மூன்று லேபிள்கள்!

மூன்று லேபிள்கள்!

வாஷிங் மெசின், ஃபிரிட்ஜ், தொலைக்காட்சி, அலைபேசி போன்ற மின் சாதனங்கள் வாங்கும் போது யூசர் கைடும் [User Guide] சேர்த்துக் கொடுக்கின்றனரா என்று பார்த்து வாங்குவோம். இம்மாதிரி பொருட்களை கையாள உதவியாக இருக்கும் வகையில் பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றிய தெளிவான குறிப்புகள் அதில் இடம்பெற்றிருக்கும். மேலும், பருப்பு, ரவை, மருந்து, சோப் போன்ற பெரும்பாலான பொருட்களின் உறையில் குறிப்புகள் இருக்கும். இதே போல் நாம் வாங்கும் உடைகளுக்கும் பயன்படுத்தும் வழிமுறைகள் என்று ஏதாவது உண்டா, என்று கேட்டால், ஆம் நிச்சயம் உண்டு.

மிகவும் ஆசையுடன் அழகான பச்சை நிற சட்டை ஒன்று வாங்குகிறோம். அதைத் துவைத்து, வெயிலில் உலர்த்தும் போது அதிலிருந்து சாயம் போய் விடுகிறது. மேலும் அதை இஸ்திரி போடும் பொழுதும் சேதமடைந்து விடுகிறது. நாமும் மிகவும் சிரத்தையுடன் தான் அதை கையாண்டிருப்போம். ஒரே ஒரு முறை தான் உபயோப்படுத்தியிருப்போம். இருப்பினும் இவ்வாறு நடப்பதற்கு காரணம் என்னவென்றால், அந்தக் குறிப்பிட்ட உடையின் அம்சங்களை பற்றிய முழுதான விழிப்புணர்வு இல்லாததுதான் காரணம். அதை தெரிந்துகொள்வது சுலபான காரியமாகும். லேபிள் [Label] என்ற ஒன்று ஒவ்வொரு உடையிலும் இடம்பெற்றிருக்கும். சிறிய துணியாலான குறிப்பு போன்று இருக்கும். அதைத் தேடிப் படித்துப் பார்த்து வாங்கினாலே போதுமானது.

பொதுவாக லேபிள் மூன்று வகைப்படும். அவை பிராண்ட் லேபிள் [Brand label], சைஸ் லேபிள் [Size label] மற்றும் கேர் லேபிள் [Care label] ஆகும். இவையனைத்தும் தம்முடைய பேருக்கு ஏற்றவாறே செயல்படுபவை. இவை மூன்றும் இல்லாத உடை கிடைப்பது என்பது மிகவும் அரிது. நாம் எந்த பிராண்ட் உடையை வாங்குகிறோம் என்பதைப் பற்றி இதில் குறிப்பிடப்பட்டிருக்கும். எந்த அளவு உடையை வாங்குகிறோம் என்பதை சைஸ் லேபிள் கூறும். பொதுவாக இவை இரண்டும் சட்டை, டி-ஷர்ட், பனியன், குர்த்தி, நைட்டி போன்ற உடைகளின் கழுத்துப் பகுதியிலும், பாண்ட், டிராயர், பாவாடை போன்ற உடைகளில் இடுப்பு பகுதியிலும் இடம்பெற்றிருக்கும். சில சமயங்களில் இவை இரண்டும் ஒரே துணியில் அச்சடிக்கப்பட்டிருக்கலாம்.

அடுத்து இருக்கும் கேர் லேபிள் உடையில் எங்குவேண்டுமானாலும் தென்படலாம். சில சமயம் பிராண்ட் மற்றும் சைஸ் லேபிள்களுடன் சேர்ந்தே அச்சிடப்பட்டு வந்தாலும் ஆச்சரியமில்லை. காரணம், ஒரு உடையில் மூன்று லேபிள்களும் எங்கு பொருத்தப்பட வேண்டும், தனித்தனியாக இருக்க வேண்டுமா அல்லது ஒரே துணியில் மூன்றும் இடம்பெற வேண்டுமா என்பதைப் பற்றி முடிவெடுப்பது சம்பந்தப்பட்ட பிராண்டாகும். இந்த மூன்று வகை லேபிள்களில் நமக்கு மிகவும் அவசியமானது மூன்றாவதாக இருக்கும் கேர் லேபிள் தான்.

ஒரு உடையின் அம்சங்கள் மற்றும் அதைக் கையாளும் முறையைப் பற்றி எளிமையான விதத்தில் கேர் லேபிளில் எழுதப்பட்டிருக்கும். முதலில், எத்தனை சதவீதம் காட்டன், லினென், பட்டு, பாலியெஸ்டர், நைலான், அக்ரிலிக் என்று அந்த உடையில் இருக்கும் பைபர் கன்டன்ட் [Fiber content] பற்றிய குறிப்பு இருக்கும். அதைப் படித்துவிட்டு அந்த வித பைபர் கன்டன்ட் உள்ள உடை வேண்டுமா இல்லையா என்று பார்த்து வாங்கிக்கொள்ளலாம். மேலும், இஸ்திரி போடும் பொழுதும் அந்தந்த பைபருக்கு ஏற்ற மாதிரி அமைப்பை சரி செய்து இஸ்திரி பண்ணும் பொழுது உடையும் சேதமாகாமல் இருக்கும்.          

அடுத்து இதில் இடம்பெற்றிருக்கும் கையாளும் முறையைப் பற்றி பார்ப்போம். இதில் மொத்தம் ஐந்து செயல்பாடுகளைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும். எவ்வாறு துவைக்க, ப்ளீச்சிங் செய்ய, உலர்த்த, இஸ்திரி போட மற்றும் ட்ரை க்ளீனிங் செய்ய என்பதைப் பற்றிய தெளிவான அதேசமயம் சுருக்கமான குறிப்புகள் இருக்கும். இவையனைத்தும் எப்படி ஒரு சிறிய சாக்லேட் அளவு துணியில் இடம்பெற்றிருக்கும் என்று கேட்பது புரிகிறது. இவையனைத்தும் தனக்கென்று தனித்துவமான சின்னங்களுடன் குறிப்பிடப்பட்டிருக்கும்.

மேலே குறிப்பிட்டிருக்கும் சின்னங்கள்தான் அவை. துவைக்கும் முறை, ப்ளீச்சிங் செய்யும் முறை, உலர்த்தும் முறை, இஸ்திரி செய்யும் முறை மற்றும் ட்ரை கிளீனிங் செய்யும் முறை [இடமிருந்து வலம்] என ஐந்து வித செயல்பாடுகளையும் உணர்த்தும் சின்னங்கள் இவை. இவனைத்தும் அடிப்படை சின்னங்களே. இவை சிறு வேறுபாடுகளுடன் உடைகளில் இடம்பெற்றிருக்கும். அதற்கு கீழே பெரும்பாலும் ஆங்கிலத்திலும் எழுதப் பட்டிருக்கும். அவற்றின் பொதுவான விளக்கம் இதோ:

1. துவைக்கும் முறை – நீரில் துவைப்பதா வேண்டாமா, கையில் துவைப்பதா, மெஷினில் துவைப்பதா, மற்றும் நீரின் வெப்ப நிலை எத்தனை இருக்க வேண்டும் என்பதை இந்த சின்னம் உணர்த்தும்.

2. ப்ளீச்சிங் செய்யும் முறை – ப்ளீச்சிங் செய்யலாமா வேண்டாமா, அப்படி செய்தால் க்ளோரின் கன்டன்ட் உள்ள ப்ளீச்சை உபயோகப்படுத்தலாமா என்பது குறித்து சொல்லும் இந்த சின்னம்.

3. உலர்த்தும் முறை – வெயிலில் உலர்த்துவதா, நிழலில் உலர்த்துவதா, கொடியில் உலர்த்துவதா மற்றும் ஹாங்கரில் உலர்த்துவதா என்பதை பற்றி இந்த சின்னம் எடுத்துரைக்கும்.

4. இஸ்திரி செய்யும் முறை – இஸ்திரி செய்வதா வேண்டாமா, அப்படி செய்தால் ஸ்டீமுடன் செய்யலாமா மற்றும் இஸ்திரிப் பெட்டியின் வெப்ப நிலை எத்தனை இருக்க வேண்டும் என்பதை கூறும் இந்த சின்னம்.

5. ட்ரை க்ளீனிங் செய்யும் முறை – ட்ரை கிளீனிங்கில் நீருக்குப் பதிலாக ரசாயன சால்வன்ட் [chemical solvent] உபயோகப்படுத்துகின்றனர். ட்ரை க்ளீனிங் செய்ய வேண்டுமா, அதில் எந்தவித சால்வன்ட் உபயோப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி உணர்த்தும் இந்த சின்னம்.   

அடுத்த முறை உடை வாங்கும் பொழுதும், துவைக்கும் போதும், இஸ்திரி பண்ணும் போதும் பிரச்சனை கொடுத்து வரும் உடைகளில் இருக்கும் கேர் லேபிள்களை படித்து பார்த்து, அதை பராமரிக்கும் முறையை கேர் லேபிளில் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றியமைத்தால் தீர்வு கிடைத்துவிடும். சேலை, சுடிதார் மற்றும் சட்டை களுக்கான தைக்கப்படாத மெட்டீரியல் துணியில் இந்த லேபிள்கள் இடம்பெற்றிருப்பது கொஞ்சம் கடினம் தான். ஒருவேளை நீங்கள் வாங்க இருக்கும் உடையில் எந்தவொரு லேபிளும் இல்லையென்றால், அந்த உடையை வாங்கவே வேண்டாம், உங்களின் பாதுகாப்பிற்கு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com