தோழி –29

தோழி –29

ஓவியம்; தமிழ்

“கலா நிலையத்திற்கு வந்த மூணு வருஷத்தில நீ இரண்டு சுத்து பெருத்துட்ட சித்ரா!” என்றான் படுக்கையில் சாய்ந்து கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்த சாமிநாதன்.

“ ஆமாம்! நான் பெருத்துட்டேன், நீங்க மட்டும் இளைச்சுத் துரும்பாயிட்டீங்களா? ஆள் அடையாறுல நின்னா தொப்பை மந்தவெளியை எட்டிப் பார்க்குது!:

“அவ்வளவு மோசமாவா இருக்கு? யாரும் என்கிட்ட சொல்லையே!:”

“ஆமாம். இதை உங்க கிட்ட வந்து சொல்லுவாங்க! மந்திரியிலிருந்து செக்யூரிட்டி வரைக்கும் உங்க அதிகாரத்தையும் தோரணையையும் பார்த்து மிரண்டு போய் கிடக்காங்க. எப்பப் பதவியைப் புடுங்குவீங்களோ, பல்லைப் புடுங்குவீங்களோனு பயந்து கிடக்கான். நடுங்கிட்டு நிக்கறவங்கதான்  உங்ககிட்டு வந்து நரை விழுந்திருச்சி தொப்பை விழுந்திருச்சுனு சொல்லப் போறாங்களா? உங்க மச்சான்தான் சொன்னான். அதுவும் உங்க கிட்டச் சொல்ல பயம். எங்கிட்ட வந்து கலாய்க்கிறான்”

“உன் அண்ணனா? என்ன சொன்னாரு?”

“அண்ணன் இல்ல, தம்பி”

“என்ன சொல்றான்?:

“அக்கா. மாமா குடிப்பாரானு கேட்டான்”

“அடி செருப்பால”

“நான் அப்படிச் சீறல. சிரிச்சேன். சீறினா சொல்ல வந்ததைச் சொல்லாம போயிருவான். அப்புறம் அவன் மனசைத் தெரிஞ்சுக்கிறது எப்படி? சிரிச்சுக்கிட்டே ஏண்டானேன்”

“அவர் தொப்பையைப் பார்த்தா பீர் பெல்லி மாதிரி இருக்குக்கா. ஆளு கூடப் பவுன் கலர் ஆயிட்டாப்ல இருக்குன்னான்!”

“அப்பவும் இளிச்சுக்கிட்டு நின்னியா?”

“அவ்வளவு சுரணை கெட்ட சுப்பியா நானு? டேய், அவர் பீர் கம்பெனி முதலாளியா இருக்கலாம். ஆனா ஒரு சொட்டு தொடமாட்டார்னு சொன்னேன். கூடவே சுருக்குனு தைக்கற மாதிரி இன்னொண்ணும் சொன்னேன். நீ இன்னிக்கு டி.வி. கம்பெனி டைரக்டரா இருக்கலாம். பத்திரிகை முதலாளினு பல பேருக்குப் படியளக்கலாம்.ஆனா நீ திங்கற சோறு அவர் போட்டது. அதன் ஒவ்வொரு பருக்கையிலும் அவர் பேர் எழுதியிருக்கு. ஒவ்வொரு வேளை சோறு உள்ள இறங்கும் போது அது நினைப்பிருக்கட்டும்னு சொன்னேன். சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். ஸாரிக்கானு போயிட்டான்”

“நிஜம்மா சொல்லு. பருக்கையில ஏன் பேரா எழுதியிருக்கு?. அப்படி எழுதியிருந்தா அதில உன் பேர்தான் இருக்கும். உன்னாலதான் இவன்களுக்கு இவ்வளவும் கிடைச்சது. நீ இல்லேனா கழுத்தில டையைக் கட்டிக்கிட்டு கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கியிருப்பானுங்க. இல்ல, மானேஜர், கணக்குப் பிள்ளைனு எவனுக்காவது ஜால்ரா அடிச்சு சலாம் போட்டுக்கிட்டு இருப்பாங்க. இப்ப, உட்கார்ந்து தின்னா மூணு தலைமுறைக்குத் திங்கலாம். ஆனா இவங்க படுத்துக்கிட்டு திங்கணும்னு ஆசைப்படறாங்க!” என்றான் சாமிநாதன்.

சித்ரா மெளனமாகப் புன்னகைத்தாள். அவளுக்கும் பெருமையாகத்தான் இருந்தது. சாமிநாதன் சொல்வதில் சற்றும் மிகையில்லை. உடன்பிறந்தவர்கள் எல்லோரையும் கைபிடித்துக் கரையேற்றியாகிவிட்டது. அவர்களை மட்டுமல்ல அவர்களது வாரிசுகளையும். அண்ணனுக்கும் அவர் பெண்ணுக்கும் செய்தது மட்டுமல்ல, அதைப் போலத் தம்பிகள் அவர்களது குழந்தைகள் எல்லோருக்கும் ஏதோ செய்தாகிவிட்டது. அதற்கப்புறமும் அவர்கள் சகலை, சம்பந்தி என்று வந்து நின்றார்கள். அவர்களுக்கும் கை காட்டி வழி சொல்லியாயிற்று. இன்று யாரும் அரை வயிற்றுக்குச் சாப்பிட்டு, அடுத்தவர் கை பார்த்து நின்ற, வைத்தியர் சிவகடாச்சத்தின் குழந்தைகள் அல்ல. வெயில் படாத வீடுகளில், வெள்ளித் தட்டுக்களில், விருந்து சாப்பிடும் கோடீஸ்வரர்கள்.

வெள்ளிக் குத்துவிளக்கில் ஏற்றிய சுடர் போலப் பொலியும் அவள் புன்னகையைப் பார்த்துக் கொண்டே சொன்னான்:

“அவங்களுக்கு மட்டுமா? எனக்காகவும்தான். அவங்க அடிச்சுத் துரத்தினதற்குப் பின்னும் அங்க போய் இழைஞ்சுக்கிட்டு நின்னது எனக்காகத்தானே”

“ஏன் எனக்காகவும்தான்”

என்ன என்பது போல் அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தான் சாமிநாதன்.

“ அடி விழுந்தது எனக்குத்தானே? ஞாபகம் இருக்கா?”

“அந்த நாளை எப்படி மறக்க முடியும்?” என்றான் சாமிநாதன். வித்யா வீட்டை விட்டு வெளியே அனுப்பிய அந்த விடிகாலை அவன் மனதில் அஸ்தமிக்கவில்லை.” ஆனால் அந்த அவமானத்தைத் துடைத்துப் போட்டுவிட்டு அங்க மறுபடியும் போய் நிற்கலாம் என்று நீ சொன்ன போது எனக்குத் திகைப்பாகத்தான் இருந்தது”

“துடைத்துப் போடவில்லை. விழுங்கியிருக்கிறேன்.”

அரைக் கண மெளனத்திற்குப் பின் சித்ரா சொன்னாள்: “விழுங்கியிருக்கிறேன். விஷத்தை விழுங்கியிருக்கிறேன். அதை ஒருநாள் கக்கத்தான் வேண்டும். கக்குவேன்”

தணல் போல் முகம் சிவந்தது. குரல் கூர்மையாயிற்று, நாசிகள் விரிந்து சுருங்கின.

“அழுகிறயா சித்ரா?”

“அழுதேன். அறை வாங்கிய கொஞ்சகாலத்திற்கு அழுது கொண்டுதான் இருந்தேன். அப்போது நீங்கள்தான் சொன்னீர்கள். அழுவதால் ஏதும் ஆகாது. மன்னித்துவிட்டு, மறந்துவிட்டு, பெரியநாயகியாகவே திருவலஞ்சுழிக்குத் திரும்பிப் போ! அல்லது உன்னைக் காலில் விழச் செய்தவளை உன் காலில் விழச் செய்.அதற்கு உனக்குத் திராணி இருக்கா? என்றீர்கள்”.

“ம்”

“அன்று திராணி இல்லை. அவளுக்குப் பெரியவர் ஆதரவு இருந்தது. அரசியல் பலம் இருந்தது. பணம் இருந்தது. படிப்புக் கொடுத்த இங்கிலீஷ் இருந்தது. இது எதுவும் எனக்குக் கிடையாது. அன்று அவளை எதிர்க்க நினைத்தால் என்னை எளிதில் நசுக்கி எறிந்திருப்பாள். அவளைக் காலில் விழச் செய்ய வேண்டுமானால் எனக்கும் அதிகாரபலம், அரசியல்பலம், ஆள்பலம், பணபலம் எல்லாம் வேண்டும். முதலில் அதை சம்பாதிக்க வேண்டும். இன்னொரு இடத்தில் இருந்து கொண்டு இத்தனையும் சம்பாதிப்பது எளிது இல்லை. அவளிடமிருந்தே சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தேன். அவள் மூலமே சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தேன். இதற்கெல்லாம் உங்களிடம் வழி கேட்டேன்ஆனால் நீங்கள் மிரண்டீர்கள்”

“ஆமாம். எனக்கு பயமாகத்தான் இருந்தது. நீ அந்த இரவில் வெறிபிடித்ததைப் போல இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாய்”

“உங்களுக்குப் பேசப் பிடிக்கவில்லை. இதெல்லாம் ஏதோ ஒரு பிச்சியின் பேச்சு என்று உங்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும்”

“நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லை. ஆனால் அடிபட்டவளின் அரற்றல் என்று நினைத்தேன்”

“ஏதும் பேசாமல் திரும்பிப் படுத்துக் கொண்டு பழைய சினிமாப் பாட்டுக் கேட்க ஆரம்பித்தீர்கள். அப்போது ஒரு பாட்டு வந்தது. நீங்கள் வழி சொல்லவில்லை. ஆனால் அந்தப் பாட்டு சொல்லிற்று. இந்த சாமிநாதன் வழி சொல்லவில்லை. அந்த சாமி சொல்லிற்று. அந்தப் பாட்டில் ஒரு வரி :”ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது காற்றடித்தால் சாய்வதில்லை” அது எனக்காக எழுதப்பட்ட வரி. நான் எந்தப் புயல் அடித்தாலும் விழாமல் இருக்க வேண்டுமானால் நாணலாக இருக்க வேண்டும். எனக்கு வழி தெரிந்து விட்டது. நாணலாக வளைந்து அவள் காலில் விழுந்தேன்”

“இப்போது நாணல் நிமிர்ந்து விட்டதா? இன்று உன்னைச் சுற்றி உன் குடும்பம் காவல் நிற்கிறது. பணம் சேர்ந்து விட்டது. என்னால் அரசியல் பலம் திரட்டித் தர முடியும். மரத்தை எப்போது வீழ்த்தப் போகிறாய்?”

“நீங்கள் கொக்கு கிக்கு என்று ஏதோ அடிக்கடி பழமொழி சொல்வீர்களே?”

“ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை காத்து நிற்குமாம் கொக்கு.”

“ஆங். அதேதான். கொக்கு காத்திருக்கிறது”

சாமிநாதனுக்கு மனைவியைப் பார்க்கப் பார்க்க மனது நெகிழ்ந்தது. பட்டிக்காட்டுப் பெண். அவளது நிறத்தைப் பார்த்துத்தான் அவன் அவளைக் கட்டிக் கொண்டதாக அவனது உறவினர்கள் சொல்வார்கள்.ஆனால் அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணிடம் அன்று வெகுளித்தனம் இருந்தது. அதுதான் அவள் நிறத்தை விட அழகு என்று அவனுக்குத் தோன்றியது. அரசியலுக்குப் போக வேண்டும் என்ற தனது ஆசைக்கு இப்படி ஒரு அதிர்ந்து பேசாத, சொன்னதை கேட்கிற, ஒரு பெண் வீட்டில் இருந்தால்தான் வண்டி குடைசாயமல் ஓடும் எனத் தோன்றியது. ஆனால் சிற்சில ஆண்டுகளில் எத்தனை மாற்றங்கள்! குளவி தன் புழுவைக் கொட்டிக் கொட்டி குளவியாக மாற்றும் என்பார்கள். வித்யா ஒரு அறை கொடுத்து இவளை மாற்றிவிட்டாள்!

அருகில் சென்று அவள் தோளில் கை போட்டு இழுத்து அணைத்துக் கொண்டான். அவள் விருட்டென்று விலகி நின்றாள்

“நீங்கள் எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறீர்கள் நினைவிருக்கா?”

அவன் பதில் சொல்லும் முன் அவளே தொடர்ந்தாள். “ மரம் விழும் வரை நாம் தாம்பத்திய உறவு கொள்வதில்லை என்று நீங்கள் சத்தியம் செய்திருக்கிறீர்கள்!”

“ஆனால் எப்போது மரம் விழ, எப்போது நான் உன்னைத் தொட?”

“காத்திருக்குமாம் கொக்கு!” என்று சிரித்தப்படியே விரைந்து அறையிலிருந்து வெளியேறினாள் சித்ரா.

*

“மேடம் நான் சொல்வதை சரியாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தயங்கினார் வக்கில் பாண்டியன்.

“என்னை என் அம்மாவோ ஆசிரியர்களோ மக்கு என்று சொன்னதில்லை” என்று நறுக்கென்று பதில் சொன்னாள் வித்யா.

“ஐயோ, நான் அப்படிச் சொல்லவில்லை!” என மிரண்டார் வக்கீல். “சட்டம் என்ன சொல்கிறது என்பதைச் சொல்ல வந்தேன்”

“சரி சொல்லுங்கள். அதற்கேன் பெரிய பீடிகை?”

வக்கீல் தேர்ந்தெடுத்த வார்த்தைகளைத் திரட்டிக் கொண்டு பேச ஆரம்பித்தார். “நீங்கள் இப்போது பதவியில் இருக்கிறீர்கள் அரசிடம் சம்பளம் வாங்குகிறீர்கள். அதாவது சட்டத்தின் பார்வையில் நீங்கள் பப்ளிக் சர்வண்ட். அதனால் உங்கள் வருமானம், சொத்து இவை எல்லாம் நாளை வழக்கு என்று ஏதாவது வந்தால் நீதிமன்றத்தின் பரிசீலனைக்குள்ளாகும்.”

“நான் எனக்கு அரசாங்கச் சம்பளம் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்?”

“அது சாத்தியமில்லை. உரிய ஊதியம் கொடுக்காமல் அரசு ஒருவரிடம் வேலை வாங்க முடியாது. அதுவும் தவிர அப்போதும் நீங்கள் பப்ளிக் சர்வண்ட்தான். நீதிமன்றத் தீர்ப்புகள் அப்படித்தான் சொல்கின்றன”

“அவை இருக்கட்டும் இப்போது நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?”

“நீங்கள் பதவிக்கு வந்த பின் நிறைய நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்று ஆடிட்டர் சொல்கிறார். என்ன நான் சொல்வது சரிதானே?” என்று ஆடிட்டரைப் பார்த்தார் பாண்டியன். ஆமாம் என்பது போல் அவர் தலை அசைத்தார்.

“அதனால்?”

“நீங்கள் உங்கள் முதலீடுகளை விலக்கிக் கொண்டுவிடுங்கள். அதைப் பின்னர் சிறிது காலம் கழித்து  உங்களுக்கு நம்பகமானவர் பெயரில் முதலீடு செய்யுங்கள்”.

“அதைத்தான் ஆடிட்டரும் சொன்னார். அதை நான் கேட்கவில்லை என்று வக்கீல் வைத்து வாதாட வந்திருக்கிறாரா?”

ஆடிட்டர் சிரித்தார். வக்கீல் சிரிக்கவில்லை. தொடர்ந்தார். “ அவர் சொன்னது சரி என்று தோன்றுவதால்தான் நான் பேச வந்தேன். இதுதான் எங்கள் அட்வைஸ். அப்புறம் உங்கள் இஷடம்”

“அட்வைஸா?” என்றாள் வித்யா இறுக்கமான குரலில்

“ஸாரி. யோசனை. சஜஷன்.” என்ற வக்கீலை மறித்து ஆடிட்டர் சொன்னார். நீங்கள் உங்கள் முதலீடுகளை அந்த மேடம் பெயருக்கு மாற்றி விடுங்கள். அதுதான் பாதுகாப்பானது”

“எந்த மேடம்?”

“சித்ரா மேடம். அவர்கள் உங்கள் நிறுவனங்களில் உங்களுடன் பார்ட்னராக இருக்கிறார்கள். அவரையே முழு உரிமையாளராக்கி விடுங்கள். அப்போதும் கேள்வி வரும். ஆனால் பார்த்துக் கொள்ளலாம்”

“மிஸ்டர் பாண்டியன்!” வித்யாவின் குரலில் தொனித்தது அதட்டலா, உறுதியா என்று கணிக்க முடியாமல் திணறினார் வக்கீல். அவரை இதுவரை யாரும் இப்படிப்பட்ட தொனியில் பெயர் சொல்லி அழைத்ததில்லை.

“மிஸ்டர் பாண்டியன் எது எனக்குப் பாதுகாப்பானது என்று முடிவெடுக்க வேண்டியது நான்தான்” என்ற வித்யா, ஆடிட்டரைப் பார்த்து, “ நீங்கள் சொல்வது போல் எனக்கு நம்பிக்கையானவர்கள் யாரும் இல்லை. ஆம். சித்ரா உள்பட. நான் வேண்டுமென்றுதான் அந்த நிறுவனங்களில் பார்ட்னராக இருக்கிறேன் நான் அப்படி இல்லை என்றால் அவர்கள் என்னை ஏமாற்றிவிடவும் கூடும். அவர்களைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டுமானால் நான் அதில் இருந்தாக வேண்டும்.”

“இல்லை மேடம். அது பின்னால் பிரசினையாக.....”

“ காலம் வரும்போது அதைக் கடப்பதைப் பற்றி யோசிப்போம்” என்றாள் வித்யா

“அக்கா! இவர்களுக்கு காபி கொண்டு வருகிறார்கள். உங்களுக்கு காபியா, ஜூஸா?” எனக் கேட்டுக் கொண்டு அடுத்த அறையிலிருந்து வந்தாள் சித்ரா.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com