தோழி-30

தோழி-30

ஓவியம்; தமிழ்

ந்த முறை அவ்வளவு கெடுபிடிகள் இல்லை. ஆனால் இது சென்றமுறை நுழைந்த வாயிலும் இல்லை. பிரதமர் அலுவலகத்தில் விஐபிகளுக்கென்று தனி வாயில் திறந்திருந்தார்கள். வரவேற்பறையில் சிற்சில மாற்றங்கள் தெரிந்தன. வெள்ளை நிற சோபாக்கள் மாறவில்லை. ஆனால் மூலையில் இருந்த புத்தர் வெளியேறி சற்றே ஒயிலாக இடுப்பைச் சாய்த்து நிற்கும் மாதொருபாகனுக்கு இடம் கொடுத்திருந்தார்,

“மேடம், என் பெயர் சபய சாட்சி முகர்ஜி” என்று அறிமுகப்படுத்திக் கொண்டார் எதிரே வந்து நின்ற இளைஞர்.

“குமுதா இல்லையா?”

“குமுதாஜி ஆறு மாதம் முன்பு மாற்றலாகிப் போய்விட்டார்”

“மாற்றல் வாங்கிக் கொண்டு போனாரா? இல்லை மாற்றப்பட்டாரா?” வித்யாவின் இதழில் நெளிந்த முறுவலில் சற்றே கேலியும் கலந்திருந்தது.

“அது எனக்குத் தெரியாது மேடம்”  என்று புன்னகைத்த இளைஞர் முகத்தைச் சலனமற்று வைத்துக் கொண்டு,  “இப்போது நீங்கள் பிரதமரைச் சந்திக்கலாம், ஆனால் தவறாக நினைக்க வேண்டாம், ஐந்து நிமிடங்கள்தான் ஒதுக்கியிருக்கிறார். அவர் இன்றிரவு ஆஸ்திரேலியா செல்கிறார். அதனால் இன்று வழக்கத்தை விடச் சற்றுக் கூடுதலாக பிசியாக இருக்கிறார்”

“கவலை வேண்டாம். அவர் அழைத்துத்தான் நான் வந்திருக்கிறேன். நானும் நிறைய வேலைகளைப் போட்டது போட்டபடி விட்டுத்தான் வந்திருக்கிறேன்” என்றாள் வித்யா வெடுக்கென்று.

முகர்ஜி முகம் இறுகியது. ஏதும் பேசாமல் பிரதமர் அறை நோக்கி அழைத்துச் சென்றார்

பிரதமர் இன்றும் எளிமையாக உடுத்தியிருந்தார். ஆனால் அதில் ஒரு வசீகரம் இருந்தது. சாண் அகலத்திற்கு மிளகாய்ப் பழ நிற பார்டர் கொண்ட வெள்ளைக் காதிப் பட்டு. புடவைக்கும் பார்டருக்கும் சம்பந்தமில்லாமல் மயில் கழுத்து நீலத்தில் சோளி. எங்கிருந்துதான் இவர்களுக்கு மாத்திரம் இத்தனை அழகான சேலைகள் கிடைக்கின்றன, ஏதாவது தறியில் சொல்லி பிரத்தியேகமாகத் தயாரிக்கச் சொல்வார்கள் போலும்! என்று நினைத்தாள் வித்யா

“வணக்கம், வித்யாஜி. எப்படி இருக்கிறது ஹாட் சீட்!”

என்ன என்பதைப் போல வித்யா பிரதமரைப் பார்த்தாள்

“முதலமைச்சர் நாற்காலியைச் சொல்கிறேன், மெத்தை வைத்த அந்த அரியாசனம் ஒரு மின்சார நாற்காலிதான், இல்லை? அதுவும் உங்கள் மாநிலத்தில் அது டூ ஹாட் சீட்!” என்ற பிரதமர் தனது ஜோக்கிற்கு தானே சிரித்துக் கொண்டார். உடனே “ஆனால் அந்த நாற்காலிக்கு நீங்கள் அழகு சேர்க்கிறீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்” என்று முறுவலித்தார். முகமன்களில் நேரத்தை வீணாக்காமல் நேரடியாக “நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறீர்களா?” என்று கேள்வியை வீசினார்

“அதற்கு இன்னும் ஒரு வருஷத்திற்கு மேல் இருக்கிறதே!”

“ஓ! நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா? நான் ஒரு வருஷம்தானே இருக்கிறது என்று நினைத்தேன்”

வித்யா ஓர் அரைக்கணம் பிரமித்தாள். பிரதமரின் தொடர் வெற்றிக்குக் காரணம் என்ன என்பதற்கு ஒரு ‘ஹிண்ட்’ கிடைத்தது போலிருந்தது.

“நான் எதற்கு உங்களைப் பார்க்க விரும்பினேன் என ஏதும் ஊகித்திருக்கிறீர்களா எனத் தெரியவில்லை. ஆனால் நான் முந்திக் கொள்கிறேன். வரும் தேர்தலில் எங்களுக்கு ஒரு 30 எம்.பி சீட் கொடுக்க மாட்டீர்களா?”

“முப்பதா? எங்கள் மாநிலத்தில் இருப்பதே 40தான்”

“தெரியும் தெரியும்”

“நாற்பதில் முப்பது என்றால் முக்கால் பங்கு. முக்கால் பங்கை கொடுத்துவிட்டால் நாங்கள் என்ன செய்வது?”

“நீங்கள் சட்டமன்றத்தில் நிறைய இடம் எடுத்துக் கொள்ளுங்கள். சென்றமுறை அறுபதோ என்னவோ கொடுத்தீர்கள் என ஞாபகம்.

“62”

 “அதை இந்த முறை நாற்பதாகக் குறைத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. நாங்கள் சட்டமன்றத்திற்கு வந்து என்ன செய்யப் போகிறோம்?”

“இது ‘நீங்கள் எல்லாம் நாடாளுமன்றத்திற்கு வந்து என்ன செய்யப் போகிறீர்கள்’ என்று எங்களைச் சொல்வதைப் போலிருக்கிறது! என்றாள் வித்யா.

ஓஹ்ஹோஹோ என்று உரக்கச் சிரித்தார் பிரதமர். இந்தச் சிரிப்பிற்கு என்ன அர்த்தம் என்று வித்யாவிற்குப் புரியவில்லை

“ஓகே வித்யாஜி. நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். உளவுத்துறை அறிக்கைகள் வரவிருக்கும் தேர்தல் எங்களுக்கு அத்தனை எளிதாக இருக்காது என்று சொல்கின்றன. வடமாநிலங்களில் வாக்குகள் மதரீதியாகப் பிரியலாம். அப்படிப் பிரிந்தால் பல தொகுதிகளை நாங்கள் சிறிய வித்யாசத்தில் இழக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. தென்மாநிலங்களில் மதம் ஒரு பிரச்சினை இல்லை. அதனால் இந்த முறை நாங்கள் முன்பைவிட அதிக எண்ணிக்கையில் போட்டியிட்டாக வேண்டும். குறிப்பாகத் தென்மாநிலங்களில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் எனத் தீர்மானித்திருக்கிறோம். உங்கள் உதவி தேவை.”

“புரிகிறது. கட்சியில் பேசிவிட்டுச் சொல்கிறேன்”

“கமான் வித்யாஜி, உங்களை மீறி கட்சி என்று ஒன்று இருக்கிறதா?”

“என்னுடைய எதிரிகள்தான் என்னை சர்வாதிகாரி என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதை இப்போது நீங்களும் சொல்கிறீர்கள். நீங்கள் எதிரியா? தோழியா?”

“அதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நமது ஜனநாயகம் என்பதே சர்வாதிகாரிகளை உருவாக்கும் ஒரு சாதனம்தான்.  நீங்கள் உங்கள் கட்சிக்குள் சர்வாதிகாரியாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன் உங்கள் கண்ணசைவுதான் கட்டளையாக இருக்க வேண்டும், சொல்தான் சாசனமாக இருக்க வேண்டும். இறுதி முடிவு உங்களுடையதாகத்தான் இருக்க வேண்டும்."

“அறிவாளிகள் விலகிப் போவார்கள், துதிபாடிகள் சூழ்ந்து கொள்வார்கள் என்று என் பத்திரிகை நண்பர் எச்சரிக்கிறார்”

“அறிவாளிகளை வைத்துக் கொண்டு என்ன செய்ய? அவர்களால் பத்து ஓட்டு வாங்கித்தர முடியுமா? எங்கள் நிதி அமைச்சரின் மனைவி என்னிடம் ஒருமுறை சொன்னார். ‘மேடம்ஜி உங்களுக்காகத்தான் இவருக்கு ஓட்டுப் போட்டேன், இவர் மட்டும் தனியாக நின்றிருந்தால் நான் கூட இவருக்குப் போட்டிருக்க மாட்டேன்’. அவ்வளவுதான் அவர்கள் செல்வாக்கு. ‘ஏனம்மா அப்படி?’ என்றேன். ‘எதற்கெடுத்தாலும் கேள்வி எதையெடுத்தாலும்  முட்டுக்கட்டை இனிமேல் அது உங்கள் தலைவலி’ என்றாள். துதிபாடட்டுமே? நாம் துதிக்குத் தகுதியானவர்கள் இல்லையா? தேவிகளைப் புகழ்வது நம் இந்திய மரபு. நாம் தேவிகள்தானே? அது வெறும் துதி என்று நமக்குத் தெளிவிருக்கிறவரை நாம் மிரள வேண்டியதில்லை. நான் எப்படிப் பார்க்கிறேன் தெரியுமா? இனிப்பு இருக்கும் இடத்திற்குத்தான் எறும்புகள் வரும். என்றாலும் எறும்புகளிடம் நாம் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்”

“காதுக்குள் புகுந்து யானையையே சாய்த்துவிடும் என்பார்களே அதுவா?”

பிரதமர் கொசு விரட்டுவது போல தன் மூக்கிற்கு நேரே கைகளை வீசினார்.

“அதுவல்ல எறும்புகள் ஒன்றுகூடினால் சர்க்கரைக் கட்டியைக் கடத்திக் கொண்டு போய்விடும்!”

மறுபடியும் ஓஹ்ஹஹ்ஹோ என்று சிரித்தார். பின் கம்மிங் டு பிராஸ் டாக்ஸ் என்று சொல்லிக் கொண்டு சீரியஸாகப் பேச ஆரம்பித்தார்

“முப்பது அதிகம் என்று நினைக்கிறீர்கள் போலிருக்கிறது. இருபத்தி ஐந்துக்கு மேல் கிடைக்கும் என்றாவது நான் நம்பிக்கை கொள்ளலாமா?”

“என்னால் ஏதும் இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது”

“ஆல் ரைட். டேக் யுவர் டைம்”. என்று எழுந்து கொண்டார் பிரதமர் “ஆனால் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள். நான் இன்றிரவு ஆஸ்திரேலியா கிளம்புகிறேன். மூன்று நாளில் திரும்பிவிடுவேன். நான் வந்த பின் எங்கள் அரசியல் விவகாரக் குழு கூட்டம் வைத்திருக்கிறேன். அதற்குள் தெரிந்து விட்டால் நல்லது. ஒருவேளை...”

பிரதமர் ஒரு கணம் இடைவெளிவிட்டு நிறுத்தினார். வித்யா நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தாள். அவர் வித்யாவின் கண்களை நேரே பார்த்துச் சொன்னார்: “ஒருவேளை நாங்கள் மாற்று வழிகளை யோசிக்க வேண்டுமானால் எங்களுக்கும் அவகாசம் வேண்டுமல்லவா?”

வித்யா எழுந்து கொண்டு அறை வாசலுக்கு நடக்கத் தொடங்கிய போது, தான் உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்தே, “எப்படி இருக்கிறான் இளவரசன்” என்றார் பிரதமர்

“இளவரசன்?”

“மாக்கியவல்கியின் பிரின்ஸ்”

“ஓ! அவன் பொல்லாதவன்!”

“ ஐ நோ! ஐ நோ! ஆனால் எறும்புகளை விட ஆபத்தானவன் அல்ல!” என்று சிரித்தார் பிரதமர்.

திரும்பும் வழியெல்லாம் யோசித்துக் கொண்டே வந்தாள் வித்யா. என்ன சொல்ல எண்ணுகிறார் பிரதமர்? வெளிப்படையாகப் பேசுகிறேன் என்று சொல்லிக் கொண்டே ஏதோ பூடகமாகப் பேசுகிறார். எறும்புகள் என்றாரே அது என்ன? என்னைச் சர்க்கரைக் கட்டி என்று மெச்சுகிறாரா? இல்லை என்னைச் சுற்றியிருப்பவர்கள் என்னைத் தவறாக வழிநடத்துகிறார்கள் என எச்சரிக்கிறாரா? உளவுத்துறை அவருக்கு அப்படி ஏதும் குறிப்புகள் கொடுத்திருப்பார்களோ? உளவுத்துறையை நான் முழுவதும் நம்புவதில்லை என்று சொல்லிக் கொண்டே அதை ஆதாரமாக வைத்துப் பேசுகிறாரே?

கிளம்பும் போது மாக்கியவல்லியை ஏன் நினைவு படுத்தினார். ”ஆட்சியில் இருப்பவர்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆம் என்ன வேண்டுமானலும். ஏமாற்று, கட்டாயப்படுத்துதல், ஏன் வன்முறை கூட!” என்று சொல்லித்தானே புத்தகத்தைக் கொடுத்தார். அதை மென்மையாக நினைவுபடுத்துகிறாரோ? நினைவுபடுத்தி மறைமுகமாக மிரட்டுகிறாரோ?   

மாற்று வழி என்றாரே? அப்படியென்றால்? கூட்டணியை விட்டு வெளியேறிவிடுவோம் என்கிறாரா? வெளியேறி? தனியாக நின்றால் டெபாசிட் வாங்க மாட்டார்கள். ஒரு வேளை அருட்செல்வனோடு சேர்ந்து கொள்வார்களோ? அதெப்படி? அருட்செல்வன் முகாம் எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சிக்கிறது என்று முதலில் என்னை அலர்ட் செய்தவரே அவர்தானே? நான் கேட்டுக் கொண்டபடி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி அவகாசம் கொடுத்து ஆட்சிக்கு வருவதற்கும் காரணமாக இருந்தாரே? நாடாளுமன்றத்தில் என் கன்னிப் பேச்சை ரசித்து விருந்துக்கு அழைத்தாரே? அவ்வளவு பிரியம் காட்டியவர் விலகிப் போய்விடுவாரா?

போகட்டுமே? எனக்கென்ன நஷ்டம்? சரி, அவர்கள் கேட்பதைக் கொடுப்பதில்தான் என்ன நஷ்டம் வந்து விடப் போகிறது? நாற்பது இடத்திலும் நாம் ஜெயித்தாலும் கூட மத்தியில் நாம் ஆட்சி அமைத்து விட முடியாது. அது சரிதான். ஆனால் அது எப்படி அவர்கள் நம்மை, ‘அ, நாம் சொன்னால் செய்வார்கள்’ என்று அலட்சியமாக,  டேக் இட் ஃபார் கிராண்டட் ஆக எடுத்துக் கொள்ளலாம். மாற்று வழி என்று மறைமுகமாக மிரட்டலாம்? அவர்களுக்குத் தெரிய வேண்டும், இந்த வித்யாவை மிரட்டிப் பணிய வைக்க முடியாது.  இது அவர்களுக்குத் தெரிய வேண்டும். நோ! ஐ வில் நாட் பட்ஜ்.  அவர்கள் பேச்சுக்கெல்லாம் ஆடுவதற்கு இந்த வித்யா அவர்களது அடிமை இல்லை. அரசி. எலி வளையானாலும் தனி வளை எனக்குண்டு.

சென்னை திரும்பிய மறுநாள் தில்லிக்குச் செய்தி அனுப்பினாள். சுருக்கமான ஒற்றை வரிச் செய்தி:  “மன்னிக்கவும் உங்கள் கோரிக்கையை ஏற்க முடியவில்லை.”

அரசியல் நகர்வுகளை மோப்பம் பிடிக்கும் ஒரு தில்லிப் பத்திரிகை ‘கூட்டணி முறிந்தது?” என பெரிய கேள்விக் குறி போட்டு முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டது. உன்னிப்பாக வாசித்தபோது அது மோப்பம் பிடித்த செய்தியல்ல, கசியவிடப்பட்ட செய்தி என்பது புரிந்தது.

“ கூட்டணி முறிந்தது என்ற செய்தி உண்மையா?” என்று தலைமைச் செயலக அறையிலிருந்து இறங்கிக் காரில் ஏற இருந்த வித்யாவை வழிமறித்து பத்திரிகையாளர்கள் கேட்டார்கள்.

“எங்களுக்குத் தகவல் இல்லை” என்றாள் வித்யா

ஒரு வாரத்திற்குப் பின் தகவல் வேறு வடிவில் வந்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வித்யாவை அதிகாலையில் அலறி அடித்துக் கொண்டு எழுப்பினாள் சித்ரா. “அக்கா, இன்கம்டாக்ஸ்காரங்க ரைடுக்கு வந்திருக்காங்க”

கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்த வித்யா, “எங்கே? நம் வீட்டிற்கா?” என்றாள்.

“இல்லக்கா! அவரது மதுபான ஃபாக்டரிக்கு. என்றாள் சித்ரா.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com