் கைவிட வேண்டாம். விட்டால் நீங்கள் பயந்து பின் வாங்கிவிட்டீர்கள் எனப் பிரசாரம் வரும். பெயர் கெடும். ஆனால் கட்சிக்காரகளுக்கு வேறு வழி செய்து கொடுங்கள்”

“அதுதான் என்ன என்று நானும் அன்றிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். யாரும் வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார்கள்”

“கட்சிக்காரர்கள் சிலர் கல்லுரி நடத்த விரும்புகிறார்கள். மத்த ஸ்டேட்லில் எல்லாம் அரசியல்வாதிகள்  நடத்துகிறார்கள்”

“கல்லூரியா?”

“ஆமாம், மெடிகல், என்ஜினியரிங் கல்லூரிகள். இப்போது அவற்றைத் தனியார் நடத்த  மத்தியில் அனுமதி கொடுக்கிறார்கள்.”

“தெரியும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?”

“இவ்வளவு ஏக்கர் நிலம் வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறார்கள். பொறம்போக்கு நிலங்களையும் கண்மாய்களையும் அரசு அவர்களுக்கு நீண்டகாலக் குத்தகைக்குக் கொடுக்க வேண்டும்.”

“கண்மாய்களையுமா?”

“ஒரேடியாகச் சேர்ந்த மாதிரி வேறு எங்குமா நிலம் கிடக்கிறது? என்னிக்கு நம்மூர்ல மழை பெஞ்சு ஏரி நிரம்பியிருக்கு? நுங்கம்பாக்கம் எல்லாம் முன்னாடி ஏரியாகக் கிடந்தவைதானே?”

“ம்,செய்யலாம்.”

“  இன்னொன்று. எல்லோராலும் கல்லூரி ஆரம்பிக்க முடியாது. கையில் அவ்வளவு பணம் இருக்காது. அவர்களுக்கு ஆற்றில் மணல் அள்ள அனுமதி கொடுங்கள். அரசுக்கு தூர் வாரும் செலவு மிச்சம்”

“சரி. அதனால் எனக்கு –ஐ மீன் – கட்சிக்கு எப்படி பணம் வரும்?”

முருகய்யன், சித்ரா, இருவரும் அந்த ஐமீனுக்கு முன் உள்ள வார்த்தையை கவனிக்கத் தவறவில்லை

“பெரியவர் திருச்செல்வத்தைப் போட்டதைப் போல நீங்க ஒருத்தரைப் போட்டு  வசூலிச்சுக்கங்க” என்றார் முருகய்யன்

வித்யா கண்ணை மூடி யோசித்தாள். ஒரு நிமிடத்திற்குப் பின் கண்ணைத் திறந்து கேட்டாள்:

“நீங்கள் அந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்கிறீர்களா?”

“ஐயோ, வேண்டாம்மா” பதறினார் முருகய்யன். “பெரியவருக்காக நான் செய்த போதே என் மேல ஏகப்பட்ட பொல்லாப்பு.ஏகப்பட்ட விரோதம், எல்லாத்தையும் பெரியவருக்காகப் பொறுத்துக்கிட்டேன். நான் பார்த்துப் பெரியவர்கிட்டச் சொல்லி படிக்க வைச்ச பையன்தான் திருச்செல்வம். அவனே மூஞ்சியை முறிச்சுக்கிட்டுப் போயிட்டான். என்னால முடியாதுமா!”

பெரியவருக்காகச் செய்தவர் எனக்காகச் செய்ய மாட்டீர்களா? என்று கேட்க வாயெடுத்தாள் வித்யா. ஆனால் அவளது ஈகோ வாயை அடைத்து விட்டது

“சாமிநாதன் இதற்கு சரிப்படுவார்னு எனக்குத் தோணுது” என்ற முருகய்யனை விழித்துப் பார்த்தாள் சித்ரா. அது வியப்பா, திகைப்பா என முருகய்யனால் தீர்மானிக்க முடியவில்லை

“ஆனால் நீங்க பார்த்து முடிவு பண்ணிக்கங்க” என்று எழுந்து கை குவித்தார். “பெரியவரோட விசுவாசிகளைக் கை விட்டுடாதீங்கனு கேட்டுக்கத்தான் வந்தேன். அவர்கள்தான் கட்சியின் பலமே!” என்றார்

அன்றிரவு முழுவதும் முருகய்யன் சொன்ன யோசனைகள் வித்யாவின் மனதில் புரண்டு கொண்டிருந்தன. நள்ளிரவில், பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த சித்ராவிடம், “நீ என்னடி சொல்ற?” என்றாள்

“என்னக்கா?”

“முருகய்யன் சொன்னதைப் பற்றி என்ன சொல்ற?”

“அவர் சொன்ன ஆளு சரியான ஆள்தான் அக்கா!”

“எந்த ஆளு?”

“அதான் அக்கா. எங்க வீட்டு ஆம்பிளை”

“சாமிநாதனா? உன் வீட்டுக்காரர்ங்கிறதால சொல்றியா?”

“ஐயோ இல்லக்கா!. எங்க அப்பா அவரை மாப்பிள்ளைனோ, மருமகன்னோ சொல்ல மாட்டாரு. என் கிட்டப் பேசும் போது பால்காரர் வந்தாரா போனாரா என்றுதான் விசாரிப்பாரு”

“பால்காரரா? ஏன்?”

“ஆடற மாட்டை ஆடிக் கறப்பாராம். பாடற மாட்டைக் கறப்பாராம். ஆளுக்குத் தகுந்தமாதிரி அதட்டறவங்களை அதட்டி, மிரட்டறவங்களை மிரட்டி குத்தகையைப் பைசா சுத்தமா வாங்கிடுவாரம். அதனாலதான் அந்தப் பேர்”

“ஆனால் அத்தனை கமுக்கமா இருந்தாரே. உன்னைப் பற்றி ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லலியே. ஜாடை மாடையாக் கூட அவர் உன்னைப் பார்க்கலையே!”

“அப்படிப்பட்ட ஆளுதானே அக்கா இந்த வேலைக்கு சரியா வரும்?”

“எப்படிப்பட்ட ஆளு?”

“கழுத்தறுத்தாலும் வாயைத் திறக்காத ஆளு!”

“நல்லா பேசக்  கத்துக்கிட்டு இருக்க”

“ஆனா முருகய்யன் சொன்ன யோசனை எனக்கு புரியலைக்கா. அதென்னெ தலையைச் சுத்தி மூக்கைத் தொடறது!”

“என்ன சொன்னாரு அப்படி?”

“யாரோ சரக்கை விநியோகிப்பாங்களாம். அதை ஆள் போட்டு கண்காணிக்கிறதாம். தினம் தினம் பங்கை வாங்கிக்கிறதாம். அதுக்கு நாமே நேரடியா விநியோகத்தை எடுத்துக்கலாமே, ஏன், என்னைக் கேட்டா  உற்பத்தியையே தொடங்கிடலாமே? நேர காசு கைக்கு வரும்ல?”

“பெரியவர் அதெல்லாம் யோசிக்காமலா இருப்பார்? அதெல்லாம் ரிஸ்க?”

“என்னக்கா, பெரிய ரிஸ்க், புஸ்க்?”

“மக்கு!. எவனாவது பத்திரிகைக்காரன், இல்ல, எதிர்கட்சிக்காரன் மோப்பம் பிடிச்சு வழக்கு கிழக்கு போடுவான். அதிகாரபூர்வமான ரெகார்ட்கள்ல நம்ப பேர் இருந்தா மாட்டிக்கவோம். அப்புறம் ஜெயில்தான்.”

“ நம்ப பேர் இருந்தால்தானே அக்கா, ரிஸ்க்?”

“அப்படீனா?”

“சொந்தக்காரங்க பேர்ல கம்பெனி போடுவோம்”

“திடீர்னு சொந்தக்காரர்களுக்கு எங்க போறது? நமக்கென்ன பிள்ளையா குட்டியா?”

“என்னக்கா இப்படிச் சொல்லிடீங்க?. எனக்கு அண்ணன், தம்பி, மதனி, மாமன் அவங்க பிள்ளைங்கனு ஒரு பெரிய பட்டாளமே இருக்கு. என் பிள்ளைங்கனா அவங்க உங்க பிள்ளைங்களும்தானேக்கா. நில்லுனா நிப்பாய்ங்க. உட்காருனா.”

“உட்கார்வாங்க, அதானே?”

“இல்ல. உட்கார்னா படுத்தே விடுவாங்க”

“அப்ப சொன்ன பேச்சைக் கேட்காத அதிகப் பிரசங்கிங்கனு சொல்ற!”

நள்ளிரவில் எழுந்த அவர்கள் இருவரின் சிரிப்பொலியில் அந்த வனாந்திரமே அதிர்ந்தது.

-தொடரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com