தோழி

அத்தியாயம் - 18
தோழி

“இன்னிக்கு என்ன பிரேக்பாஸ்ட்?” சற்றும் எதிர்பாராத விதமாக டைனிங் டேபிளில் வந்தமர்ந்து கொண்ட வித்யாவின் கேள்விக்கு விடை காண அடுக்களைக்கு விரைந்தாள் சித்ரா.

தவிட்டு நிறத்தில் குருவி ஒன்று விர்ர்ர்ரென்று சுற்றிவிட்டு ஜன்னலில் அடித்திருந்த வலையில் தொற்றிக் கொண்டு கழுத்தை திருப்பிப் பார்த்தது. பின் என்ன நினைத்ததோ, மின் விசிறியின் இறகில் போய் அமர்ந்தது. அங்கிருந்து விசிறியைக் கூரையோடு இணைக்கும் கோப்பையில் போய் இளைப்பாறியது.

காலை உணவைக் கொண்டு வந்து சித்ரா மேசையில் வைத்ததைக் கவனிக்காமல் குருவியையே பார்த்துக் கொண்டிருந்தாள் வித்யா.

“சித்ரா, கொஞ்சம் அரிசி கொண்டா!”

“ எதுக்குக்கா?”

“கொண்டாயேன், சீக்கிரம்”

வேலைக்காரப் பெண் கொண்டு வந்த சின்னக் கிண்ணத்தில் மூன்று விரலை முக்கி சில மணிகளை எடுத்து தரையில் இறைத்தாள் வித்யா.

இருந்த இடத்திலிருந்து குருவி கிளம்பவில்லை. வித்யாவிற்கு ஏமாற்றமாக இருந்தது.

“நீங்க சாப்பிடுங்க. அது அரிசிக்கு வரலை. குஞ்சு பொறிக்க இடம் தேடுது” என்றாள் சித்ரா

“உஷ்!” என்றாள் வித்யா.

ஓசைகள் அற்ற ஒரு நிசப்தம் நிலவியது. வித்யா குருவியையும், சித்ரா வித்யாவையும், பார்த்துக் கொண்டு நின்றார்கள். இருவர் பார்வையிலும் ஒரே வாக்கியம்தான் ஒளிர்ந்தது: ‘இதென்னடா அதிசயம்!’

சற்றும் எதிர்பாராத தருணத்தில் குருவி விர்ரென்று கீழிறங்கியது. கழுத்தை இப்படியும் அப்படியுமாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தது. பின் அரிசி மணிகளைக் கொத்தத் தொடங்கியது. அது உண்பதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் வித்யா.

“பசியை அனுபவித்திருக்காவிட்டால், பட்டினியால் சகோதர்கள் சாவதைப் பார்க்க நேர்ந்திருக்காவிட்டால், அந்த இளவரசன் இறுகிப் போயிருக்க மாட்டான், இல்லையா?”

“யாருக்கா?”

“சகுனி.”

“இன்னும் அந்த வீடியோ உங்கள் மனதில் ஒடிக் கொண்டிருக்கிறதா அக்கா?”

வித்யா பதில் சொல்லவில்லை.

“ஒரு பிடி சோறு! அது கிடைத்திருந்தால் வாழ்க்கையே மாறியிருந்திருக்கும். வரலாறே மாறியிருந்திருக்கும்!”

“மகாபாரதம் வரலாறா அக்கா?”

வித்யா பதில் சொல்லவில்லை. அவள் மனதில் எண்ணங்கள் பெருகிப் படர்ந்து கொண்டிருப்பதை சித்ராவால் ஊகிக்க முடிந்தது. இடையில் ஏதும் பேசினால் அந்த எண்ணங்கள் அறுந்து போகும் என்று நினைத்தாளோ என்னவோ? ஏதும் பேசாமல் நின்றாள்.

அந்த எண்ணங்கள் என்ன என்பதை பெரியவரிடம் வித்யா சொல்லும்போது அருகில் இருந்து அவள் கேட்க நேர்ந்தது. கேட்டபோது அவள் வியப்பில் திகைத்து நின்றாள்.

•••••••••••••••

“ ஆச்சரியமாக இருக்கிறதே!” என்று மேஜை மீதிருந்த பேப்பர் வெயிட்டை உருட்டிக் கொண்டே சிரித்தார் பெரியவர்.

“அப்படி என்ன ஆச்சரியம்!”

“கோட்டைப் பக்கமே வர மாட்டேன், என்னுடைய வேலை கட்சியில்தான். ஆட்சியில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் உங்கள் செல்லப் பிள்ளையை, அதான் உங்கள் கணக்குப் பிள்ளையை வைத்துக் கொள்ளுங்கள் என்று யாரோ சொன்னதாக ஞாபகம்” என்றார் பெரியவர்

எப்போதோ தான் சொன்ன வார்த்தைகளைத் தன்னிடமே திருப்பிச் சொல்லிக் காட்டுகிற சாமர்த்தியத்தை வித்யா ரசிக்கவிலை. ஆனால் அந்தக் கிண்டல் சித்ராவிற்குப் பிடித்திருந்தது.

“ஒரு திட்டத்தோடு வந்திருக்கிறேன்” என்றாள் வித்யா

“கோட்டையைப் பிடிக்கவா?”

“ம். அதற்கும்தான். ஆனால் அது மட்டும் அல்ல”

“என்ன திட்டம்?”

“அரசாங்கம் மக்களுக்குச் சோறு போடப் போகிறது!”

“வேலை இல்லாப் பட்டதாரிகளுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும், அதானே? முருகய்யனின் ஆள் உவரி சேவியர் வந்து அதைப் பற்றிப் பேசிப் போனார்”

“அது இல்லை”

“பின்னே? இலவச அரிசியா?”

“அதுவும் இல்லை. நான் சொல்வது சோறு. சமைத்த சோறு. மக்கள் அனைவருக்கும் இலவசமாக சாப்பாடு”

“என்னது!” பெரியவரின் புருவங்கள் உயர்ந்தன

வித்யா சகுனியின் கதையைச் சொன்னாள். “சோறு கிடைக்காதவர்கள் நெஞ்சில் வன்மம் வளர்கிறது. கிடைத்தவர் மனதில் நன்றி சுரக்கிறது” என்றாள்

“அதைப் புரிந்துகொள்ள சகுனி அவசியமில்லை. எனக்கே அனுபவம்தான். ஆனால்?”

“ஆனால் அதை அரசாங்கம் எப்படியம்மா செய்ய முடியும்?”

“நெஞ்சுக்கு வாசல் வயிறு. கேள்விப்பட்டதில்லை? வயிற்றை நிறைத்தால் நெஞ்சில் நிறையலாம்:

“அதெல்லாம் சரி. ஆனால் நடைமுறையில் இது சாத்தியம் இல்லை”

“ஏன் சாத்தியம் இல்லை?”

“எப்படி சாத்தியம்? ஒவ்வொரு ஊரிலும் அடுக்களை கட்டுவியா? சமையலுக்கு ஆள் போடுவியா? அடுப்பில் ஏற்றி இறக்குவதோடு முடிந்ததா? காய்கறி வாங்குவது, சுத்தம் செய்வது, அரிவது, அப்புறம் சமைத்த பாத்திரத்தைத் துலக்குவது என்று சின்னதும் பெரிதுமாக எத்தனை வேலைகள்! என்னம்மா நான் சொல்வது?” என்று பெரியவர் சித்ராவைப் பார்த்தார்.” முன்னால் இருந்தவர்கள் இதைப் பற்றியெல்லாம் யோசித்திருக்கிறார்கள். அதனால் வெறுமனே பால் பவுடரைக் கரைத்துக் கொடுப்பதோடு நிறுத்திக் கொண்டு விட்டார்கள்”

“சாத்தியமில்லை என்று பிறர் கைவிட்டதை சாதித்துக் காட்டுபவர்கள்தான் சாமர்த்தியசாலிகள். அவர்கள்தான் வரலாற்றில் வாழ்கிறார்கள்.”

“இதெல்லாம் பேச நன்றாக இருக்கும். காரியத்திற்கு ஆகாது. நீ சொல்கிற வேலையை செய்து முடிக்க ஒரு படையே வேண்டும். ஊருக்கு ஊர் ஆள் வேண்டும். அத்தனை பேர் எங்கிருக்கிறார்கள்?”

“இருக்கிறார்கள். வீடுகளுக்குள் உறைந்து கிடக்கும் பெண்களுக்கு வேலை கொடுப்போம்”

“பெண்களா?”

“பின்னே? இதற்கு ஐஏஎஸா படித்திருக்க வேண்டும்? படித்தவர்களும் பட்டதாரிகளுக்கும்தான் உங்கள் அரசாங்கம் வேலை கொடுக்குமா? சாதாரண சமையல்காரப் பெண்களுக்கு கொடுக்காதா?”

“ பெண்கள் வீடுகளில் சமைப்பார்கள். நான்கு பேருக்கு ஐந்து பேருக்கு, ஏன் பத்துப் பேருக்குக்கூட சமைப்பார்கள். நூறு பேருக்கு சமைப்பார்களா? கல்யாண சமையல்காரர்கள் எல்லாம் ஆண்கள்தான். இந்த வேலைக்குப் பெண்கள் வருவார்களா?”

“வருவார்கள் ஸார்” என்றாள் சித்ரா குறுக்கிட்டு. “கிராமப்புறத்தில் நிறையப் பெண்கள் வருமானத்திற்காக வயல் வேலை, தோட்ட வேலைனு போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். கையில் கொஞ்சம் காசிருப்பவர்கள் நகரங்களுக்குப் பெயர்ந்து விட்டார்கள். போகமுடியாதவர்கள் கிராமத்தில் முடங்கி விட்டார்கள். அரசு வேலை என்றால் அவர்கள் வருவார்கள்”

“ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பெண்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒட்டு இருக்கிறது” என்றாள் வித்யா

“அதெல்லாம் போடமாட்டாங்கமா. அவங்க புருசன் என்ன சொல்றாரோ அதைக் கேட்டுக் குத்திட்டு வருவாங்க” என்றார் பெரியவர்

“அதையெல்லாம்தான் மாற்றப் போகிறோம்” என்றாள் வித்யா

பெரியவர் கண்களை மூடிக் கொண்டு யோசித்தார். பின், “எவ்வளவு ஆகும்?”

“அந்தக் கணக்கெல்லாம் உங்கள் பாடு. ஒன்று மட்டும் சொல்கிறேன். என் வீட்டிற்கு ஒரு சிட்டுக்குருவி வந்தது.சிட்டுக் குருவிகள் சுதந்திரமாகப் பறக்கின்றன என்று நம் கவிஞர்கள் சொல்கிறார்கள். பாரதி கூட அப்படித்தான் சொல்கிறார். ஆனால் அவை என்னமோ சோற்றுக்குப் பறப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நமக்கு ஒரு அரிசி மணி என்பது அற்பமானதாக இருக்கலாம். ஆனால் அவற்றின் வயிற்றை நிறைக்க அது பெரும் சோறு”

பெரியவர் சில நிமிடம் மெளனமாக இருந்தார்.” அதிகாரிகளிடம் பேசுகிறேன். முதலில் பள்ளிக் குழந்தைகளிடம் ஆரம்பிக்கலாம். சரியாக வந்தால் அதை விரிவாக்கலாம்”

ஒருவாரம் எந்தச் சலனமும் இல்லை. இலையைக் கூட அசைக்காமல் காற்று உறங்குமே அதைப் போல ஓர் அழுத்தமான அமைதி. தகரம் போல் வெள்ளை வெயில் பொலிந்து கொண்டிருந்த ஒரு மதிய வேளையில், மோட்டார் சைக்கிளில் முதல்வர் அலுவலகத்திலிருந்து வந்த காக்கிச் சட்டை அணிந்த கனத்த மீசை வைத்த ஒருவர் கடிதம் ஒன்றைக் கொடுத்து விட்டுப் போனார்.

உறையைப் பிரிக்கும் முன் பெரியவரிடமிருந்து போன்

“உறங்கற நேரில் அழைக்கிறேனா?”

“நாம் மதியம் தூங்குவதில்லை”

“தூங்குவதாக இருந்தாலும் இனித் தூங்க முடியாது.”

“ஏன்?”

“கடிதத்தைப் பார்க்கலையா?”

“பார்த்துக் கொண்டே இருக்கிறேன்”

‘முதலமைச்சர் மதிய உணவுத் திட்டம்’ என்ற ஒன்றை அரசு தொடங்கவிருப்பதாகவும். மாநிலம் முழுதும் அதனை ஒருங்கிணைக்கும் முதன்மை ஒருங்கிணைப்பாளராக வித்யாவை  நியமித்திருப்பதாகவும், கடிதம் சொல்லிற்று. காபினெட் அமைச்சருக்கு நிகரான பொறுப்பும், அதிகாரமும், சலுகைகளும் அளிக்கப்படும் என்றும் அது சத்தியம் செய்தது.

“எப்போது வந்து பொறுப்பேற்கப் போகிறாய்?’

“என்ன, பந்தை என் பக்கம் தள்ளிவிட்டீர்கள்?”

“இது உன் மூளையில் உதித்த திட்டம். நீ பெற்ற குழந்தை. வளர்தெடுக்க வேண்டியது உன் பொறுப்பு”

வித்யா ஒரு நிமிடம் யோசித்தாள். பின் சொன்னாள்:

“மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறேன். மூன்று திருத்தங்கள் செய்தால் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்.”

“எதைத் திருத்த வேண்டும்?”

“ஒன்று: திட்டம் உங்கள் பெயரில் இருக்க வேண்டும். வெறுமனே முதலமைச்சர் திட்டம் என்றில்லாமல், முதலமைச்சர் ராஜநாயகம் திட்டம் என்று குறிப்பிடப்பட வேண்டும். இதன் பலன் உங்களுக்குக் கிடைக்க வேண்டும். வரலாற்றிலும், வாக்குச் சீட்டிலும் உங்களுக்கு முத்திரை விழ வேண்டும்”

“அட!” என்றார் பெரியவர். இந்தச் சிறிய மாற்றத்தின் மூலம் எவ்வளவு பெரிய விஷயத்தை தனக்குச் செய்து விட்டாள் வித்யா, இதனால் என்றென்றும் தமிழ் மக்களிடம் தன் பெயர் நிலைத்திருக்கும் என்பதை எண்ணிய போது அவர் மனம் நெகிழ்ந்தது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஒற்றைச் சொல்லை உதிர்த்தார்.

“அப்புறம் இரண்டாவது?”

“மதிய உணவுத் திட்டம் அல்ல. சத்துணவுத் திட்டம்”

“என்ன வித்தியாசம்?”

“ மதிய உணவு எல்லா வீடுகளிலும் உண்பது. அதைக் கொடுப்பதாகச் சொன்னால் மக்களைப் பிச்சைகாரர்களாக ஆக்கிவிட்டோம் என்று உங்கள் நண்பர் அருட்செல்வன் போர் முழக்கத்தில் எழுதுவார். திட்டத்தின் மதிப்புக் குறையும். நாம் கொடுக்கப்போவது மதிய உணவு அல்ல, சத்துணவு”

“ம். ஒரு வார்த்தைக்குள் எத்தனை வித்தியாசம்!”

“ஆம். எருமைமாடு மாதிரி நிற்கிறான் என்றால் சண்டைக்கு வருவார்கள். கட்டின பசுப் போல் இருக்கிறான் என்றால் நாணத்தோடு புன்னகைப்பார்கள்”

“கேள்விப்பட்டிருக்கிறேன், ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்”

“மூன்றாவது, இது முக்கியம். நான் கோட்டைக்கு வர மாட்டேன். எனக்கு சம்பளமும் வேண்டாம்”

“சம்பளம் கொடுக்காமல் அரசாங்கம் யாரிடமும் வேலை வாங்க முடியாது. இது சட்டம்”

“அப்படியானால் எனக்கு ஒரு ரூபாய் கொடுங்கள் போதும்”

பெரியவர் சிரித்தார். “ஏன்?”

“உங்களுக்கு கெட்ட பெயர் வராமல் இருக்கும்”

“நல்ல காரியம் செய்யப் போகிறோம். எனக்கு எப்படி கெட்ட பெயர் வரும்?”

“அரசுப் பணத்தை எடுத்து உங்கள் தோழிக்கு வாரி இறைக்கிறீர்கள், அதற்காகத்தான் இந்தத் திட்டமே என்று உங்கள் முன்னாள் நண்பர்கள் எழுதுவார்கள். ஏன் உங்கள் கணக்குப் பிள்ளையே செய்தி பரப்புவார்”

“மாற்றங்கள் செய்து விடலாம். மற்றவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்காமல் நீ வேலையை ஆரம்பி” என்றார் பெரியவர்        

அதன் பின் வேலைகள் மளமள வென்று நடந்தன. கடற்கரைச் சாலையில், அரசி விக்டோரியா கல்லூரிக்கு அருகில் இருந்த கட்டிடத்திற்கு வெள்ளை அடித்து மராமத்துப் பார்த்து சத்துணவுத் திட்டத்தின் தலைமை அலுவலகமாக மாற்றினார்கள். நல்ல நாள் பார்த்து வித்யா அந்த அலுவலகத்திற்கு வந்து சில மணி நேரம் இருந்தாள். திட்டம் பற்றிய விளம்பரங்களில் தவறாமல் பெரியவர் படம் இடம் பெற்றது.

பெரியவரின் அம்மா பிறந்த நாளன்று திட்டத்தைத் தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. கும்பகோணத்திற்குப் பக்கத்தில் உள்ள கிராமப் பள்ளிக் கூடம் ஒன்றில் தொடக்க விழா என்று முடிவாயிற்று

“திட்டத்தைத் தொடங்கி வைக்கப் பிரதமரைக் கூப்பிடலாம்” என்றாள் வித்யா

“அந்தம்மா எதற்கு?”

“இந்தியாவில் இதுவரை யாரும் செய்யாததை நீங்கள் செய்கிறீர்கள். அது இந்தியா முழுக்கத் தெரிய வேண்டும். அவர் வந்தால் அது எல்லா ஊடகங்களிலும் இடம் பெறும். இரண்டு, இந்தத் திட்டத்தின் பின் உள்ள வாக்குகளின் வலிமை அவர்களுக்குப் புரியும் ஆதலால் அவர்கள் எதிர்க்கட்சிப் பக்கம் சாய்வதைக் கனவிலும் நினைக்க மாட்டார்கள். கூட்டணி வலுப்பெறும். கூட்டணி வலுவானால் அடுத்த தேர்தலைப் பற்றி அதிகம் கவலைப் பட வேண்டாம். மூன்று, ஒருவேளை நிதி உதவி தேவைப்பட்டால் மத்திய அரசின் கதவைத் தட்டலாம்”

“சாணக்கியனுக்கு பெண் பால் என்ன?”

“எதற்கு?”

“உன்னை அந்தப் பெயரால் அழைக்கலாம் என்றுதான்”

“ நீங்கள்தான் சாணக்கியர். சந்தர்ப்பம் பார்த்து அம்மா படத்தில் சத்தியம் வாங்கிக் கொண்டீர்கள். அதுவரை நான் அரசியலை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அதன்பின் சும்மா இருக்க முடியவில்லை. ஒன்றில் நான் இறங்கினால் ஒப்புக்குச் சப்பாணியாக இருக்க மாட்டேன், சீரியஸாக எடுத்துக்கொண்டு அடித்து ஆடுவேன். அது உங்களுக்குத் தெரியும். அதை மனதில் வைத்துக்கொண்டு மகாபாரதத்தின் பக்கம் என் பார்வையைத் திருப்பினீர்கள். இவ்வளவையும் செய்து விட்டு என்னை சாணக்கியன் என்கிறீர்கள். நன்றாக இருக்கிறது உங்கள் நியாயம்!”

பெரியவர் எழுந்து கொண்டார்.

பிரதமர் வந்து இறங்கினார். தொடக்க விழாவிற்காகத் தனி விமானத்தில் மீனம்பாக்கத்தில் வந்திறங்கிய தனி விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டபோது அதிலிருந்து பிரதமருடன் இறங்கினார் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீரஞ்சனி.  

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com