தோழி

அத்தியாயம் - 17
தோழி

கையில் ஏந்தியிருந்த வாளின் முனையை விரல்களால் தடவிக் கூர் பார்த்தாள் காந்தாரி.

“அசலா, இவ்வளவு கூர்மை வேண்டாம். இன்று கண்ணைக் கட்டிக் கொண்டு உன்னுடன் மோதப் போகிறேன். என் வாள் உன்னைக் காயப்படுத்த வேண்டாம். அதை என்னால் தாங்க முடியாது”

“அக்கா, உன் வாள் என் மீது வீசப்படும் போது என் வாள் பூக்களைக் கொய்து கொண்டிருக்கும் என்றா நினைக்கிறாய். அவ்வளவு திறமையற்றவன் அல்ல அக்கா இந்த அசலன்”

காந்தாரி கல கலவென்று சிரித்தாள். “உன் வீரம் எனக்குத் தெரியுமடா என் அருமைத் தம்பி.” அருகில் வந்து தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டாள். “நீயும் நானும் யுத்தமா புரியப் போகிறோம்? நாம் விளையாடப் போகிறோம். பயிற்சி எடுத்துப் பழகப் போகிறோம். அதற்கெதற்கு கூர் வாள்?”

அசலன் இன்னொரு வாளை எடுத்து வந்தான். காந்தாரி அதைக் கையிலேந்தி வான் நோக்கி நிமிர்ந்தாள். கதிர் ஒளி பட்டு அந்தக் கத்தி பொலிந்தது.

“ஆரம்பிக்கலாமா அக்கா?”

“இரு... இரு” என்றவள் முக்காடிட்டிருந்த தன் துணியை அவிழ்த்தாள். கருப்பாய் ஒரு அருவி இறங்கியதைப் போல கூந்தல் சரிந்து முதுகை நிறைத்தது. தலைத் துணியை உதறி நீளவாக்கில் நான்காக மடித்து கண்ணை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்

“மூன்று விரல் காட்டு”

அசலன் சிரித்தான். “என்ன அக்கா, நீயே எத்தனை விரல் என்று சொல்லிவிட்டு அப்புறம் அந்த எண்ணிக்கையை சரியாகச் சொல்லிவிட்டேன் என்று பெருமையடித்துக் கொள்ளவா”! இது தப்பாட்டம்!”

“ தப்பு தப்பு” என்று நாக்கைக் கடித்துக் கொண்டாள் காந்தாரி. “சரி நீயே எத்தனை விரல் வேண்டுமானாலும் காட்டு”

அசலன் அருகில் இருந்த செடியிலிருந்து ஒரு பூவைக் கிள்ளி எடுத்தான். கட்டப்பட்டிருந்த அவள் கண் முன் நீட்டினான்.

“இது என்ன?”

“ரோஜா”

“எப்படியக்கா கண்டுபிடித்தாய்?”

“முட்டாளே! கண்ணைத்தானே கட்டியிருக்கிறேன். மூக்குமா மூடியிருக்கிறது? வாசனை தெரியாதா?”

“பூ சரி, என்ன நிறம் சொல் பார்க்கலாம்!”

“மஞ்சள்”

“அக்கா எப்படி இப்படி சற்றும் யோசிக்காமல் சரியாகச் சொல்கிறாய். கண் தெரிகிறதா? கட்டு சரியாகப் போட்டிருக்கிறாயா?”

“இன்று தோட்டத்திற்குள் நுழையும் போதே பார்த்து விட்டேன். இன்றுதான் அது பூத்திருந்தது. நீ நிற்கும் இடத்திற்கு அருகில் உள்ள அந்தச் செடியில் நேற்று மொட்டுக் கட்டியிருந்தது. என்ன ஆயிற்று என்று வந்ததும் பார்த்தேன். மலர்ந்திருந்தது. அதற்குள் உன் வாள் அதைப் பதம் பார்த்துவிட்டது”

“அக்கா, நீ பயங்கரமான ஆள்!”

“பேசிக் கொண்டு நிற்காமல் உன் வாளை எடு. நீ தாக்கப் போகிறாயா? தடுக்கப் போகிறாயா?”

“நான் இன்று தடுப்பாட்டம் ஆடுகிறேன் அக்கா!”

அவன் சொல்லி வாய் மூடுவதற்குள் காந்தாரியின் வாள் அவன் வாளுடன் மோதியது. அதைத் தடுத்து கீழே தள்ளிய அசலன் ஒரு அடி பின் வாங்கினான். கண்கள் கட்டப்பட்டிருந்த போதிலும் காந்தாரி சளைக்காமல் முன்னேறினாள். அசலன் முன் நகர்ந்து அவள் வாளைத் தாக்க முனைந்த போது சட்டென்று பின் வாங்கி விர்ரென்று சுழன்றாள்.அவள் சுழலும் போது கூந்தல் ஒரு மேகம் போல் அலைந்து அடங்கியது.

முன்னும் பின்னுமாக நகர்ந்தும், சுழன்றும் பக்கவாட்டில் ஒதுங்கியும் நெருங்கியும் அசலனை அங்குமிங்குமாக நகர்த்தி ஒரு மரத்தின் கீழ் நெருக்கி நிறுத்தினாள். அப்போது அவள் வாள் அவன் நாடிக்குக் கீழ் கழுத்தைத் தொட்டுக் கொண்டு நின்றது.

“ என்னை கொன்று விடுவது என்ற திட்டத்தோடுதான் வந்திருக்கிறாயா, அக்கா?” என்றான் அசலன் மிரண்டுபோய்

காந்தாரி வாளைக் கீழே போட்டுவிட்டு கையால் அவன் வாயைப் பொத்தினாள். கண்கட்டை அவிழ்த்துக் கொண்டே சொன்னாள்“ உளறாதே!. இனி விளையாட்டுக்குக் கூட இப்படிச் சொல்லாதே. அப்பா, வருஷன், நீ, சகுனி எல்லோரும் எனக்கு உயிர். நாம் எல்லோரும் சேர்ந்து இந்தக் காந்தாரத்தை விஸ்தரிப்போம். அருகில் உள்ள மத்ர, காம்போஜ் எல்லாவற்றையும் கைப்பற்றி ஒரு சாம்ராஜ்யம் கட்டுவோம்”

“உனக்கு பெரிய பெரிய ஆசைகள் அக்கா! . ஆனால், யார் கண்டது, அவை நிறைவேறினாலும் ஆச்சரியமில்லை. நீ சக்ரவர்த்தினியாக ஆவாய் என்று உன் ஜாதகம் சொல்கிறதாம்,. தெரியுமா உனக்கு”

“ஜாதகம்? ஹா!” என்று கசந்து போய் சிரித்தாள் காந்தாரி. “தம்பி! மறந்து விட்டாயா? நான் ஒரு விதவை! கன்னி, ஆனாலும் விதவை”

அசலன் மெளனத்தில் மூழ்கினான். பேச்சை மாற்ற நினைத்தவன், :”அக்கா, கண்கள் கட்டியிருந்தாலும் எப்படி நீ இவ்வளவு துல்லியமாக நகர்கிறாய்? அந்த ரகசியத்தை எனக்கும் சொல்லேன்”

“கண்கள் மூடியிருந்தால் என்ன? காதுகள் திறந்திருக்கின்றனவே! உன் காலடி ஓசை நீ எந்தத் திசையில், எந்த வேகத்தில் நகர்கிறாய் என்பதை எனக்குச் சொல்கிறதே!”

“அக்கா!”

“அதை மட்டுமல்ல.காந்தாரத்தின் காற்று எனக்கு நித்தம் நித்தம் கவிதைகள் சொல்கிறதடா தம்பி.

பால் வெண் நிலவும்

பனிச்சாரல் காற்றும்

நாளும் எனக்கு ஒரு

சேதி சொல்லும்

ஆளும் அரசி ஆனாலும்

அடிமைப் பெண் என்றாலும்

கோளும் கொண்டவன்

சொல்லும் கொடுப்பதே

வாழ்க்கை என்றே அறி.”

“அக்கா! உன் வாள் வீச்சை தாக்குப் பிடிப்பேன். கவிதைத் தாக்குதலை ஆரம்பிக்காதே. தாங்க மாட்டேன், சரணம், சரணம்! என்று எழுந்து கொண்டான் அசலன். அவனும் காந்தாரியும் தத்தம் குதிரையை நோக்கி நடந்தார்கள்

“என்ன அக்கா! அரசியல் பரபரப்பா இருக்குனு சொல்றாங்க, நீங்க கத்திச் சண்டை பார்த்திட்டு இருக்கீங்க” பாதம் பாலைக் கொண்டு வந்து வைத்த சித்ராவின் குரலைக் கேட்டு தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து பார்வையைத் திருப்பினாள் வித்யா.

“அரசியல் பரபரப்பா இருக்குனு யார் உனக்கு சொன்னா?”

வித்யா சீறப் போகிறாள் என்று எண்ணிய சித்ரா தலையைக் குனிந்து கொண்டு மெளனமானாள். ஆனால் வித்யா குரலை உயர்த்தாமல் “சொல்லு!” என்று வற்புறுத்தியபோது ஆச்சரியப்பட்டாள். அன்று அவளுக்கு அடுத்தடுத்து ஆச்சரியங்கள் காத்திருந்தன.

“சாமி சார்தான் சொன்னாரு”

“என் முதுகுக்குப் பின் நீங்க அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்கீங்களா?” என்பதுதான் அடுத்த கேள்வியாக இருக்கும் என்று சித்ரா நினைத்தாள். எப்போதும் போல் இருக்கும் வித்யாவாக இருந்தால் அதுதான் கேள்வியாக இருக்கும். சாட்டை வீசியது போலக் கேள்விகள் வந்து விழும். அந்தக் கசையடி அவளுக்கு இத்தனை நாளில் பழகியிருந்தது.

“ உனக்கு அரசியலில் இன்ட்ரஸ்ட் உண்டா?”

முதலில் இல்லை என்பது போல் தலை ஆட்டிய சித்ரா உடனேயே ஆம் என்பதைப் போல தலையாட்டினாள்

“என்ன, சந்திரபாலன் பட ஹீரோயின் போல தலையை ஆட்ற? உண்டா இல்லையா?”

“உண்டுக்கா.என் அண்ணன் ஒருத்தர் கொஞ்ச நாள் கட்சியிலிருந்தாரு. அக்கம் பக்கத்தில் கூட்டம் நடந்தா கோவில் திருவிழாவிற்குப் போவதுபோலக் குடும்பத்தை கூட்டிட்டுப் போவாரு. எங்களுக்கு கிராமத்தில அதுதான் பொழுதுபோக்கு”

“சரி அப்ப உட்கார். நீயும் பாரு. நீயும் கத்துக்க”

“ எதை அக்கா?”

“அரசியலில் ஜெயிக்க வேண்டுமானால் மகாபாரதம் பாருனு அன்னிக்கு பெரியவர் சொன்னாரு. அதான் பார்த்துக் கிட்டு இருக்கேன். நீதானே போய் கேஸட் வாங்கிட்டு வந்த?”

“ஆமக்கா. ஆனா அதில கத்துக்க என்ன இருக்கு? அண்ணன் தம்பிங்க சொத்துக்காக அடிச்சுக்கிட்டு செத்தாங்க. அதானே கதை”

:”அடிப்பாவி! என்ன இப்படிச் சொல்லிட்ட. நீ மகாபாரதம் படிச்சிருக்கியா?”

“பாரதம் வீட்டுல வைச்சுப் படிக்கக் கூடாதும்பாங்க. சண்டை வருமாம். கிராமத்தில கூத்துப் பார்த்திருக்கேன். கர்ணன் படம் பாத்திருக்கேன்”

“இதைப் பாரு, ஒவ்வொரு பாத்திரமும் ஒரு பாடம்”

“இப்போ கத்திச் சண்டை போட்டது யாருக்கா?”

“காந்தாரி”

“அட, அவளை ஆங்காரினுல சொல்வாங்க!”

“அப்படித்தான் சொல்வாங்க. ஆனா அவளுக்கு கத்திச் சண்டை தெரியும். கவிதை தெரியும். குதிரை ஓட்டத் தெரியும்.பக்கத்து நாடான காம்போஜிலிருந்து கர்கம் என்ற வெள்ளைக் குதிரையைத் தருவித்துப் பழக்கினாள் என்று எழுதியிருக்கிறார்கள். அவளுக்கு சங்கீதம் தெரியும். சாமுத்ரிகா லட்சணம் தெரியும்”

“அவளையா ஆங்காரினு சொல்றாங்க?”

“ஒருத்தரைப் பற்றி முழுசும் தெரியாம யாரைப் பற்றியும் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனா அது உண்மையா இருக்கணும்கிறது அவசியம் இல்ல”

“ஆமக்கா”

“என்னைக் கூட அகங்காரினு சொல்றாங்க, இல்லை?’

சித்ரா பதில் பேசாமல் மெளனமாகத் தரையைப் பார்த்தாள்

“சொல்லு, நான் அகங்காரியா?”

சித்ரா பதில் சொல்லவில்லை. ‘நாம டிவி பார்க்கலாம்க்கா” என்றாள்.

டிவியைப் போட்டதும் கதை வேகமாக ஓடியது

புழுதி பறக்க, பெரும்படையுடன் பீஷ்மன், திருதிராஷ்டனுக்குப் பெண் கேட்டு வந்தது, திருதிராஷ்டன் கல்யாணச் சடங்குகளை பாடல் காட்சியாக ஓட்டினார்கள். பாடல் முடிந்ததும் பீஷ்மரிடம் ஓர் ஒற்றன் வந்து வணங்கி நின்றான்

விதுரனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த பீஷ்மர் பேச்சை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தார்

“என்ன?”

“பிதாமகரே, நான் இதைச் சொல்வதற்கு என்னை மன்னிக்க வேண்டும்”

“என்ன?”

ஒற்றன் தயங்கினான்.

“என்ன சொல்லு!” அதட்டினார் பீஷ்மர்

“நம் மகராணி...”

“மகராணிக்கு என்ன?”

“நம் மகராணி ...ஒரு விதவை!”

“என்ன உளறுகிறாய். திருதிராஷ்டனுக்கு என்ன நேர்ந்தது?”

பீஷ்மன் வாளை உருவினான்.

“சற்றுப் பொறுங்கள் அண்ணா. அவன் சொல்லட்டும்” என்ற விதுரன் விவரம் முழுவதும் சொல்” என்றார் ஒற்றனிடம்

“மகாராஜாவிற்கு ஒன்றும் இல்லை. ஆனால் மகாராணி ஒரு விதவை” என்றான் ஒற்றன்.

விதுரன் எழுந்து ஒற்றன் அருகில் சென்றார் ஆறுதலாக அவன் தோளில் கை வைத்தார். “பயப்படாமல், பதட்டப்படாமல் சொல்!” என்றார்.

காந்தாரியின் ஜாதகப்படி அவளுக்குத் திருமணம் நடந்தால் கணவன் இறந்து விடுவான் என்று ஜோசியர்கள் சொன்னதால் ஒரு ஆட்டுக் கிடாவிற்குக் கல்யாணம் செய்து வைத்த அவள் தந்தை சுபலன் பின் அந்த ஆட்டைக் கொன்று விட்டதையும் விவரித்தான் ஒற்றன்.

“ உனக்கு யார்  சொன்னார்கள் இதை?”

“காந்தார அரசர்  தனது மகன்களை அரண்மனையை விட்டு வெளியே தனியே அழைத்து வந்து தோட்டத்தில் வைத்து அவர்களிடம், ‘உயிர் போனாலும் இந்த விஷயம் அஸ்தினாபுரத்திற்கு தெரியக் கூடாது’ என்று ரகசியமாகச் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். நம் ராஜ்ய விஷயம் என்பதால் உங்களிடம் சொலிவிட வேண்டும் என்று ஓடி வந்தேன்”

“இப்போதே புறப்படுகிறேன். என்னுடன் ஒர் சிறு படை வந்தால் போதும். சுபலனைச் சிறைப்பிடித்து வருகிறேன்”

“அவசரப்பட வேண்டாம் அண்ணா. சரியோ தவறோ அவர்களுடன் திருமண சம்பந்தம் வைத்துக் கொண்டிருக்கிறோம். அதை ஜாதகம் பார்த்து அவளுக்கு நூறு  குழந்தைகள் பிறக்கும் என்று உறுதி செய்து கொண்டு, நாம்தான் படையுடன் போய் திருமணம் செய்து கொண்டு வந்திருக்கிறோம். சுயம்வரத் திருமணம் அல்ல. அவர்களைச் சிறைப் பிடிப்பானேன்?. விருந்துக்கு வரவழைத்து விசாரித்து விடுவோம் என்றான் விதுரன்

விருந்தில் எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டு விட்டான் சுபலன். மகளைத்  அஸ்தினாபுரத்து அரசியாக்க ஆசைப்பட்டு தன்னிடம் பொய் சொல்லி ஏமாற்றிவிட்டதாகப் பொங்கினான் பீஷ்மன். விதுரன் வேறு ஒரு பிரசினையைக் கிளப்பினான். விதவைக்குப் பிறந்த பிள்ளைகள் அரசுரிமை பெறத் தகுதியற்றவர்கள் என்று விதிகள் சொல்வதாகச் சொன்னான்.

“அஸ்தினாபுரத்திற்கு அரச வாரிசு வேண்டும் என்பதற்காகத்தானே திருமணமே செய்தோம். அவன் இப்படி ஏமாற்றி விட்டானே!” என்று பொருமினான் பீஷ்மன்.

“ஏமாற்றவில்லை. அது ஆள் அல்ல. ஆடுதான். அவள் இன்னமும் கன்னிதான்” என்று விளக்க முற்பட்டான் சுபலன். “இதை வெளியே தெரியாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றும் சொன்னான்

“பேசாதே!” என்று இரைந்தான் பீஷ்மன்

தன் தந்தையை, அவனும் ஓர் அரசன் என்ற மரியாதை கூட இல்லாமல், இப்படி அகெளரவப்படுத்துவதை சகுனியால் பொறுக்க முடியவில்லை.

“ ஏமாற்றினோமா? என்று சீறினான். நீங்கள்தான் எங்களை ஏமாற்றியவர்கள். திருதிராஷ்டிரனுக்குக் கண் தெரியாது என்ற விஷயம் எங்களுக்கு நீங்கள் திருமணத்திற்கு வந்த பின்புதான் தெரியும்”

“ஷ்.சும்மா இரு” என்று அவனை அடக்கினான் சுபலன்

“படையுடன் நாம் போனதால் இவர்கள் நம்மைப் பழி வாங்குகிறார்களோ என்று நான் சந்தேகப்படுகிறேன், விதுரா!. இவர்களை வெளியே விட்டால் இவர்களே நாட்டிலும் அண்டை அசலிலும் செய்தி பரப்புவார்கள். குரு வம்சம் தலை குனிந்து நிற்பது கண்டு ஆனந்தப்படுவார்கள். அரண்மனையைத் தாண்டி இவர்கள் வெளியே போகக் கூடாது. இவர்களை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன். யாரங்கே!”

“அவர்கள் அரச குடும்பத்தினர், சிறை வைத்தாலும் அவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும். உணவு, படுக்கை எல்லாம் உயர் தரமாக இருக்க வேண்டும்” என்றான் விதுரன்.

“விதுரா, உன் நீதி உபதேசங்களை ஊர் மக்களுக்குச் சொல். என்னிடம் வைத்துக் கொள்ளாதே. எது நாட்டிற்கு நல்லது என்று எனக்குத் தெரியும்” என்று சிடுசிடுத்தான் பீஷ்மன்.

தந்தையும் சகோதரர்களும் சிறை வைக்கப்பட்ட செய்தி காந்தாரியை எட்டியது. சிறைக்குச் சென்று அவர்களைப் பார்த்தாள்

“எல்லாம் என்னால்தான் அப்பா. என் ஜாதகத்தால்தான் அப்பா. எனக்கு நூறு குழந்தைகள் என்பது வரமா? சாபமா?”

கண்ணீர் பெருக்கிய காந்தாரியைப் பார்த்து சுபலன் சொன்னான். “கலங்காதே மகளே. சிறை என்னை வருத்தவில்லை. ஆனால் ஏமாற்றிவிட்டேன் என்று சொல்கிறார்கள் பார், அதுதான் சுடுகிறது. கண்ணீர் கசிந்து விடாமல் கண்ணை இறுக்கிக் கொண்டான். ஹூம் என்று ஒரு நெடுமூச்சு அவனிடமிருந்து பிறந்தது.

“சரி,ஏமாற்றுக்காரனாகவே இருந்து விட்டுப் போகிறேன். பிள்ளைகளால் பெற்றோர் சிறுமைப்படுவது என்றும் எங்கும் இருப்பதுதான். ஆனால் உன்னை சக்ரவர்த்தினியாகப் பார்க்க நான் எதை வேண்டுமானாலும் இழக்கத் தயார். என் கெளரவத்தை விட உன் சுகம்தான் எனக்குப் பெரிது”

காந்தாரியின் ஆற்றாமையும், தன்னிரக்கமும் அடக்கமாட்டாத ஒரு விசும்பலாக வெடித்தது.

“ ஹும், சக்ரவர்த்தினி! இளவரசியானாலும், எடுபிடி வேலைக்காரனின் பெண்ணானாலும், தகப்பன்மார்கள் தங்கள் மகள்களை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவார்கள். ஆனால் அந்த அரசிகளாலும் அடிமைகளாலும் தங்கள் தகப்பனைக் காப்பாற்ற எதுவும் செய்ய முடியாது. கை பிசைந்து கண்ணீர் சிந்தி நிற்பார்கள்.”

“ அரசிகள் அழக்கூடாது அக்கா. நாங்கள் எங்களைப் பார்த்துக் கொள்கிறோம். அக்கா, உனக்காவது ஒழுங்காசச் சோறு போடுகிறார்களா?” என்றான் அசலன்

“ஏன் அப்படிக் கேட்கிறாய்? நான் இளைத்து வாடியிருக்கிறேனா?”

“இல்லை. ஆனால் அஸ்தினாபுரத்தில் அன்னத்திற்குப் பஞ்சம் என்று தோன்றுகிறது!” என்றான் சகுனி. அவன் குரலில் இகழ்ச்சி இழையோடிற்று.

“என்ன சொல்கிறாய், சகுனி?”

“எங்கள் நான்கு பேருக்கும் மூன்று வேளைக்கும் சேர்த்து ஒரு பிடி அன்னம்தான் கொடுக்கிறார்கள். ஒரு தேங்காய்ச் சில்லில் தண்ணீர் கொடுக்கிறார்கள். சிறைக் கைதிகளுக்குச் சோறு போடக் கூட வக்கில்லாமல் அத்தனை வறட்சியில் இருக்கிறது அஸ்தினாபுர அரசு!”

சகுனி சொன்னதை அசலன் விளக்கினான். “இதெல்லாம் பீஷ்மரின் சூழ்ச்சியக்கா.. எங்களைக் கொல்வது தர்மமில்லை என்கிறார் விதுரர். அதனால் பட்டினியால் சாகட்டும் எனத் திட்டமிடுகிறார் பீஷ்மர்”

கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் விசும்பினாள் காந்தாரி.

இரவெல்லாம் நிலவினில் உலவினாள். அனல் போல் சுட்டது நிலவு. தூங்க முயன்றாள். உறக்கம் ஓடி ஒளிந்து கொண்டது. படுத்துக் கொண்டே யோசித்தாள். பகல் தொடங்கிய போது மனம் தெளிந்திருந்தது.

“அப்பா. நான் இரவெல்லாம் யோசித்தேன். இதைச் சொல்லும் போது இளகிவிடக்கூடாது என்று நூறுமுறை எனக்கு நானே சொல்லிச் சொல்லி என்னைக் கல்லாக்கிக் கொண்டிருக்கிறேன். “நீங்கள் அனைவரும் போன பின் நான் வாழ்வதில் நியாயம் இல்லை என்றுதான் முதலில் தோன்றியது. ஆனால் எதிரிகளை வீழ்த்தாமல் நான் வீழ்ந்தேன் என்றால் இந்த வாழ்க்கைக்குப் பயன் இல்லை. ஒருபிடி அன்னம் நால்வருக்குப் போதாது. ஆனால் அதைக் கொண்டு ஒருவர் சில நாள்கள்உயிர் தரிக்க முடியும். அதற்குள் ஏதாவது செய்யப் பார்க்கிறேன்.அந்த ஒருவர் யார் என்பதை நீங்கள் கூடிப் பேசி முடிவு செய்யுங்கள். என் தேர்வு சகுனி.

“ஏன் சகுனி?” என்றான் வருஷன்

“என் திட்டம் நிறைவேற ஆண்டுகள் பலவாகும். அப்பாவிற்கு வயதாகி வருகிறது.உனக்கும் அசலனுக்கும் பொறுமை போதாது”

“ஆனால் என்னால் சரியாக நடக்கக் கூட முடியாது அக்கா.. மலையேற்றத்தின் போது சறுக்கி விழுந்து என் கால் முறிந்ததை மறந்து விட்டாயா காந்தாரி?”

“நன்றாக ஞாபகம் இருக்கிறது சகுனி. ஆனால் பார்வைக்கு பலவீனமானர்கள்தான் என் திட்டத்திற்கு உதவ முடியும். அவர்கள் மீது எப்போதும் ஏளனம் இருக்கும். அலட்சியம் இருக்கும். அவர்களை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் அவைதான் நம் கவசம்”

“அக்கா. எனக்குப் புரியவில்லை. அஸ்தினாபுரத்தின் படை பெரிது. பீஷ்மரின் அனுபவம் பெரிது. திறமை உலகறிந்தது. அவரோடு நாம் எப்படி மோத முடியும்?”

“தம்பி பலத்தால் வெல்ல முடியாத எதிரிகளை அவர்களது பலவீனத்தால் வீழ்த்த முடியும்”

“அக்கா! என்ன சொல்கிறீர்கள்?”

காந்தாரி கண்ணீரினூடே சிரித்தாள். அவள் சிரிப்பில் உறைந்து நின்றது காட்சி.

“சூப்பர் அக்கா!”

தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்த வித்யா, “எனக்கு இப்போது காந்தாரியை ரொம்பப் பிடிக்கிறது என்றாள்.

“உனக்கு?”

“பலத்தால் வெல்ல முடியாத பலவான்களை அவர்களது பலவீனத்தால் வெல்ல முடியும் என்று அவள் சொன்னது எனக்குப் பிடித்திருக்கிறது” என்றாள் சித்ரா.

இருவரும் கொட்டாவி விட்டுக் கொண்டே உறங்கப் போனார்கள். வெளியே நிலவு சிரித்தது.        

  (தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com