தோழி - 33

தோழி - 33

ஓவியம்; தமிழ்

கரின் நீண்ட முக்கிய சாலை வலப்புறமாகக் கடற்கரை நோக்கித் திரும்புகிற ‘ட’ வளைவில் இருந்த நான்கு மாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் மாதவன் நம்பியார். இரண்டு சாலைகளிலும் கண்ணுக்கெட்டிய வரை மக்கள் வெள்ளம். இடித்துக் கொண்டும், முண்டிக் கொண்டும் அடிமேல் அடி வைத்துக் கொண்டிருந்தது  கூட்டம்.

“எப்படிக் குறைத்து மதிப்பிட்டாலும் அரை லட்சம் பேராவது இருப்பார்கள். இல்லை எம்.என்?”

அவன் அருகில் புகை பிடித்துக் கொண்டு நின்றிருந்த ஆசிரியர் விஸ்வநாதன் சிகரெட்டை வாயிலிருந்து அகற்றிவிட்டுக் கேட்டார்.

“ ஆமாம்.சார்! எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!”

“என்ன ஆச்சரியம்?. இதற்கும் முன்னும் அரசியல் தலைவர்களின் இறுதி ஊர்வலத்திற்கு இத்தகைய கூட்டம் வந்ததுண்டே!”

“ம் உண்டு. ஆனால் அவர்கள் இவரைப் போல ஊழல் புகார்களுக்கு உள்ளாகியிருக்கவில்லை எவ்வளவு குற்றச்சாட்டுக்கள்! அவை அரசியல் ஆதாயங்களுக்காக ஊதிப் பெருக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஊழல் நடக்கவில்லை, அவை உண்மையல்ல, என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அந்தக் கல்யாணம் ஒரு கண்கூடான சாட்சி. ஆனால் அப்படியிருந்தும், அதெல்லாம் தெரிந்திருந்தும், இன்றைக்கு இவ்வளவு பேர் இறுதி அஞ்சலிக்கு!”

விஸ்வநாதன் சிரித்தார்.” மரணம் ஒரு பெரும் துடைப்பான். எல்லாவற்றையும் சுத்தப்படுத்திவிடும்” என்று ஆங்கிலத்தில் சொன்னவர். “கேள்விப்பட்டதில்லை? எந்தப் பெண்ணும் மணக்கோலத்தில் அழகானவள், எந்த இறந்த மனிதனும் நல்லவரே!” என்றார்.

“என்னால் நம் மக்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை சார்!”

“அப்படியே இருக்கட்டும். அதுதான் நல்லது”

“சார்?”

“புரிந்து கொள்ள முடிந்தால் அவர்களை மன்னிக்கத் தோன்றாது. மனதில் கசப்போ, வெறுப்போ மண்டும். தனித்துப் போகத் தோன்றும். அது நேர்ந்தால் உனக்குள் இருக்கும் ஜீவநதி அடைத்துக் கொள்ளும்”

“ஜீவநதி?”

“ம். எழுதுகிறவனுக்குள் எல்லாம் ஒரு ஜீவநதி இருக்கிறது. அது அடுத்தவர் மேல் பரிவு, தயை, கரிசனம் என்று பெருகப் பெருக எழுத்து பெருகும். கம்பீரமாய் நடக்கும் நனைத்துப் போகும். ஆழம் பார்க்கலாம் எனக் கால் வைத்தவனை கை நீட்டி உள்ளிழுத்து அணைக்கும். அளைந்து விளையாட அழைக்கும். அழுக்கையும் கழுவும். ஒரு கை அள்ளி வீட்டிற்குக் கொண்டு போகலாம் என்ற வேட்கையை விதைக்கும். அந்த நதி அடைத்துக் கொண்டால் தேங்கும். கலங்கும். ஊருக்குள் நோய் பரப்பும். சாக்கடையாய் நாறும்.” பேசுவதை நிறுத்திவிட்டு மஞ்சளாகக் கனியத் தொடங்கியிருந்த மாலைச் சூரியனை ஏறிட்டுப் பார்த்தார். அவரது நிழல் அவர் முதுக்குப் பின் நீண்டு கிடந்தது.

“சார் நீங்கள் எழுத்தாளனைச் சொல்கிறீர்களா? அல்லது நம் தலைவர்களைச் சொல்கிறீர்களா?”

ஹாஹ்ஹா என உரக்கச் சிரித்தார் விஸ்வநாதன். “ஓ! உனக்கு அப்படித் தோன்றுகிறதா? ஹ்ம்ம். ஆச்சு. இந்த அக்டோபர் தாண்டினால் எழுதத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளைத் தாண்டிவிடுவேன். 13 வயதில் பிடித்த பேனா. நான் பேனாவைப் பிடித்தேனா, பேனா என்னைப் பிடித்துக் கொண்டதா என்று அவ்வப்போது எனக்குத் தோன்றுவதுண்டு. இந்த ஐம்பது வருடத்தில் ஒரு கழுதை ஆயுசை -முப்பத்தி ஐந்து என்று வைத்துக் கொள்- இந்தக் காகிதங்களோடு அதாவது நியூஸ்பிரிண்ட்டோடு கழித்திருக்கிறேன், என் இத்தனை வருட அனுபவத்தில் என்னால் விடை காணமுடியாத புதிர், யார் அயோக்கியர்கள், மக்களா? தலைவர்களா? என்பது. யார் யாரைக் கெடுத்தார்கள் என்பது. திட்டவட்டமாய், தீர்க்கமாய் இதற்கு எனக்கு விடை தெரியாது.  ஆனால் அனுபவத்தில் ஒன்றை அறிந்து கொண்டிருக்கிறேன்.இந்த தேசத்தில் எல்லோரையும், என்னையும் உன்னையும், அதோ எறும்புச்சாரியாய் ஊர்ந்து வருகிறார்களே அவர்களையும், அங்கே அமரர் ஊர்தியில் படுத்துக் கொண்டு போகிறாரே அந்தத் தலைவியையும், அழுது கொண்டு அருகே நிற்கிறவர்களையும், அழுவதைப் போல பாவ்லா காட்டிக் கொண்டு பக்கத்தில் இருப்பவர்களையும் செலுத்துகிற விசை ஒன்றுதான்: அது சுயநலம்!”

“சார் நீங்கள்தான் இப்போது கசந்து பேசுகிறீர்கள். எனக்குக் கவலையாக இருக்கிறது”   

“ம் உன் கவலையும் சரிதான். அது சுயநலம் இல்லாத கவலை என்றே நம்புகிறேன்!” மாதவன் முதுகில் தட்டினார் விஸ்வநாதன்.

“சரி, எவ்வளவு நேரம் இங்கே நின்று கொண்டிருக்கப் போகிறாய்? உள்ளே போகலாம் வா. எனக்கு உடனே ஒரு டீ குடித்தாக வேண்டும்” புகையை முடித்ததும் தேநீருக்குத் தாவுவது அவரது நெடுநாளைய வழக்கம்.

படியிறங்கும் போது மாதவன் கேட்டான்: “சார்! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த மரணம் இயற்கையானது அல்ல என்று சொல்கிறார்களே? உண்மையாக இருக்குமா?”

“உண்மையா எனத் தெரியவில்லை. ஆனால் சாத்தியங்கள் உண்டு”

“ஆனால் அது பற்றி நாம் எதுவுமே எழுதவில்லையே சார்!”

“அனுமானங்களை செய்திகளாக எழுதுவது நம் வழக்கமில்லை.எழுபது வருடங்களாக அப்படித்தான் இருந்து வந்திருக்கிறோம்”

“ஆனால் மக்கள் நம்மை சந்தேகப்படுகிறார்கள் சார்.”

“என்னவென்று?”

“நாம் உண்மைகளை மூடி மறைக்கிறோம் என்று”

“அவர்கள் இப்போது அப்படி நினைக்கலாம். ஆனால் உண்மைகள் தெரியவரும் போது நம் மீதான அவர்கள் மதிப்பு உயரும். பரபரப்பிற்கு நாம் பலியாகவில்லை என்பதைப் புரிந்து கொள்வார்கள்”

இன்றைய வாசகர்களுக்கு அப்படியெல்லாம் காத்திருக்க அவகாசம் இல்லை; அவர்களுக்கு அன்றைய அப்பத்தை அன்றன்றே கொடுத்தாக வேண்டும் என்று சொல்ல மாதவன் நினைத்தான். ஆனால் அவர் மீதிருந்த மரியாதை காரணமாகச் சொல்லவில்லை.

“உண்மைகள் எப்போது தெரியவரும்?” என்றான் மாதவன்.

“அதுதான் அதைக் குறித்து அரசாங்கம் விசாரணைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறதே?”

“ம்.ம். உத்தரவிட்டிருக்கிறது.” என்ற மாதவன் சிரித்தான். “உங்களுக்குத் தெரியும் சார். நான் சொல்ல வேண்டியதில்லை காந்தி, ஆம் மகாத்மா காந்தி, வெட்ட வெளியில், நல்ல வெளிச்சத்தில், பல பேர் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளி கோட்சேயும் எங்கும் தப்பித்து ஓடவில்லை. கொலை செய்யப்பட்ட ஆயுதத்தோடு அங்கேயே பிடிபட்டார். காந்தி கொலைக்குப் பின் சதி இருக்கிறதா எனக் கண்டுபிடிக்க ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. எப்போது தெரியுமா? காந்தி இறந்து 17 வருடங்களுக்குப் பிறகு!’ இந்தியாவில் காந்திக்கே அதுதான் கதி!” மாதவன் கசந்து போய் சிரித்தான்.

சிகரெட்டை மறுபடி பற்ற வைத்துக் கொண்ட விஸ்வநாதனும் அதை உதட்டிலிருந்து அகற்றிவிட்டுக் சிரித்தார். “  உண்மைதான் என் அனுபவத்தில் சொல்கிறேன். அரசாங்கத்தின் எல்லா கமிஷன்களும் அரசியல் கமிஷன்கள்தான். அவற்றின் உண்மைகள் அரசியலுக்கான உண்மைகள்”

“என்ன செய்யலாம் என்கிறாய் எம்.என்?” என்றார்

“நாமே விசாரிக்கலாம் சார். நான் இதைப் புலன் விசாரணை செய்து எழுதுகிறேன்!”

“நீ சொல்வதில் முதல் பகுதி எனக்கு ஓகே. இரண்டாவது பகுதி நீ என்ன கொண்டு வருகிறாய் என்பதைப் பொறுத்தது”

“புரியவில்லை சார்!”

“நீ புலன் விசாரணை செய். எனக்கு ஆட்சேபமில்லை. ஆனால் அதை வெளியிடுவது என்பது நீ கொண்டு வரும் தகவல்களைப் பொறுத்தது. அவற்றின் ஆதாரங்களைப் பொறுத்தது. அது குறித்து நான் இப்போது ஏதும் உறுதி தர முடியாது”

“தாங்க் யூ சார்!”

“ஆல் தி பெஸ்ட்.” விஸ்வநாதன் எழுந்து கொண்டார். “ ஓகே! எம்.என்! ஒன்றை நினைவில் வைத்துக் கொள். பத்திரிகையாளன் எப்போதும் பார்வையாளன்தான். Onlookerதான். பங்கேற்பாளன் அல்ல. Not a participant.”

“புரிகிறது சார்.”

“தீர்ப்பெழுத அவன் நீதிபதியும் இல்லை” என்று தன் அறைக்குள் புகுந்து கொண்டார் விஸ்வநாதன்.

*

திருவலஞ்சுழி சின்ன ஊர்தான். ஊராட்சி அலுவலகத் தகவல் பலகை ஊரின் மக்கள் தொகை 4914 என்றது. ஆனால் கோயில் பெரிது. பெரிய கோபுரம் தரையிலிருந்து பதினைந்து இருபதடிக்குப் பாளம் பாளமாக கருங்கல் கொண்டு சுவர் அமைத்து, அதன்மேல் ஐந்து நிலைகொண்ட ராஜகோபுரம், அதைத் தாண்டினால் இருபுறமும் தென்னைமரங்கள் வரிசைகட்டி நிற்கும் நீண்ட பாதை. முன்மண்டபத்தில் அழகான வேலைப்பாடு நிறைந்த கல்தூண்கள். உள்ளே போய், வலப்புறம் திரும்பி, வெளிச்சுற்றில் நடந்தால் பெரியநாயகி நின்றிருந்தாள். ஒரு சிறு கோபுரத்திற்குப் பின்னால் அவள் சந்நிதி. பளிங்குனால் இழைத்த தளம் கொண்ட முன் மண்டபம். ஒடுக்கமான வாசல், உள்ளே சின்ன மூர்த்தமாய் அவள். அருகில் இருந்த விளக்கு அவளை விட உயரம். இரண்டரை மூணடியில் சின்ன விக்ரகம். பெயரோ பெரியநாயகி. மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது கோவிலுக்குள்ளேயே இன்னொரு இடத்தில் அஷ்ட புஜ காளி. அமைதியாய் இருந்தால் அவள் நாயகி. ஆவேசமானால் அவள் காளி.  

சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார் சித்ராவின் அப்பா. மண்டபத்தில் நுழையும் இடத்தில் சித்ராவின் அப்பாவின் பெயர் எழுதப்பட்ட குழல் விளக்கு. மண்டப் பளிங்குத் தரை சித்ராவின் அண்ணன் உபயம் என அங்கிருந்த கல்வெட்டு சொன்னது.

ஊரைவிட்டுப் புறப்படும் போது அரசாலாற்றைக் கரையில் நின்று பார்த்தான். ஆறு வறண்டு கிடந்தது. ஆங்காங்கே குட்டையாய் தேங்கி நின்ற நீரில் அழுக்கு வானம் தெரிந்தது. நிரம்பித், தளும்பி, நீரோடி நெடுங்காலமாகியிருக்க வேண்டும் ஆற்றங்கரைப் படிக்கட்டுகள் பெயர்ந்து கிடந்தன. எருக்கலஞ்ச் செடிகள் அடர்ந்திருந்தன. குப்பையும் கூளமும் கொட்டிக் கிடந்தன. ஒரு காலத்தில் ஜீவநதி. இன்று சாக்கடை. மாதவன் மனதில் ‘நதி அடைத்துக் கொண்டால் ஊர் நாறும்” என்ற விஸ்வநாதனின் வார்த்தைகள் வந்து போயின.

அந்த அழகான ஆலய தரிசனத்தைத் தவிர மாதவனுக்கு அந்தப் பயணத்தால் எந்தப் பயனும் இல்லை. சித்ராவின் உறவினர்கள் யாரும் அங்கில்லை. ஊர்க்காரர்கள் அந்தக் குடும்பத்தைப் பற்றிப் பேச அஞ்சினார்கள். கும்பகோணத்து லாட்ஜ் மானேஜர் சாமிநாதனுடன் படித்தவராம். அவர் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின் போது நடந்த சாமிநாதனது சாகசங்களை அளந்துவிட்டார். அப்பட்டமான மிகை. அவனது புலனாய்விற்கு அதில் ஒருவரி கூட உதவாது.

எங்கு போனாலும் ஏமாற்றங்களையே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆஸ்பத்ரியில் ஆவணங்களைத் தர மறுத்தார்கள்.சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பணம் கட்சிப் பணம் என்றும் பத்திரிகை சந்தாவைக் சாமிநாதன் கையாடல் செய்து விட்டார் என்றும் மோசடி வழக்குத் தொடர்ந்திருந்த கட்சிக்காரர் கூட, “இறந்தது எப்படியென்று எனக்கு எதுவும் தெரியாது சார்” என்று கையை விரித்துவிட்டார்.

*

“ஸாரி எம்.என்” என்று ஆரம்பித்தார் விஸ்வநாதன்.” உன் உழைப்பை மதிக்கிறேன். உன் நேர்மையை வியக்கிறேன். ஆனால் ஸாரி” என்றார்.

“என்ன சார்?”

“உன் கட்டுரையை வெளியிட முடியாது. ஸாரி”

“ஏன் சார்?”

“உன் தியரியை நிறுவ உன்னால் போதிய ஆதாரங்கள் தர முடியவில்லை. ஏற்கனவே சொல்லியிருந்தேனே அனுமானங்களை செய்தியாக ஏற்க நான் பயிற்று விக்கப்படவில்லை”

“சார்!”

:அதுமட்டுமல்ல. ஆதாரங்கள் அவர்களுக்குச் சார்பாகப் பேசுகின்றன. சர்க்கரை நோய் இருந்திருக்கிறது. அதை தொடர்ந்து அலட்சியப்படுத்தியிருக்கிறார். ரத்த அழுத்தம் உச்சத்தில் இருந்திருக்கிறது. ஊர் பார்க்க மயங்கி விழுந்திருக்கிறார்.பேஸ் மேக்கர் வைக்க வேண்டிய அளவு இதயம் பலவீனமாக இருந்திருக்கிறது. மரணமடைந்த போது உடலில் எங்கும் ரத்தக் காயம் இல்லை. பின்னந்தலை புடைப்புக் கண்டிருந்தது. அது கட்டிலில் இருந்து விழுந்ததால் இருக்கலாம் எனச் சொல்கிறது போஸ்ட் மார்ட்டம் அறிக்கை. இத்தனையையும் மீறி இதைக் கொலை என்று நிறுவுவது சாத்தியமே இல்லை”

“சார் கட்டிலில் இருந்து விழுந்தார்கள் என்ற கதை நம்பும்படியாகவா இருக்கிறது? கட்டிலிலிருந்து உருண்டு விழ அவர்கள் என்ன சின்னக் குழந்தையா?”

“ம்.அதையும் விசாரித்தேன். சில நேரம் சில பெரியவர்களும் விழுவதுண்டு என்கிறார்கள் டாக்டர்கள்”

“சரி அப்படியே விழுந்தாலும் எப்படி பின் மண்டையில் அடிபடும்?”

“மேஜைக் காலில் இடித்துக் கொண்டிருக்கலாம்”

எல்லாக் கேள்விக்கும் அவரிடம் பதில் வைத்திருப்பது போலத் தோன்றியது.மேலே மேலே வாதிட அயர்ச்சியாக இருந்து. எழுந்து கொண்டான்.

“தாங்க்யூ சார்!”

அவன் முகம் வாடியதைப் பார்த்த விஸ்வநாதன் சற்று அதட்டலாகவே சொன்னார். உரிமை கலந்த அதட்டல். “உட்கார்!” அந்தக் குரலுக்கு ஓர் மந்திர சக்தி இருந்தது. மாதவன் மறுக்க முடியாமல் உட்கார்ந்தான்.

“கட்டுரையைத்தான் போட மாட்டேன் என்று சொன்னேன்/ கதையாக எழுதேன்”

“சார்?”

“நீ திரட்டிய தகவல்களை அடிப்படையாக வைத்துக் கதையாக எழுது. அதில் கற்பனையைக் கலக்க எழுதுகிறவனுக்கு சுதந்திரம் உண்டு. அது பத்திரிகையாளனுக்கு இல்லாத சுதந்திரம். எழுத்தாளனுக்கு அருளப்பட்ட வரம். வரம் வாங்கிக் கொண்டு உன் அடுத்த அவதாரத்தை எடு!”

“சார்!” மாதவனின் உற்சாகத்தில் குரல் தானே கூச்சலாய் உயர்ந்தது. விருட்டென்று எழுந்தான். குனிந்து அவர் கையைப் பற்றிக் கொண்டான்.

“என் கையைப் பிடித்துக் கொண்டால் எப்படி எழுதுவாய்?” என்றார் விஸ்வநாதன். சிரித்துக் கொண்டே அறைக்குத் திரும்பிய மாதவன் கணினியைத் திறந்து கொண்டு எழுத ஆரம்பித்தான்:

“க்க்ரீரீரீச்! அடிபட்ட அணில் போல குரலெழுப்பித் திறந்தது சிறையின் வாசல்”  

(முற்றும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com