நள்ளிரவு பன்னிரண்டு மணி என்றது ரமேஷின் வாட்ச்! அந்தத் தகரத்தாலான ஷெட், அவனுக்குப் பூதாகரமாகத் தோன்றியது! அது அமாவாசை தினமென்பதால் சந்திரன் பூரண ஓய்வில் இருக்க, அதுதான் தருணமென்று நட்சத்திரங்கள் ஆட்சி நடத்தின. இருந்தாலும் அமாவாசை இருளின் முன்னால் அவற்றின் பாட்சா பலிக்கவில்லை. அவன் இதயத்தின் ‘லப் டப்’பை அவனாலேயே கேட்க முடிந்தது. எங்கே இதயம் எகிறி, வெளியே வந்து விழுந்து விடுமோ என்ற பயமும் அவனைத் தொற்ற, அவன் அந்தப் போட்டியில் பங்கேற்றது தப்பென்று உணர்ந்தான்!
இருந்தாலும் காலங்கடந்த முடிவு அது! எல்லாம் தலைக்கு மேலே போய்விட்டது என்பதையும் அவனால் உணர முடிந்தது. அந்த உயர்ந்த ஒதிய மரத்தை நிமிர்ந்து பார்க்கும் சக்தி கூட இப்பொழுது அவனிடம் இல்லை. ஒதிய மரப் பேய்கள் பற்றி ஊருக்குள் நிலவும் ஏகப்பட்ட கதைகள் ஒவ்வொன்றாக அவன் மனதில் திரைப்படமாக விரிய, வைகை எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடிய இதயம் இப்பொழுது வந்தேபாரத் வேகத்திற்கு மாறியது!