3 in 1: ஆட்டோ ரிக்‌ஷா – தகவல் – உளவியல் – கதை!

Auto Rickshaw
Auto Rickshaw
Published on

தகவல்:

ஆட்டோ ரிக்‌ஷா என்ற பெயர் இந்த வாகனத்துக்கு எப்படி வந்தது?

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மருந்து கிடங்குகளிலிருந்து மருத்துவமனைகளுக்கு மருந்துகளை எடுத்துச் செல்ல கை ரிக்‌ஷாவைப் பயன்படுத்தினார்கள். ரிக்‌ஷா உரிமையாளர் அந்த ரிக்‌ஷாவை இழுத்துச் சென்று மருத்துவமனைகளுக்கு மருந்துகளை விநியோகம் செய்வதில் கால தாமதம் ஆயிற்று. அப்போதைய காலகட்டத்தில் ஒரு நோயாளிக்கு உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டிய மருந்து, இந்த வகைப் போக்குவரத்தால் உரிய நேரத்துக்குள் கிடைக்காமல் போயிற்று.  அதோடு ரிக்‌ஷா இழுப்பவர் வழியில் டீ குடிப்பது அல்லது ஓட்டலில் உணவு சாப்பிடுவது என்று செய்வாரானால் இன்னும் கூடுதல் நேரத் தாமதம் ஆயிற்று. 

இந்தப் பணியைத் துரிதப்படுத்த என்ன செய்வது என்று யோசித்தார்கள். அதன் விளைவாக மூன்று சக்கர சைக்கிள் அறிமுகமாகியது. அதாவது இதன் பெடலை மிதித்து குறைந்த உடலுழைப்பில் நெடிய தொலைவு சென்று பணியாற்ற முடிந்தது. 

அந்த காலகட்டத்தில் ஜலந்தரிலிருந்து, தொழில் நுட்பம் தெரிந்த, பல்தேவ் சிங் என்று ஒருவர் வந்தார். அவர் இந்த மூன்று சக்கர வாகனத்தில் ஒரு மோட்டாரைப் பொருத்தினார். இது நேரத்தை வெகுவாக மிச்சப்படுத்தியது. மருந்துப் பொருட்கள் மட்டுமல்லாமல், பாரம் மிகுந்த பிற பொருட்களையும் இந்த மோட்டார் வாகனம் வெகு எளிதாக சுமந்து சென்று உரிய நேரத்துக்கு முன்னாலேயே கொண்டு சேர்த்தது. 

அதனால் இந்த வாகனத்தை ‘ஆன் அர்ஜன்ட் ட்ரான்ஸ்போர்ட் ஆப்ஷன்' (An Urgent Transport Option) என்று அழைத்தார்கள். இதன் சுருக்கமே ஆட்டோ (AUTO)! நாளடைவில் இது பொதுமக்கள் சவாரி செய்யும் வாகனமாக, தவிர்க்க முடியாத அத்தியாவசியத் தேவையாக அமையும் என்று அந்நாளில் எதிர்பாத்திருக்க மாட்டார்கள், இல்லையா?

உளவியல்:

எத்தனைதான் வசதியில் வளர்ச்சி என்று ஏற்பட்டாலும், ஆட்டோ டிரைவர்களில் பெரும்பாலோர், ‘மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுக்க‘ச் சொல்லும் பழக்கத்திலிருந்து மாறவே இல்லை எனலாம். இதன் உளவியல் பின்னணி என்னவாக இருக்கும்?

இத்தனைக்கும் ஊபர், ஓலா, ராபிடோ என்று வாடகை ஆட்டோ நிறுவனங்கள் வந்து விட்டாலும், குறிப்பிட்ட தூரத்துக்கு இன்ன கட்டணம் என்ற நிர்ணயத்துக்கும் மேலே இருபது ரூபாயாவது வாங்கும் மனோநிலையிலிருந்து ஓட்டுநர்கள் வெளியே வரவேயில்லை. 

அவர்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு சவாரியும் அப்போதைக்கு முடிந்து போனதாக இருப்பதால், இவ்வாறு கூடுதலாகக் கேட்பதில் குற்ற உணர்வு இருந்தாலும், அதே நபரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பும் இல்லாததால், ஆட்டோ ஓட்டுநர்கள் கு.உ.வை உதிர்த்துவிட்டு அடுத்த சவாரியிடமும் இதே டீலிங்கில் ஈடுபடுகிறார்கள். பயணிப்பவரோ, கோபப்பட்டாலும், சண்டை போட்டாலும் தலைவிதியே என்று அடங்கி விடுகிறார். போகுமிடத்துக்கான வரைபட வழிகாட்டல் என்ற வசதி இருந்தாலும், வேண்டுமென்றே வழியை மாற்றி, கூடுதல் தொலைவு பயணித்து முடிவில் மொபைல் தெரிவிக்கும் கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கிறது பயணிக்கு. இவருடைய மொபைலிலும் அதே வரைபடம் வரும் என்றாலும், தங்களுக்கு இப்படித்தான் வந்திருக்கிறது என்று சாதித்து வழிமாறி செல்கிறார்கள் ஓட்டுநர்கள்.

இதையும் படியுங்கள்:
யார் வேண்டுமானாலும் ஆட்டோ ஸ்டாண்டு அமைத்துக்கொள்ள முடியுமா?
Auto Rickshaw

‘சிலபேருக்கு, பிறரை ஏமாற்றித்தான் பிழைக்க வேண்டும் என்று கடவுள் நிர்ணயித்திருக்கிறார். அதற்காகவாவது நம்மில் சிலபேராவது ஏமாற வேண்டாமா?‘ என்று என் நண்பர் விரக்தியாகக் கேட்டது என் நினைவுக்கு வருகிறது.

கதை:

அந்த ஆட்டோ டிரைவர் மீது எனக்குப் பெரிய மதிப்பு ஏற்பட்டது. எண்ணி மூன்று குழந்தைகள்தான் அந்த ஆட்டோவில். ஒரே பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள் போலிருக்கிறது - அவர்களுடைய சீருடை சொன்னது.

பத்துப் பதினைந்து குழந்தைகளை மூட்டைபோல அடைத்துக் கொண்டு கொஞ்சமும் பாதுகாப்பற்ற முறையில், காலை நேர போக்குவரத்துப் பரபரப்பில், பறக்கும் பல ஆட்டோக்களைக் கண்டு நான் பதறியிருக்கிறேன். போலிசாரின் எச்சரிக்கையும், கட்டுப்பாடும் இருந்தும்கூட ஆட்டோக்காரர்கள் எதையும் பொருட்படுத்துவதில்லையே என்று அவர்கள் மீது கோபப்பட்டிருக்கிறேன். வருமானம் ஒன்றையே குறியாக வைத்து இப்படி குழந்தைகளை ஆபத்தான முறையில் பள்ளிக்கூடங்களுக்கு அழைத்துச் செல்லும் அவர்களுடைய மனிதாபிமானமற்ற செயல் கண்டு கொதித்திருக்கிறேன்.

ஆனால் இவர் வித்தியாசமானவர். மூன்று குழந்தைகளையும் சௌகரியமாக அமர்த்தி, அவர்களுடைய புத்தகப் பைகள் எதுவும் வெளியே பிதுங்கித் தெரியாதவகையில், உள்ளேயே வரிசையாக வைத்து, மிகவும் கவனத்துடன் அழைத்துச் செல்லும் பாங்கைப் பார்த்து பிரமித்து போனேன். 

ஆட்டோ டிரைவர் மிகுந்த எச்சரிக்கையுடன் குழந்தைகளை வண்டியிலிருந்து இறக்கிவிட்டார். அவர்கள் ஒவ்வொருவருடைய புத்தகப் பையையும் எடுத்துக் கொடுத்தார். பிறகு, சாலையில் செல்லும் வாகனம் எதுவும் அவர்கள் மீது மோதிவிடாதபடி, தன் கைகளால் அரண் அமைத்து அவர்களை எதிர் சாரியிலிருந்த பள்ளிக்கூட வாசலுக்கே அழைத்துச் சென்று உள்ளே அனுப்பினார்.

அப்படியே திகைத்துப் போன நான், சுதாரித்துக் கொண்டு அவரைப் பாராட்ட விரும்பினேன். அவரருகே வேகவேகமாகச் சென்றேன். 

அவர் குழந்தைகளுக்கு டாட்டா காட்டினார். குழந்தைகளும் கையாட்டினார்கள்: ‘‘பை, பை டாடி…’’

அடச்சே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com