எம்.ஜி.ஆருக்கு எப்போதும் தெய்வ பலம் இருந்தது என்பது உண்மை

அத்தியாயம் -  18
எம்.ஜி.ஆருக்கு எப்போதும் தெய்வ பலம் இருந்தது என்பது உண்மை

விமானம் ஆடிய ஆட்டத்தில் இதெல்லாம் பழக்கமில்லாத மனைவிக்கு air sickness வந்து விடுமோ என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்கையிலேயே விமானம் லாண்ட் ஆனதே தெரியாமல் தரையில் ஓடி நின்றது. எங்களை வரவேற்ற என் நண்பர்கள் என்னிடம் உங்களுக்கு நாளை தான் வண்டி ஏற்பாடு செய்திருக்கிறோம். இன்று மோகன் ராவ்காரு வீட்டில் நீங்கள் தங்குகிறீர்கள். இன்று உங்கள் திருமணத்தைக் கொண்டாட அவர் Trivandrum English Club இல் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறார். அவர் குடும்பத்துடன் உங்களைக் கூட்டிக்கொண்டு வந்து விடுவார். நாங்களும் எல்லோரும் குடும்பத்துடன் வருகிறோம் என்றனர்.

திருப்பதியில் என் ஆசானாக இருந்த ராவ்காருவையும் அவரது அன்பான குடும்பத்தினரையும் மறுபடியும் சந்திக்கப் போகிறோம் என்ற உற்சாகத்தில் நான் அவர்களைப்பற்றி விலாவாரியாகச் சொல்லி முடிப்பதற்குள் வீடு வந்து விட்டது. ராவ்காருவும் அவரது மனைவியாரும் போர்டிகோவில் நின்று எங்களுக்கு முகமன் கூறிக் கொண்டே இருக்கும்போது அவர்கள் வீட்டு டைகர் என்ற St Bernard ரக நாய் என் மீது தாவியது. திருப்பதியில் குட்டியாக என்னுடன் பல மாதங்கள் விளையாடிய டைகர் மிகப் பெரிதாக வளர்ந்து விட்டதால் எனக்கு அடையாளம் தெரியவில்லை.  என்னை அடையாளம் கண்டு ஆர்வமுடன் ஓடிவந்து அதன் வழியில் குலைத்தபடி அன்பைத் தெரிவித்த அந்தப் பிராணியின் பேய் போன்ற முகத் தோற்றத்தைக் கண்ட என் புது மனைவி பயந்து விட்டாள். அந்தக் குடும்பம் ஸ்வாதீனமாகப் பழகியதைக் கண்டு சற்று நேரத்தில் சகஜமாகிவிட்டாள். 

 டின்னரில் ஆண்கள் பார் கவுண்ட்டரிலும் பெண்கள் லவுஞ்சிலும் ஆரவாரத்துடன் அரட்டை அடிக்கையில் என் மனைவி மட்டும் கலகலப்பாக இல்லாததைக் கவனித்து நான் அந்தப் பக்கம் போனவுடன் ராவ் காருவின் மனைவி என்னைக் கேலி செய்து இவன் சரியான பூஜாரி. தண்ணி அடிக்கமாட்டான். தட்டு தட்டாக பக்கடா மட்டும் சாப்பிடுவான் என்று சொல்லவே நிம்மதியான என் மனைவியின் முகபாவத்தைக் கவனித்த நான்  நண்பர்களுடன் மறுபடி சேர்ந்து கொண்டேன். 

ஒரு வழியாக நாங்குநேரி வந்து சேர்ந்து தாத்தாவிடம் ஆசி பெற்றுக்கொண்டு என் மனைவிக்கு ஏற்கெனவே பழக்கமான என் சித்தி எங்கள் ஊர் வழக்கப்படி ஏற்பாடு செய்திருந்த “வைத்துப் பாடல்” நிகழ்ச்சிக்குத் திரண்டு வந்திருந்த சுமங்கலிகளின் ஆசிகளையும் பெற்றுக் கொண்டு என் திட்டப்படி மதுரை வந்து அங்கும் நண்பர்கள் அன்பைப் பெற்றுக் கொண்டு கொடைக்கானல் தேன்நிலவுக்குப் போகலாம் என்று கிளம்பியபோது நாலைந்து நாட்களாக விதவிதமான அன்புத் தொல்லைகளில் சிக்கிச் சின்னாபின்னமாகி இருந்த என் மனைவியின் நிலைமையைப் பார்த்து இனி ஹனியாவது மூனாவது என்று மெட்ராஸுக்கே ஃப்ளைட் ஏறிவிட்டோம்.

இதற்கப்புறம் என்னுடைய இத்தனை வருட ஏர்லைன்ஸ் அனுபவத்தில் ஓட்டல்களில் பார்ட்டிக்கு என் மனைவி வர சம்மதித்ததே இல்லை. ஏர்லைன்ஸ் நண்பர்கள் வீட்டுக் கல்யாணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு மட்டும் வந்து கலகலப்பாகக் கலந்து கொள்வாள். அன்று போகாத கொடைக்கானலுக்கும் பல வருடங்கள் கழித்து பள்ளி மாணவர்களாக இருந்த என் குழந்தைகளுடன் தான் போனோம். 

அப்பா வீட்டில் போதிய ஓய்வெடுத்த  பிறகு மறுபடியும் என் மனைவி தன் ஊரான ஸ்ரீரங்கத்துக்குக் கிளம்ப ஆயத்தமாகி மறுபடியும் விமானப் பயணம். இந்த முறை விமானத்தில் ஏற வந்து கொண்டிருந்த எங்களைப் பார்த்து விட்ட விமானி தன் ஜன்னலைத் திறந்து ‘ஹேய் கோபால்’ என்று கை அசைத்தார். காக்பிட்டில் விமானியின் சைடு ஜன்னல்களை மட்டும் திறந்து மூட முடியும். கேப்டன் அடிக்கடி திருப்பதி தரிசனத்திற்கு வரும் அஸ்ஸாம் காரர். ஆகவே, முன் வழியாக ஏறி அவருக்கு ஹலோ சொல்லி விட்டுப் பேசிக்கொண்டிருந்தபோது அந்த விமானத்தின் ஃப்ளைட் ஸ்டீவர்ட் நாராயணன் என் பக்கத்து ஊர்க்காரர் என்பதால் என் மனைவியிடம் சகஜமாகப் பேசி ஸீட்டில் அமரவைத்தார். பைலட்டுக்கு அதற்குள் புறப்பட நேரமாகி விட்டதால் பிஸியாகி விட்டார்.

விமானம் பறக்க ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே பைலட் எங்களைக் கூப்பிட்டு தங்கள் பின்னால் இருக்கும் இரண்டு பயிற்சி விமானிகள் அமரும் ஜம்ப் ஸீட்டுகளில் அமரவைத்துக் கொண்டு என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தபோது தன் ஊர் ஸ்ரீரங்கம் என்று சொல்லவே குஷியாகி இந்த வழியாக வரும்போதெல்லாம் ஒரு நாள் போகவேண்டும் என்று நான் நினைத்துக் கொள்ளும் அழகான ஊர். இன்று இறங்கும்போது நாம் ஸ்ரீரங்கம் வழியாகவே போகலாம் என்று சொல்லி கண்ட்ரோல் டவரிலும் அனுமதி வாங்கி விட்டார்.

திருச்சியில் ராடார் கிடையாது. எனவே, வழக்கமான பாதையிலிருந்து விலகினால் டவருக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும். தூரத்தில் இரண்டு நதிகளிடையே தெரிந்த ஸ்ரீரங்கத்தை நோக்கி எங்கள் விமானம் இறங்க ஆரம்பித்தபோது உங்கள் ஊர் தெரிகிறதா என்று என் மனைவியிடம் கேட்டு ஊர்ஜிதம் செய்துகொண்ட பிறகு இப்போது ஊருக்கு மேலாகவே கொண்டு போகிறேன் உங்கள் வீட்டை அடையாளம் தெரிகிறதா என்று பாருங்கள் என்று பக்கத்தில் போனதும் இப்போது தெரிகிறதா என்று கேட்டதற்கு இல்லை என்று என் மனைவி சொல்லிவிடவே we will take a circle now, see if you can spot என்று சொல்லிச் சட்டென்று விமானத்தைத் திருப்பவே இதுவரை ஒழுங்காகத் தெரிந்து கொண்டிருந்த ஸ்ரீரங்கம் ஊர் திடீரென்று எழுந்து நின்றது. விமானம் திரும்பும் போது தரை அப்படித்தான் தென்படும். இது தெரியாமல் பயந்து கண்ணை மூடிக்கொண்டு விட்ட என் மனைவியிடம் “வீடு தெரிந்துவிட்டது என்று சொல்லி விடு இல்லாவிட்டால் இன்னொருதரம் விமானத்தைச் சரித்து விடுவார்“ என்று சொன்னேன். “தெரிகிறது“ என்று அவள் சொன்னவுடன் விமானம் நேராகிச் சில நிமிடங்களில் திருச்சி ஏர்போர்ட்டில் இறங்கி நின்றது.

அங்கும் என் நண்பர்கள் எங்களை வரவேற்று வழியனுப்பி வைத்தனர். ஊருக்குப் போகும் வழியில் ‘தான் படித்த கல்லூரி, தான் குளித்த ஆறு‘ என்று சந்தோஷமாகக் காண்பித்துக் கொண்டு வந்த  என் மனைவி தாத்தா பாட்டியைப் பார்த்ததும் கூடுதல் சந்தோஷத்துடன் கலகலப்பாக மாறிப் போனாள். எப்போதும் தூரத்தில் போகும் ஏரோப்ளேன் இன்று நம் ஊருக்கு மேலேயே போனபோதே, “இன்று நீ அதில் வருவதால்தான்“ என்று நினைத்தேன் என்று சொல்லிக் கொண்டிருந்த வீட்டுப் பெண்களிடம் “நம் வீட்டை எனக்குக் காட்டத்தான் பைலட் அப்படிச் செய்தார்” என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்த என் மனைவி சிறிது நேரம் கழித்து எங்கள் தோட்டத்தைப் பார்க்கலாம் வாருங்கள் என்று எதிரேயுள்ள தென்னந்தோப்புக்கு என்னை அழைத்துப் போனாள். உள்ளே நுழைந்தவுடனேயே பயமுறுத்தும் கொம்புகளுடன் தலை தெறிக்க என்னை முட்டுவதற்கு ஒரு மாடு ஓடி வந்தது. 

“என்னை முட்டுவது போல ஓடிவந்த மாடு என் மனைவியிடம் வந்து சாதுவாக நிற்கவும் அவள் அதன் கழுத்தை வருடவும் கடைசியில் பார்த்தால் சில வருடங்களுக்கு முன் தான் வளர்த்த பசுங்கன்று பெரிதாக வளர்ந்து தன்னைப்பார்த்ததும் பாசத்தோடு எப்படி ஓடி வந்திருக்கிறது பாருங்கள்” என்று பெருமைப் பட்டுக் கொண்டாள். 

ஸ்ரீரங்கத்திலிருந்து என் குடும்பம் இருந்த ஊட்டிக்குப் பயணப்பட்டோம். புதிதாக வீட்டுக்கு வந்த அண்ணியைக் கொண்டாடிக் குதூகலப்பட்டார்கள் என் உடன் பிறந்தவர்கள். அந்த எட்டுப் பேரையும் கூட்டிக்கொண்டு ஊட்டியில் ஹனிமூன் ஜோடிகள் போகும் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தோம். இப்படிக் கூட்டமாக ஊட்டியில் சுற்றிய முதல் புதுமணத் தம்பதி நாங்களாகத்தான் இருக்க முடியும் என்றாலும், எங்கள் வீட்டுப் வாசல் புல் வெளியில் வெயில் காய்ந்து கொண்டு அங்கிருந்து தெரியும் ஊட்டியின் காட்சிகளை ரசித்துக்கொண்டே அரட்டை அடித்தது என் மனைவிக்கு ரொம்பவே பிடித்துப் போனது. 

என் லீவ் முடிந்து விடவே நாங்கள் என் இடமான திருப்பதிக்கு வந்து சேர்ந்து விட்டோம். என் உடன் பிறவாச் சகோதரர் வீட்டுக்கு ஏற்கெனவே குடிபோயிருந்ததால் அவர்கள் வீட்டு இளைய மாட்டுப் பெண்ணாகவே வரவேற்ற அவர்கள் குடும்பத்தில் என் மனைவியும் இயல்பாகவே ஒன்றி விட்டாள். 

ஒரு சில மாதங்களிலேயே எனக்கு எங்கள் ஹைதராபாத் டிரெய்னிங் காலேஜில் இரண்டுவாரக் கோர்ஸ் வந்தது. அங்கே தாய் வீட்டுக்குப் போயிருந்த மனைவியையும் கூட்டிக்கொண்டு போய் சிகந்திராபாதில் குடியிருந்த என் தாய்மாமன் குடும்பத்தினருடன் தங்கி அந்த ஊரைச் சுற்றிக் காட்டலாம் என்று தீர்மானித்து சென்னை ஹைதராபாத் வழியாக டெல்லி செல்லும் காலை விமானத்தைப் பிடித்தோம். அன்று 17.12.1978 புரட்சித் தலைவர் MGR விமான விபத்திலிருந்து தப்பிய நாள். முதல் மந்திரி எம்.ஜி.ஆர். அன்று டெல்லியில் நடக்கும் முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக எங்களுடன் இதே விமானத்தில் வருகிறார் என்று கேட்டதும் என் மனைவிக்கு ஒரே சந்தோஷம். அவர் இதுவரை எம்.ஜி.ஆரை நேரில் பார்த்ததில்லை. விமானம் மேலே சென்றதும் அவரிடம் அழைத்துப் போகிறேன். வணக்கம் என்று சொல்வோம் அவர் எல்லோருடனும் நன்கு பேசுபவர்தான் என்ற போது என் மனைவி சங்கோஜத்துடன் அதெல்லாம் வேண்டாம் என்று விட்டார்.

 எப்போதுமே முதலில் ஏறினால் தான் பெரிய கைப்பைகள் வைப்பதற்கு இடம் கிடைக்கும். (இப்போதும் அதே கதை தான்) ஆதலால் சீக்கிரமாகவே விமானத்திற்கு உள்ளே ஏறிவிட்டோம். பின் பகுதியில் எங்கள் இருக்கை. கடைசியாக வந்த முதல்வர் எம்ஜிஆர் முதல் வரிசையில் வந்து அமர்ந்து கொண்டார். விமானமும் குறித்த நேரத்தில் கிளம்பியது. ஹைதராபாதுக்கு ஒரு மணி நேரம்தான் பயணம். இறங்க ஆரம்பித்த போது காலநிலை சரியில்லாததால் விமானம் ஒரே ஆட்டம். ஹைதராபாத் ஏர்போர்ட்டில் இரண்டு முறை வட்டமடித்தும் எங்களால் இறங்க முடியவில்லை. ஒரே மேகமூட்டம். எனவே விமானம் சென்னைக்கே திரும்பி விட்டது. 

இதெல்லாம் என் மனைவிக்கு முதல் முறை. ஆகவே அவருக்கு ஏர் சிக்னஸ்  வந்துவிட்டது. எல்லோரும் சென்னையில் வந்து இறங்கி டெர்மினல் போய் விட்டோம். ஹைதராபாதில் காலநிலை சரியான பிறகு விமானம் கிளம்பும் என்று செய்தி வந்தது. எல்லோருக்கும் காப்பி டீ வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து விமானம் ரெடி என்று எங்களை ஏறச் சொன்னார்கள். எம்ஜிஆர் மட்டும் சகுனம் சரியில்லை என்று டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டுப் போய்விட்டார் என்றார்கள். (நல்ல வேளை தப்பித்தார்)

 எங்கள் விமானமும் மறுபடியும் கிளம்பி இம்முறை ஹைதராபாதில் ஒரு பிரச்னையுமின்றி சாதாரணமாகவே இறங்கியது.  எங்களுக்கு கைப்பை மட்டும் தான் என்பதால் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்தோம். ரோட்டில் போலீஸ்காரர்கள் எங்கள் வண்டியை ஓரம் கட்டி விட்டார்கள். ஆந்திர முதல் மந்திரி சென்னா ரெட்டி விமானம் ஏறுவதற்காக வேகமாக எங்களை எதிரே கடந்து  சென்றார். அவரும் அதே முதல்வர்கள் மாநாட்டுக்குத் தான் போகிறார் போல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

செகந்திராபாத் மெஹ்பூப் காலேஜ் அருகே இருந்த மாமா வீட்டில் நாங்கள் சரியாக உட்காரக் கூட இல்லை. “சென்னா ரெட்டி விமானம் மெயின் ரோடில் விழுந்து விபத்து. ஃபயர் என்ஜின்கள் போய்க் கொண்டிருக்கின்றன“ என்று பதட்டத்துடன் என் மாமா பையன் வந்து சொன்னான். ஐயையோ அதில் தானே நாங்களும் வந்தோம் என்று என் மனைவி கத்திக் கொண்டே இருக்க நான் என் கேமராவை எடுத்துக் கொண்டு ஒரு ஆட்டோவைப் பிடித்து ஏர்போர்ட்டுக்கு ஓடினேன். 

 நிஜம்தான். நாங்கள் வந்த விமானம் ஹைதராபாதில் இருந்து டேக் ஆப் ஆகும்போது விழுந்து எரிந்து கொண்டிருக்கிறது. தூரத்தில் புகை மண்டலம் எனக்கே தெரிந்தது. கண்ட்ரோல் டவர் அதிகாரி சாம்பசிவராவ் என் நண்பராதலால் நேரே டவருக்குத்தான் ஏறிப் போனேன். ஏர் போர்ட் மூடப்பட்டு விட்டது என்ற செய்திகளை அனுப்பிவிட்டு  ஜீப்பில் வந்த சாம்பசிவராவுடன் விபத்துக்குள்ளான விமானத்துக்குப் போனோம்.  விபத்து நடக்கும்போது டவரில் டூட்டியில் இருந்த சுந்தரமும் உடன் வந்தார். (பிற்காலத்தில் இவர் இந்தியன் ஏர்லைன்ஸில் ஒரு பெயர் பெற்ற பைலட் ஆகவும் ஆனார்)

இரண்டு சூட்கேசுகளில் கட்டுக் கட்டான பணம்  பாதி எரிந்த நிலையில். 

 புகைந்து கொண்டிருந்த விமானத்திற்குச் சென்றதும் நல்ல வேளையாக யாருக்கும் அடிபடவும் இல்லை உயிர் சேதமும் இல்லை என்று தெரிந்து கொண்டேன். விமானம் கிராஷ் ஆனதும் எல்லோரும் எமர்ஜென்சி எக்ஸிட்களில் இறங்கி விட்டதனால் தெய்வாதீனமாகத் தப்பித்து விட்டிருக்கிறார்கள்.  விமானத்தின் வால் பகுதியில் பற்றிய தீ வேகமாகப் பரவி விமானம் முழுவதும் எரிந்து கொண்டிருந்தது. நான் கையில் கேமரா வைத்திருந்ததால் புகைப்படங்கள் எடுத்தேன். விமானம் விழுந்த இடம் ரன்வே முடிவில் இருக்கும் ஓர் பிஸியான மெயின் ரோடு அருகில் என்பதால் இறங்கின பயணிகள் அவரவர்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டைப் பார்க்கப் போய் விட்டார்கள். முதல்வர் சென்னா ரெட்டியும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று பக்கத்து ரோட்டில் வந்த கவர்ன்மெண்ட்டு வண்டியில் ஏறிப் போய் விட்டார். 

 ஏர்போர்ட்டில் எல்லோரும் தலையைப்  பிய்த்துக் கொண்டிருந்தார்கள். வழியனுப்ப வந்தவர்கள் தங்கள் உறவினர்களைத் தேடிக் கொண்டிருக்க அவர்களோ நேரே வீட்டுக்குச் சென்று விட்டிருக்கிறார்கள். மிகச் சிலரே எங்கள் ஏர்போர்ட் பஸ்ஸில் ஏர்போர்ட்டுக்குத் திரும்பி வந்தார்கள். ஆகவே ஒரே குழப்பமோ குழப்பம். ஆளாளுக்கு கத்திக் கொண்டிருந்தார்கள். 

உயிர் சேதம் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தோம் அல்லவா? எரிய ஆரம்பித்த விமானத்திற்குள் தன் கைப்பையை எடுக்க மற்றவர்கள் தடுத்தும்  கேட்காமல் ஏறி உள்ளே போனவர் ஒருவர் மட்டும் தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பிறகு இறந்தும் விட்டார். 

வெந்து தணிந்த விமானத்தில் இருந்து கிடைத்த வரையில் பயணிகளின் பெட்டிகளை இறக்கியதை விமான விபத்தைப் பற்றிய என்குயரி முடிந்தபிறகு பயணிகளுக்கு கொடுத்தார்கள். நான் எடுத்த படங்களும் பிரிண்ட் போட்டு என்குயரியில் எடுத்துக் கொண்டார்கள். 

இது அப்போது பேப்பரில் பரபரப்பாக எங்கும் செய்தி ஆகி பிறகு பல காலங்கள் விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம்.  எரிந்த விமானத்தில் இருந்து பயணிகளின் உடைமைகளை எடுத்த போது இரண்டு சூட்கேசுகள் கட்டுக் கட்டான பணத்துடன் பாதி எரிந்த நிலையில் கிடைத்ததை எங்கள் ஏர்லைன்ஸ் ஆபீஸில் வைத்திருந்தார்கள். ஏன் யாருமே அவற்றுக்கு உரிமை கோரவில்லை என்பதுதான் அன்று மக்கள் மத்தியில் எழுந்த பெரும் பேச்சு. 

எம்.ஜி.ஆருக்கு எப்போதும் தெய்வ பலம் இருந்தது என்பது உண்மை. அதுவும் அவர் அப்போதுதான் கட்சி தொடங்கி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றிருந்த சமயம்.. ஏதாவது ஆயிருந்தால்…….. நினைக்கவே பயமாக இருந்தது. ஆனால் ஒன்று, ஒருவேளை அவர் அன்று திரும்ப விமானத்தில் ஏறி இருந்தால் அவரது அதிர்ஷ்டத்தினால் இந்த விமான விபத்து கூட நடந்திருக்காதோ என்னவோ. 

(பயணத்தின் பகுதி ஒன்று நிறைந்தது )

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com