தோழி - 32

தோழி - 32

ஓவியம்; தமிழ்

“எவ்வளவு?”

180/120

“வாட்?” மருத்துவர் அதிர்ந்தார்.

“ஆமாம் டாக்டர். ரீடிங் அப்படித்தான் காட்டுகிறது”

“பிபி எதில் பார்த்தாய்? டிஜிட்டலா? மேனுவலா?”

“டிஜிட்டல்தான் டாக்டர்”

“ நீ நகரு!” என்று செவிலயரை விலகச் சொல்லிவிட்டு வித்யாவின் படுக்கையருகே சென்ற டாக்டர், “டிஜிட்டல் எப்போதும் சரியாக இருக்காது. போய் பி.பி. அப்பாரெட்டஸ் எடுத்து வா” என்று சொல்லிவிட்டு ஈசிஜி வரைபடத்தை எடுத்துப் பார்த்தார்.  கவலையில் ஆழ்ந்தார்.

ரத்த அழுத்தம் பார்க்கும் கருவியைக் கொண்டு அவரே பரிசோதித்தார்.” யூ ஆர் ரைட். ஒன்றும் பெரிய வித்யாசமில்லை” என்றார் செவிலியரிடம்.

மெல்லக் கண் திறந்து பார்த்த வித்யாவிடம் சொன்னார்: “யூ ஆர் லக்கி. ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பித்து விட்டீர்கள்” என்றார்.

வித்யா மெல்லப் புன்னகைத்தாள்

“ஆனால் ஆபத்திலிருந்து தப்பிக்கவில்லை. உங்கள் ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருக்கிறது. மிகமிக அதிகமாக இருக்கிறது. ஹைப்பர் டென்சிவ் கிரைசிஸ். உங்கள் இதயத் துடிப்பு குறைந்திருக்கிறது. அறுபது இருக்க வேண்டும். ஆனால் அதை விடக் கீழாக இருக்கிறது. ஆனால் ரொம்பக் கீழாக இல்லை. மைல்ட் பிராடிகார்டியா. பொதுவாக அதிக ரத்தம் அழுத்தம் இருந்தால் இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும். உங்கள் விஷயத்தில் சற்று மாறாக இருக்கிறது. இதய அறையின் சுவர்கள் தடித்திருக்கலாம். அதையும் செக் செய்து பார்ப்போம். தைராய்ட் மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறீர்களா? இல்லை நீங்களாகவே முடிவெடுத்து நிறுத்தி விட்டீர்களா?”

“டாக்டர் என்னென்னவோ சொல்கிறீர்கள். என்னை அவ்வளவு எளிதாகப் பயமுறுத்திவிட முடியாது!”

“ஐ நோ. ஐ நோ” என்று டாக்டரும் சிரித்தார்.

“இது வெறும் களைப்புத்தான். அன்று வேலை கொஞ்சம் ஜாஸ்தி” என்றாள் வித்யா.

“நீங்கள் சொல்வது போலிருக்க வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன், ஆனால் பாருங்கள், அறிவியலுக்குப் பொய் சொல்லத் தெரியாது” என்று சிரித்தார் டாக்டர்.

வித்யா ஏதோ சொல்ல வாயெடுத்தாள்.

கை உயர்த்தி அதை அமர்த்திய டாக்டர், “நோ ஆர்க்யூமெண்ட்ஸ். இன்றைக்கு வேண்டாம். இன்றைக்கு நன்றாக ஓய்வெடுங்கள். இன்று நிறைய தூங்குவீர்கள். அதைப் பற்றி பயப்பட வேண்டாம். இன்னும் சில ரிப்போர்ட்ஸ் வர வேண்டும். வந்த பின்பு முடிவெடுக்கலாம்” என்றார்

அறையை விட்டு வெளியே வந்ததும் சித்ராவைத் தனியே அழைத்தார்.”இன்று யாரையும் பார்க்க அனுமதிக்க முடியாது. உங்களைக் கூட. இன்னும் சில மணியில் ரத்த அழுத்தத்தை இயல்பு நிலைக்கு அருகில் கொண்டு வந்து விடுவோம். பேஸ் மேக்கர் வைக்க வேண்டி வரலாம். அதை அப்புறம் யோசிப்போம்.”

“அப்டீனா என்ன டாக்டர்?”

“ஒரு சின்ன ஆபரேஷன் செய்ய வேண்டியிருக்கலாம். பார்ப்போம். பயப்பட ஒன்றுமில்லை”

*

னால் சித்ரா பயப்பட வேறு விஷயங்கள் நேர்ந்தன. நாடாளுமன்றத் தேர்தலில் வித்யாவின் கட்சி பயங்கரமாக அடி வாங்கியது. அருட்செல்வன் அணி கணிசமான இடங்களைப் பிடித்தது. பிரதமரின் கணிப்புப் பொய்க்கவில்லை. அவர் கட்சி வட மாநிலங்களில் திணறியது. மற்ற மாநிலங்கள் ஜெயித்து தனிப் பெரும் கட்சியாகத் தத்தளித்துக் கரையேறியது. ஆனால் ஆட்சி அமைக்கப் போதிய எண்ணிக்கையின்றி நொண்டியது. அருட்செல்வன் கட்சி ஆதரவளிக்க முன் வந்தது. ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை வைத்து.வலியுறுத்தியது. அது: சித்ராவின் உறவினர் வீடுகளில் நடந்த சோதனையின் அடிப்படையில் வித்யா மீது வழக்குகள் போட வேண்டும்.

பரபரப்பைப் பணம் பண்ணிவிடப் பத்திரிகைகள் போட்டியிட்டன. அவலுக்குக் காத்திருந்த வாய்கள் அசை போடத் தொடங்கின. ‘ஆட்சிக்கு ஆபத்து?’ எனக் கேள்விக் குறியோடு தலைப்பிட்டது ‘கழுகுக் கண்’. வித்யாவிற்கு விலங்கு? என வினாக்குறியிட்டது ‘உளவாளி.’ சித்ரா வெளியேற்றப் படுவார் என ஜோசியம் சொன்னது ‘சின்னக் கோமாளி.’ முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவரைக் கைது செய்ய முடியுமா? முன்னுதாரணம் உண்டா? என விவாதித்தது அல்லி.

“நீங்கள் பத்திரிகையாளர்களை சந்திப்பது நல்லது” என்றான் சாமிநாதன்.

’’யூகங்களுக்கும் உளறல்களுக்கும் நாம் ஏன் பதில் சொல்ல வேண்டும்?” என்றாள் வித்யா.

“அமைதியாக இருந்தால் மக்கள் அவர்கள் சொல்வதையே உணமை என்று நம்புவார்கள்.”

“என் விசுவாசிகள் நான் தவறு செய்தேன் என்பதை நம்ப மாட்டார்கள். என் எதிரிகள் நான் தவறு செய்யவில்லை எனச் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்”

“ஓர் அறிக்கையாவது விட்டால் நல்லது. உங்கள் இடத்தில் நானிருந்தால் அதைத்தான் நான் செய்வேன்.”

“என்னிடத்தில் நீங்கள்?” வித்யா புருவங்களை உயர்த்தினாள். ஆனால் அன்று மாலையே அவளது அறிக்கை வந்தது.

“இது என் மீது களங்கம் கற்பிக்கும் முயற்சி. எனக்கு உறவினர்கள் யாரும் இல்லை. இந்த வழக்குகள் அரசியல் உள் நோக்கங்கள் கொண்டவை. என்னை யாரும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது” என்றது வித்யாவின்  அறிக்கை.

“ஐய்யய்யோ, என்ன சொல்றாங்க பார்த்தீங்களா?” என்று பதறிக் கொண்டு வந்தாள் சித்ரா.

“அவள் சொல்வது சரிதான். இது அரசியல் காரணமாகப் போடப்படும் வழக்கு. இதை அரசியலைக் கொண்டுதான் எதிர்கொள்ள வேண்டும்”

“அதில்லைங்க...”

சித்ராவைப் பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டு போனான் சாமிநாதன். “அதற்கு அரசியல் நம் கையில் வர வேண்டும். இதை வித்யாவிடம் மட்டும் விட்டுவிட முடியாது”

“அப்படீன்னா?”

“அதை எப்படிச் செய்வது என்றுதான் நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

“நீங்க நல்லா ஆற அமர உட்கார்ந்து யோசியுங்க. ஆனா அதற்கு முன் இதைப் பாருங்க”

“எதை?”

“எனக்கு உறவினர்கள் யாரும் இல்லைனு சொல்லியிருக்காங்க”

“அது உண்மைதானே?”

“உண்மையா பொய்யானு பட்டிமன்றம் நடத்த நான் வரலை. ஆனா அதை அவங்க கோர்ட்ல சொன்னா என்னாகும்?”

“என்னாகும்?” அவளையே உறுத்துப் பார்த்தான் சாமிநாதன்.

“அவ்வளவு பழியும் நம்ப மேல விழும். நம்ப குடும்பம் மொத்தமும் ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும்”

சாமிநாதன் முகத்தில் இருள் படர்ந்தது.

*

“என்னக்கா இப்படிச் சொல்லிட்டீங்க?” பதற்றத்தில் சித்ராவின் குரல் உயர்ந்தது.

புத்தக அடுக்கிலிருந்து எதையோ எடுக்கப் புத்தகங்களைத் துழாவிக் கொண்டிருந்த வித்யா நின்றபடியே திரும்பிப் பார்த்தாள்.

“ என்ன சொல்லிவிட்டேன்?”

“எனக்கு குடும்பம் கிடையாது என்று சொல்லியிருக்கிறீர்களே?” என்றான் சாமிநாதன்.

“ஆமாம். அதுதானே உண்மை?”

“அப்படியானால் நாங்கள் எல்லாம் யார்?” என்றாள் சித்ரா.

“கூட வருபவர்கள் எல்லாம், கூடப் பிறந்தவர்கள் ஆகிவிடுவார்களா?”

“என் அண்ணன் பொண்ணு கல்யாணத்தை நீங்கள்தான் நடத்தி வைத்தீர்கள் அப்போது அவரை என் அண்ணன் மாதிரி என்று சொன்னீர்களே?”

“சொல்லியிருப்பேன். சம்பிரதாயமாகச் சொல்லும்  வார்த்தைகள் எல்லாம் சாசனம் ஆகிவிடுமா? நீ கூடக் கட்சிக்காரர்களை அண்ணே என்று அழைக்கிறாய். அவர்களோடு உன் சொத்தைப் பகிர்ந்து கொள்வாயா?”

“ஆனால் நீங்கள் என் சொந்தக்காரர்களுக்கெல்லாம் கம்பெனி ஆரம்பித்துக் கொடுத்தீர்கள்”

“ஆனால் அவற்றிலிருந்து எனக்கென்று பத்து பைசா எடுத்துக் கொண்டிருக்கிறேனா?”

“அதிலிருந்துதான் தேர்தலுக்கு செலவழித்திருக்கிறோம்” என்றான் சாமிநாதன்.

“தேர்தலில் ஜெயிக்க பணம் மட்டும் போதுமா மிஸ்டர் சாமிநாதன்?”

“பணமும் வேண்டும்”

“ஆம் பணமும் வேண்டும். ஆனால் பணம் மட்டும் போதாது. நம் கட்சிக்குக் கிடைத்த வெற்றியெல்லாம் எனக்குக் கிடைத்த வெற்றி. வித்யா என்ற இந்தத் தனிமனுஷிக்குக் கிடைத்த வெற்றி”

“அதையெல்லாம் உங்கள் அகந்தையாலேயே அழித்து விடுவீர்கள் போலிருக்கிறது”

“என்ன சொல்கிறீர்கள்?” வித்யாவின் முகம் சிவந்தது.

“வெளிப்படையாகவே சொல்கிறேன். நீங்கள் பிரதமரோடு மோதாமல் இருந்திருந்தால் நமக்கு இந்த நிலை வந்திருக்காது”

“ஓகோ! அதற்காக அவர்கள் சொல்கிறபடியெல்லாம் நாம் ஆடமுடியாது. அரசியலுக்கு வந்து விட்டால் ரோசம், தன்மானம் எல்லாம் உதிர்த்து விட வேண்டுமா?”

“அப்படியில்லை. உங்களைக் குறி வைத்துத்தான் இந்த வழக்கே தொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் ஒதுங்கிக் கொண்டு விட்டால் இதன் தீவிரம் குறைந்து விடும்”

“அப்படியென்றால்”

சாமிநாதன் சற்றுத் தயங்கினான். பின் செருமிக் கொண்டு சொன்னான்:

“நேரிடையாகவே சொல்கிறேன். நீங்கள் கொஞ்ச காலம் பதவியிலிருந்து விலகி இருங்கள். முதல்வர் பொறுப்பை என்னிடம் கொடுங்கள். நான் எல்லாவற்றையும் பேசிச் சரி செய்கிறேன்!”

“வாட்!” என அதிர்ந்தாள் வித்யா? “ஓ! அதுதான் உங்கள் திட்டமா? நடக்காது மிஸ்டர் சாமிநாதன். நெவர்!”

பின் உறுதியான குரலில் சொன்னாள்: “ இது என்னைக் குறி வைத்துத் தொடுக்கப்பட்ட வழக்குதான். என்னை அரசியலில் இருந்து அகற்றி விட்டால் எத்தனையோ பேருக்கு செளகர்யமாக இருக்கும். ஆனால் இந்த வித்யாவை அச்சுறுத்திப் பணிய வைக்க முடியாது. அவள் சண்டையிட்டுச் சாவாளே தவிர மண்டியிட்டு மடங்க மாட்டாள்”

“ஈகோ பார்க்காதீர்கள் அக்கா. அதுதான் எல்லோருக்கும் நல்லது” என்றாள் சித்ரா.

“ஏன் இருவரும் இப்படிப் பதறுகிறீர்கள்? வழக்கை நான் பார்த்துக் கொள்கிறேன். இவர்களால் எதையும் நிரூபிக்க முடியாது”

“நம் வக்கீல்களுக்கு அந்த நம்பிக்கை இல்லைக்கா. ஆவணங்கள் நமக்கு எதிராக இருக்கின்றன. எல்லாக் கம்பெனிகளிலும் நீங்கள் பங்குதாரர். அது நமக்கு எதிராகப் போகும் என்கிறார்கள் அக்கா!”

“எந்தக் கம்பெனியிலிருந்தும் நான் லாபத்தில் பங்கோ, ஊதியமோ பெறவில்லை. எந்த இயக்குநர் கூட்டத்திலும் நான் பங்கேற்கவில்லை. எந்த ஆண்டுக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. எந்த ஆவணத்திலும் என் கையெழுத்தில்லை. ஒரு கெளரவத்திற்காக என் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று அந்த வக்கீலைச் சொல்லச் சொல்லுங்கள். மறுபடியும் சொல்கிறேன் எதையும் நிரூபிக்க முடியாது”

“அவர்கள் அப்படிச் சொன்னால் நாங்கள் மாட்டிக் கொள்வோம்1 அப்போது நாங்கள் வேறொன்று சொல்ல வேண்டியிருக்கும்” என்றான் சாமிநாதன்

“என்ன சொல்வீர்கள்?”

“நாங்கள் உங்கள் பினாமிகள். நீங்கள் சொல்லித்தான் எல்லாவற்றையும் செய்தோம் என்று சொல்வோம்”

“அப்படிக் கூடச் சொல்வீர்களா?” வித்யா திடுக்கிட்டாள்! “பிளாக் மெயில் செய்கிறீர்களா சுவாமிநாதன்?” அவள் குரல் உயர்ந்தது. முகம் சிவந்தது. பின் “ஓகே டு வாட் யூ வாண்ட்!” என்று சீறினாள்.

அறையில் இறுக்கம் நிலவியது. “அக்கா! அரைநாள் கூட நாமெல்லாம் ஜெயிலில் போய் இருக்க முடியாது. பிறந்ததில் இருந்து வசதியாக வாழ்ந்து விட்டீர்கள். பணம், புகழ், அதிகாரம், ஆள், அம்பு, சேனை, என்று அரசியைப் போல் இருக்கிறீர்கள். அதையெல்லாம் இழந்து விட்டு அங்கே போய் புழுங்கிக் கொண்டிருக்க வேண்டுமா? அதுவும் இப்போது உங்களுக்கு உடம்பு முன் போலில்லை”

“நான் ஏன் ஜெயிலுக்குப் போக வேண்டும்? புருஷனும் பொண்டாட்டியுமாக என்னை மிரட்டுகிறீர்களா?”

“அப்படியெல்லாம் இல்லை. அவர் சொல்வதைத்தான் கேளுங்களேன்”

“ உன் ‘அவர்’ என்னதான் சொல்கிறார்?”

“நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன். தில்லியோடு பேசுகிறேன்.”

“அவர்கள் காலில் விழப் போகிறீர்களா?”

““அவர்களோடு மோத வேண்டியதில்லை. ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும். பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்”

“ஓஹ்ஹோஹ்ஹோ! பால்காரர்!” வித்யா விழுந்து விழுந்து சிரித்தாள்.”சித்ரா! உங்க அப்பா சொன்னது சரி. பால்காரர்!”

சித்ரா சிரிக்கவில்லை. சாமிநாதன் முகம் இறுகியது. அவன் மாமனார் எதிரே நின்று கொண்டு எகத்தாளமாகச் சிரிப்பது போலிருந்தது.

“என்ன!” என்று கையை ஓங்கிக் கொண்டு பாய்ந்தான்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத வித்யா பின்னோக்கி நகர்ந்தாள். கட்டில் கால் தடுக்கி விழுந்தாள். தலை ‘டங்; என்று கட்டில் சட்டத்தில் மோதியது. பின் மடங்கிச் சாய்ந்தது.

பதறிப் போன தம்பதியினர் ஆஸ்பத்திரியை அழைத்தார்கள். ஆம்புலன்ஸ் வந்து வித்யாவை அள்ளிப் போட்டுக் கொண்டு விரைந்தது. ஆஸ்பத்திரியில் அவளை இறக்கிய போது டாக்டர்கள் கை பிடித்துப் பார்த்தார்கள். கழுத்தில் கிடந்த ஸ்டெதஸ்கோப்பை காதில் மாட்டிக் கொண்டு சோதித்தார்கள்

பின் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு பெட்ஷீட்டை எடுத்து முகத்தை மூடினார்கள். பின் சொன்னார்கள்:

“ஸாரி. தாமதித்து விட்டீர்கள். ஷி இஸ் டெட்!”

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com