தோழி-31

தோழி-31

ஓவியம் : தமிழ்

திகாலை ஆறுமணிக்குத் தொடங்கிய சோதனை அன்றிரவு 8 மணி வரை நீடித்தது. ஆனால், எதுவுமே நடவாதது போல் வித்யா வழக்கம் போல் பூஜை, காலை உணவு, எல்லாம் முடித்துக்கொண்டு புறப்பட்டு தலைமைச் செயலகம் வந்தாள்.

“இன்னிக்குக் கட்டாயம் போகணுமாக்கா?” என்றாள் சித்ரா.

“ஏன்?”

“அங்க சோதனை நடந்திட்டிருக்கு...”

“சரி, அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? அதை நம்மால் நிறுத்த முடியாது. நாம் இன்று ஆஃபீஸ் போகாவிட்டால் தான் தப்பு. பயந்து விட்டோம் என்று பத்திரிகைகள் எழுதுவார்கள். அதை மற்றவர்களும் நம்புவார்கள். நாம் ஏதும் நடக்கவில்லை என்பது போலிருப்பதுதான் சரி.”

“அவரைக் கைது பண்ணிடுவாங்களாக்கா?”

“அப்படியெல்லாம் நடக்காது, சம்மன், விசாரணை இதெல்லாம் இல்லாமல் கைது செய்ய முடியாது.”

“எனக்கு பயமா இருக்குக்கா” சித்ராவின் பதற்றம் குரலில் தெரிந்தது.

“என்ன பண்ணனும்கிற?” வித்யாவின் எரிச்சல் குரலில் வழிந்தது.

“எதுக்கும் நீங்க அவங்ககிட்ட பேசுங்க அக்கா.”

“யார்கிட்ட?”

“தில்லியிலே. அந்த அம்மாகிட்ட...”

“நோ! நெவர்!” என்றாள் வித்யா உறுதியாக.

“அக்கா, தயவு செய்து எனக்காக...”

வித்யா பதிலேதும் சொல்லாமல் காரில் ஏறிக் கதவைச் சாத்திக்கொண்டாள் கதவை அறைந்து சாத்தியதில் அவளது கோபம் தெரிந்தது.

*

கண்ணாடி அலமாரியில் அடுக்கியிருந்த வெள்ளிக் குடங்களையும், தட்டுக்களையும், கல்யாணத்திற்கு வந்திருந்த பரிசுப் பொருள்களையும் பார்த்துக்கொண்டே கலாநிலையத்தின் கீழ்த்தளத்திற்குச் செல்லும் படிகளில் இறங்கிக்கொண்டிருந்தார்கள் ஆடிட்டரும், வக்கீலும். அங்கிருந்த கான்ஃபிரன்ஸ் அறைக்கு வருமாறு அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

“நல்லவேளை, அவர்கள் இங்கே சோதனைக்கு வரவில்லை” என்றார் வக்கீல் கண்ணாடி அலமாரியைப் பார்த்துக்கொண்டே.

“இனிமேல் வரமாட்டார்கள் என்று சொல்லிவிட முடியுமா?” என்றார் ஆடிட்டர்.

மேலே தொடர்ந்து பேச முடியவில்லை. அதற்குள் அறை வந்துவிட்டது. அங்கே சித்ராவும் சாமிநாதனும் காத்திருந்தார்கள். வழக்கமாக வரும் வெள்ளித்தட்டில் வைத்த நெய்யில், வறுத்த முந்திரிப்பருப்பும், ஓர் இனிப்பும், பில்டர் காபியும் அவர்களுக்குக் காத்திருந்தது. வக்கீல் இனிப்பை எடுத்துக் கடித்துக்கொண்டிருந்தபோது அறைக்குள் நுழைந்தாள் வித்யா. கடித்துக்கொண்டிருந்த இனிப்பை அப்படியே மேசை மீது வைத்துவிட்டு எழுந்து நின்றார் வக்கீல்.

“ரெய்டு வந்ததை இனிப்புக் கொடுத்துக் கொண்டாடிட்டு இருக்கியா நீ?” என்றாள் சித்ராவைப் பார்த்து.

“ஐயோ இல்லக்கா!”

“எங்கே கோட்டை விட்டீர்கள்?” என்றாள் வித்யா எடுத்த எடுப்பிலேயே.

ஒன்றும் புரியாமல் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டார்கள். “அவர்கள் வரப் போவது குறித்து உங்கள் யாருக்குமேவா தெரியாமல் போச்சு?” என்றாள்

“நிஜமாவே இது எதிர்பாராதது மேடம்” என்றார் ஆடிட்டர்.

“ஐடி ஆஃபீஸ்ல எல்லாரும் நம்ப பாக்கெட்ல, உட்காருனா உட்காருவாங்க, எழுந்திருனா எழுந்திருப்பாங்கனு பெரிசா கொட்டி முழங்குவீங்களே, இப்போ என்ன ஆச்சு உங்க பிரதாபம் எல்லாம்?”

“ஒரிசாவிலிருந்து ஒரு கமிஷனர் போன வாரம் வந்து சார்ஜ் எடுத்திட்டிருக்கார் மேடம். ஒரு வேளை இதற்காகவே அவரை அனுப்பிச்சிருப்பாங்களோனு எனக்கு இப்போ சந்தேகம் வருது.”

“இப்போ?” என்றாள் வித்யா உலர்ந்த சிரிப்புடன்.

“நீங்கதான் உலகம் பூராவும் உளவாளிகள் வைத்திருப்பீர்களே, உங்களுக்குமா தெரியலை?” என்றாள் சாமிநாதனைப் பார்த்து. உளவாளிகள் என்ற வார்த்தையைச் சற்று அழுத்திச் சொன்னாள். அதைச் சொல்லும்போது பார்வை சித்ராவின் மீது தாவியது.

சாமிநாதன் மெளனமாகத் தலை குனிந்துகொண்டான்.

“சோதனையின்போது நீங்கள் ஏன் சாமிநாதன் அலுவலகத்திற்குப் போய்  துணைக்கு இருக்கவில்லை?” ஆடிட்டரை நோக்கிக் கேள்வி விழுந்தது.

“அப்போது என் அலுவலகத்திலும் சோதனை நடந்துகொண்டிருந்தது மேடம். வெளியில் போகவோ போனில் பேசவோ அனுமதிக்கவில்லை.”

“மொத்தம் 17 இடங்களில் சோதனை பண்ணியிருக்காங்க அக்கா” என்றாள் சித்ரா.

“ஷட்டப்!” என்று சீறினாள் வித்யா.” உனக்குத் தெரிந்தது எனக்குத் தெரியாது என்று நினைக்கிறாயா?”

‘அப்படியானால் ஏன் என்னை அப்படி ஒரு கேள்வி கேட்டீர்கள்? என்னை சந்தேகப்படுகிறீர்களா?’ என்ற கேள்வி ஆடிட்டர் மனதில் ஓலித்தது. ஆனால், அவர் அதை வாய்விட்டுக் கேட்கவில்லை.

“என்ன எடுத்துக்கொண்டு போனார்கள்?”

“கணக்குப் புத்தகங்கள், கம்பெனி பதிவு செய்த மனுவின் நகல், பாலன்ஸ் ஷீட், அப்புறம் ஒரு டயரி.”

“டயரியா?”

“ஆமாம் அது நான் கணக்கு வழக்குகளை குறித்து வைத்துக்கொள்ளும் ரஃப் நோட்புக். அதில் அவர்களுக்குத் தலையும் புரியாது, காலும் புரியாது.”

“எங்கள் பெயரெல்லாம் இருக்கிறதா அதில்?”

“இல்ல மேடம். இனிஷியல்தான்.”

“ அப்டீனா? என்னை வி என்று குறித்திருக்கிறீர்களா?”

“இல்ல மேடம். உங்களை க்யூனு குறிப்பேன்.”

“க்யூனா?”

“க்யூன், அரசி.”

வித்யா முகம் சிரிப்பில் பூரித்தது

“சாமிநாதனை?”

“God.”

“சரிதான். அவர் அரசியைவிடப் பெரியவர்.”

சாமிநாதன் முகத்தில் சங்கடம் தெரிந்தது.

“இவளை என்னனு போட்டிருப்பீங்க?” என்றாள் சித்ராவைக் காட்டி

“சி.எம்.”

“என்னது!” வித்யா அதிர்ந்தாள்.

“சின்ன மேடம் என்பதற்காகப் போட ஆரம்பித்தேன்...” என்று விளக்க முயன்றார்.

“முட்டாள்! மூளை இருக்கா உமக்கு?” என்று சீறினாள் வித்யா. ஆடிட்டர் முகம் சிறுத்தது. அவர் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தால் அடி விழுந்திருக்கும். ஆடிட்டர் அதிர்ஷ்டசாலி. கான்பரன்ஸ் மேஜையின் அகலம் அதிகமாக இருந்தது.

“பதற்றம் வேண்டாம் மேடம். அதை வைத்துக்கொண்டு அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. இதையெல்லாம் கோர்ட்டில் சாட்சியமாகவே ஏற்கமாட்டார்கள்” என்றார் வக்கீல்.

“ஆவணங்கள் மட்டுமல்ல, ரொக்கமாகப் பணம் கைப்பற்றிப் போயிருக்கிறார்கள்” என்றான் சாமிநாதன்

“எவ்வளவு?”

“என் அலுவலகத்தில் மூன்று கோடி எடுத்துக் கொண்டார்கள். மற்ற இடங்களில் சேர்த்து ஆறு ஏழு கோடி இருக்கலாம்.”

“அவ்வளவு பணம் ரொக்கமாக உங்களிடம் எப்படி வந்தது?” என்றாள் வித்யா. சாமிநாதன் பதில் ஏதும் சொல்லாமல் இறுக்கமாக இருந்தான்.

“அது பிரச்சினையாக இருக்காது. கணக்குக் காண்பித்துவிட்டால் வரியைப் பிடித்துக் கொண்டு திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்” என்றார் வக்கீல். வித்யா ஆடிட்டரைப் பார்த்தாள். அவர் ஏதும் பேச விருப்பமில்லாதவர் போல் முகத்தில் சலனம் இல்லாதிருந்தார். மனதளவில் காயம்பட்டிருந்தார் என்பது சொல்லாமலே புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

“நான் ஒரு யோசனை சொல்கிறேன்” என்றான் சாமிநாதன்.

“ம்...”

“நம் கட்சிப் பத்திரிகையின் ஆயுள் சந்தா ரூ 25 ஆயிரம். ஆறு கோடியை வரவு வைக்க 2400 ஆயுட் சந்தாதாரர்கள் தேவை. நம் கட்சியின் உறுப்பினர்களை சந்தாதாரர்களாகக் காட்டிவிடலாம்” என்றான் சாமிநாதன்.

வித்யா கண்ணை மூடி யோசித்தாள்.

“சரி என்னவோ செய்யுங்கள். ஆனால் அதை முறையாகச் செய்யுங்கள். ஒவ்வொருத்தர் பெயரையும் முழு அட்ரஸையும் எழுதி ரசீது போட்டு சரியாகச் செய்யுங்கள். என்ன சார் இதையாவது சரியாகச் செய்வீர்களா?” என்றாள் ஆடிட்டரைப் பார்த்து. “இல்லை இதையும் சி.எம், டி,எம்னு சொதப்பிடுவீங்களா?” கேட்டுக்கொண்டே எழுந்தாள்.

*

எப்போதும் காற்றில் மிதந்து வருவதைப் போன்று நடந்து வரும் முதல்வர் அன்று வழக்கத்திற்கு விரோதமாக சிரமப்பட்டு நடப்பதைப் போலத் தோன்றியது தொழில்துறைச் செயலருக்கு. அவர் இன்னொன்றையும் கவனித்தார். எப்போதும் முதல்வருடன் நிழல் போல உடன் வரும் சித்ராவையும் அன்று காணோம்.

“சி.எம். கூட்டத்தைச் சீக்கிரம் நடத்தி முடித்து விட முடியுமா? எனக் கேட்கிறாங்க. நீளமான பேச்சுக்கள் வேண்டாம்” என்றார் தலைமைச் செயலாளர் தொழில்துறைச் செயலாளரிடம். அவர் கேட்பது அவருக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த வித்யாவின் காதிலும் விழுந்தது.

“என்னை சி.எம் என்று குறிப்பிடுவதை இயன்றவரையில் தவிர்க்கப்பாருங்கள்” என்றாள் வித்யா.

முதல்வரை வேறு எப்படி அழைப்பது என்று புரியாமல் குழப்பத்தோடு பார்த்தார் தலைமைச் செயலர்.

“சீஃப் மினிஸ்டர் என்றே முழுவதுமாக அழையுங்கள். சி.எம், எஃப்எம், சிஎஸ், ஓஎஸ்டி, பி.எஸ்,  என்று அரசாங்கத்தில் பதவிகளைச் சுருக்கி விட்டோம். ஆனால் சிவப்பு நாடா நீண்டு கிடக்கிறது” என்றாள் வித்யா சிரித்துக்கொண்டே.

தலைமைச் செயலாளர் சிரித்தார். “வெள்ளைக்காரர்கள் காலத்துப் பழக்கம் மேடம்” என்றார்.

“ஐ ஸீ” (I see) என்றாள் வித்யா. “பாருங்கள், இது சுருக்கமல்ல” என்றாள்.

புரிகிறது என்பது போல் தலையாட்டினார் தலைமைச் செயலர்.

“நான் நீட்டி முழக்கவும் இல்லை” என்றாள் சிரித்துக்கொண்டே. தலைமைச் செயலாளரும் சிரித்தார். என்னவென்று புரியாமல் அருகில் அமர்ந்திருந்த ஆஸ்திரேலிய தூதரும் மரியாதையின் பொருட்டு சிரித்தார்.

“ஐ வாண்ட் புரோசிஜர்ஸ் டு கண்ட்ராக்ட் பட் பிசினஸஸ் டு எக்ஸ்பாண்ட்” (I want procedures to contract, but businesses to expand) என்றாள் அவரிடம் ஆங்கிலத்தில். இது அவருக்குப் புரிந்ததால் அவர் தாரளமாகப் புன்னகைத்தார்.

இன்று முதல்வர் உற்சாகமாக இருக்கிறாரா? அல்லது உற்சாகமாக இருப்பது போல் காட்டிக்கொள்கிறாரா? தலைமைச் செயலருக்கு சந்தேகமாக இருந்தது. சோதனை நடந்த செய்திகள் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

“ஆஸ்திரேலியா அளவில் பெரியது. ஆனால் மக்கள் தொகையில் தமிழ்நாடு அவர்களை விடப் பெரியது. குருவி அளவில் சிறியதுதான். ஆனால் அது எல்லா அங்கங்களும் கொண்டது. நாங்கள் குருவிதான்.  எல்லா அங்கங்களும் கொண்ட குருவியாகத் தமிழ்நாட்டை ஆக்க வேண்டும் என்பதுதான் என் லட்சியம். ஆஸ்திரேலியாவின் ஜிடிபிக்கு நிகராகத் தமிழ்நாட்டின் ஜிடிபியை ஐந்தாண்டில் உயர்த்த வேண்டும். இது வெறும் கனவல்ல. திட்டம். ரோட் மேப் வைத்திருக்கிறேன். அதை நிறைவே.....

மைக்கின் முன் பேசிக் கொண்டிருந்த வித்யா நாக் குழறி நினைவிழந்து மேடையிலேயே சரிந்து விழுந்தாள்.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com